மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

2021 தேர்தலும், ஜெ., கலைஞர் இல்லாத பிரச்சார களமும்...!

2021 தேர்தலும்,  ஜெ., கலைஞர் இல்லாத பிரச்சார களமும்...!

தமிழகத்தில் தேர்தல் என்றால் இருபக்கமும் கயிறு இழுக்கும் போட்டிபோல் ஒருபக்கம் அதிமுக எதிர்முனையில் திமுக இந்த இருவரிடையேதான் போட்டிநிலவும்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன.இருவரிடையேதான் இறுதிகட்ட போட்டி என்றாலும் இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கூடவே புதிய தமிழகம் பனங்காட்டு படை கட்சி என பல அணிகள் களத்தில் இறங்கியுள்ளன.

தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் என்றால் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனத்த குரலில் மக்களால் நான் மக்களுக்காக நான் என பேசி ஓட்டு கேட்கும் ஜெயலலிதா, இந்த தேர்தலில் இல்லை. இக்கட்சிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல பலம் சேர்த்து மக்களால் அறியப்படும் ஒரு விஐபியாகி விட்டார். கூடவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இக்கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பாஜக மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

இந்த தேர்தலில் திமுக, கலைஞர் இல்லாமல் மக்களை சந்திக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம், தானாக வரும் மக்கள் கூட்டமாகவே இருக்கும். உடன்பிறப்பே..தமிழர்களே..என்று அவர் அழைக்கும் போதே பலத்த கரகோஷம் வரும்.இந்த தேர்தலில் கலைஞர் இல்லை. இந்த கூட்டணிக்கு சளைக்காமல் சுத்தி சுத்தி வந்து ஓட்டுகேட்கும் இந்திய கம்யூனிஸ்ட் த.பாண்டியன் இல்லை. எளிமையாக வட்டார தமிழில் எதார்த்தமாக பேசும் நல்லகண்ணு வரவில்லை. மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த கூட்டணியில் ஓட்டுகேட்க ராகுல் வந்தார். பிரியங்கா வரமுடியாமல் போனார்.

அ.ம.மு. கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதுதவிர வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் உள்ளனர். சில தொகுதிகளில் நடிகர், நடிகைகளும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் 234 தொகுதிகளிலும் ஒவ்வொரு வேட்பாளரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விடுபட்டு போன பகுதிகளுக்கு சென்று தற்போது ஓட்டு கேட்டவர்கள் இந்ததேர்தலில் புதுமையாக இஸ்திரி போட்டு ,தோசைசுட்டு,வயலில் நாத்துநட்டுக்கொடுத்தெல்லாம் ஓட்டு கேட்டது பலரையும் நகைக்க வைத்தது.

பிரசாரத்தின் கடைசி நாளான நாளை (4-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர். டிவி தேர்தல் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பரப்புரைக்கு தடைவிதித்துவிட்டது தேர்தல் ஆணையம்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் முடிவடைந்ததும் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதன்பிறகு போலீசார் துணை ராணுவப் படையினர் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். என்னதான் கருத்துகணிப்புகள் நடைமுறையில் இருந்தாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வாக்களர்களே.

-சக்தி பரமசிவன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 3 ஏப் 2021