மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

திருப்பரங்குன்றம்: உடன்பிறப்புகளை கவனிக்கும் ராஜன் செல்லப்பா?

திருப்பரங்குன்றம்: உடன்பிறப்புகளை கவனிக்கும்  ராஜன் செல்லப்பா?

மதுரை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கேட்ட மதுரை மேற்கு, மதுரை கிழக்கு போன்ற தொகுதிகளை திமுக எடுத்துக்கொண்டு, திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்கினார்கள். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் போட்டியிட்டு 15000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் போஸிடம் வெற்றியை பறிகொடுத்தார் .

இந்த தேர்தலில் கட்சியின் முழு நேர ஊழியர் பொன்னுதாய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது மதுரை அரசியல் வட்டாரமே ஆச்சரியப்பட்டது. சாதாரண ஆட்டோ தொழிலாளியின் மனைவிதான் பொன்னுதாய். இதுவே திருப்பரங்குன்றம் தொகுதி வாக்களர்களிடம் தன் எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது அதனால் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலம் பற்றி கவலைப்படவில்லை

அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா கடந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அங்கிருந்து மாறி திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார்.அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவான ஏ.கே.போஸ் இறந்ததால் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் ஆளும்கட்சி அதிகாரம் பலம், பணத்தைத் தாண்டி வெற்றி பெற்றார். அவர் இப்போது பாஜகவுக்குப் போய் அங்கே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக 8 முறை வெற்றி பெற்ற திருப்பரங்குன்றத்தில் இருந்து அதிமுகவை அப்புறப்படுத்துவோம் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் சூளுரைக்க வேட்பாளர் பொன்னுதாய்க்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்

பொன்னுதாய்க்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தை தொடங்கியபோதுதான் ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதை போல தேர்தல் என்றாலே வேட்பாளரிடம் கட்டிங் போட்டு பழகிய கட்சி நிர்வாகிகள் செலவுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே பிரச்சாரத்துக்கு வருவோம் என கூறிவிட்டனர். இப்படியொரு நெருக்கடியை எதிர்பார்க்காத தோழர்கள் பொதுமக்களிடம் வசூலித்ததேர்தல் நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை திமுக நிர்வாகிகளுக்குகொடுத்த பின்னரே ஒத்துழைப்பு கிடைத்து. முதல் கட்ட பிரச்சாரம் முழுமையாக நடந்து முடிந்தது என்கிறார்கள் தோழர்கள்.

தொகுதிக்குள் கழக உடன்பிறப்புகளிடம் பேசியபோது, “இந்த தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலில் டாக்டர் சரவணன் போட்டியிட்ட போது பணம் தண்ணீராய் பாய்ந்தது திமுக வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் ஒரு மாதம் எங்கள் செலவுக்கு பணம் கிடைத்திருக்கும். கம்யூனிஸ்டுகள் ஓட்டுக்கு பணமும் தர மாட்டார்கள் செலவும் செய்ய மாட்டார்கள் அவர்களை போல கொள்கைக்காக உழைக்கும் சூழல் எங்களிடம் இல்லை. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிகொள்ளும் முயற்சியில் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா தீவிரமாக உள்ளார்”என்கிறார்கள்.

தோழர்களிடம் பேசியபோது, “இது வழக்கமான தேர்தல் இல்லை கரன்சியை வைத்து களமாடும் தேர்தலாக இருக்கிறது. அதைத்தான் அதிமுக தரப்பில் செய்து வருகின்றனர். திமுக-அதிமுக தேர்தல் வாக்குறுதியை கடந்து, வீட்டுக்கே வந்துசேரும் வாக்குக்கான கரன்சியை ஒதுக்கிவைத்து கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் சாமான்ய மக்கள் அனுபவித்து வரும் சிரமங்கள், பாஜக ஆட்சியின் அடிமைகளாக அதிமுக ஆட்சி நிர்வாகம் மாறியது, அதன் காரணமாக பறிபோன மாநில உரிமைகள் என மக்களிடம் கூறி வாக்கு கேட்டு வருகிறோம். இந்த தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையாக களப்பணியாற்றி வருகிறார்கள் எங்கள் தோழர்கள்” என்கிறார்கள்.

தளபதியை முதல்வராக்க திருப்பரங்குன்ற வெற்றியும் இன்றியமையா தேவை என்பதை உடன்பிறப்புகளுக்கு உரக்க சொல்லப்போவது யார்?

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 3 ஏப் 2021