மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

அணிவகுக்கும் கருத்து கணிப்புகள்... வந்ததும் தந்ததும் ஒன்றுதானா?

அணிவகுக்கும் கருத்து கணிப்புகள்... வந்ததும் தந்ததும் ஒன்றுதானா?

‘‘இது கருத்து கணிப்பு இல்லை; கருத்து திணிப்பு!’’

எல்லாத் தேர்தல்களின்போதும் வருகிற டயலாக்தான். ஆனால் சொல்கிற நாக்குகள்தான் தேர்தலுக்குத் தேர்தல் வேறாகின்றன. எந்தக் கட்சிக்கு ஆதரவாக வருகிறதோ, அந்தக் கட்சியினருக்கு அது கருத்துக் கணிப்பு; எதிராக வந்தால் அது கருத்துத் திணிப்பு. உண்மையை ஒப்புக்கொண்டு களத்தை எதிர்கொள்கிற பக்குவம், நம் அரசியல் தலைவர்களுக்கு மட்டும் இல்லையென்று சொல்லமுடியாது; அமெரிக்காவில் இருக்கிற அரசியல் தலைவர்களுக்கே அந்தப் பக்குவம் இல்லை. உலகம் முழுக்க அரசியல்வாதிகளுக்கு ஒரே மனசு!.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், நேற்று வரையிலும் பத்திரிக்கைகளிலும், காட்சி ஊடகங்களிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்தத் தேர்தலுக்கு முக்கியமான ஊடகங்கள் எடுத்துள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், திமுக ஆட்சிக்கு வரும் என்பதையும், அடுத்த முதல்வராக ஸ்டாலின்தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதையும் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பிப்ரவரி இறுதியில் துவங்கி, மார்ச் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரம் வரையிலும் எடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவின் அரசியல் துறவறம், திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள், வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளை அறிவதற்கு முன்பே, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காரணிகளால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தாது; அவ்வளவு பெரிய அரசியல் நிகழ்வு ஏதும் நடக்கவில்லை; இனியும் நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் இந்த கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களின் கருத்தாக இருக்கிறது.

கணிப்புகளின் அணிவகுப்பு!

பெரும்பாலான தேர்தல்களில் ஓரளவுக்கு வெற்றியைச் சரியாகத் தீர்மானித்துள்ள சி–வோட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்புதான் முதன் முதலில் வெளியாகி, தமிழக அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த நிறுவனத்தின் கணிப்பில், திமுகவுக்கு 161 லிருந்து 169 வரையும், அதிமுகவுக்கு 53லிருந்து 63 வரையும் இடங்கள் கிடைக்குமென்று கூறப்பட்டிருந்தது. அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 34.6 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும் கிடைக்குமென்று கணிக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக டைம்ஸ் நவ்–சி வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், திமுகவுக்கு 177 இடங்களும், அதிமுகவுக்கு 49 இடங்களும் கிடைக்குமென்று கூறப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை முறையே 181 ஆகவும், 53 ஆகவும் உயரவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டது. இதற்கு முந்தைய பல தேர்தல்களிலும், ஏறக்குறைய மக்களின் மனநிலையை டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புகள் துல்லியமாகப் பிரதிபலித்திருக்கின்றன என்பதன் அடிப்படையில், இதுவும் திமுகவினரிடத்தில் உற்சாகத்தையும், ஆளும்கட்சியில் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த கருத்துக் கணிப்பு வெளியானபின், ‘பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தவறான தகவலை மக்களிடம் பரப்புகின்றன’ என்று முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்திருந்தார்.

புதிய தலைமுறை சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணிக்கு 151லிருந்து 158 வரையிலான இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 76லிருந்து 83 இடங்களும் கிடைக்குமென்று கூறப்பட்டது. மாலை முரசு சேனல் கருத்துக்கணிப்பு, திமுக கூட்டணிக்கு 151 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிக்கு 54 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்குமென்று கூறியது. 27 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகக் கூறியது மாலைமுரசு. இப்படியாக அடுத்தடுத்து அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு மட்டும் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி, ஆளும்கட்சியினரை ஆனந்த அலையில் மிதக்க விட்டது. அந்தப் பத்திரிக்கையில் கருத்துக் கணிப்பில், அதிமுக கூட்டணிக்கு 125 இடங்களும், திமுக கூட்டணிக்கு 109 இடங்களும் கிடைக்குமென்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதே கருத்துக்கணிப்பில், அடுத்த முதல்வராக யார் வரவேண்டுமென்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் ஸ்டாலின் என்றும், 41 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி என்றும் பதில் கூறியிருப்பதாகச் சொல்லியிருப்பதுதான் ஆச்சரியமான முரணாகப் பார்க்கப்பட்டது.

கடைசியாக தந்தி டிவியின் கருத்துக் கணிப்பு வெளியானது. ஆளும்கட்சி ஆதரவு ஊடகமாகக் கருதப்படும் அதிலும் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 52 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டதால் தமிழக அரசியலில் அதிர்வலைகள் உருவாகின. திமுகதான் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் என்று முதலில் தெளிவாகக் கூறிய அந்த கருத்துக் கணிப்பு, 58 தொகுதிகளில் கடும் போட்டி இருப்பதாகக் கூறி, தமிழக மக்களைப் பெரும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணியில் ஆளும்கட்சியின் அழுத்தம் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதே தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், திமுக 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும்; 30 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது என்று கூறப்பட்டது. அப்போது வெளியான கருத்துக்கணிப்பு ஒளிபரப்பில், ‘முதலில் 40க்கு 0 என்றிருந்த நிலை மாறி 30 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி tough fight கொடுக்கிறார்’ என்று கூறப்பட்டது. அதேபோல வாக்குப்பதிவு முடிந்த பின் எடுக்கப்பட்ட exit poll கணிப்பிலும் திமுக கூட்டணிக்கு 19 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 6 இடங்கள், 14 இடங்களில் இழுபறி என்றே கூறப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்றது. அதைச்சுட்டிக்காட்டி, தற்போது தந்தி டிவி வெளியிட்டுள்ள இழுபறி என்பதையும் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டுக்கொள்ளுமாறு பலரும் விமர்சித்துள்ளனர்.

இதற்குப் பின், மிகச்சமீபமாக ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு வெளியானது. திமுக கூட்டணிக்கு 163 இடங்களும், அதிமுகவுக்கு 53 இடங்களும் கிடைக்குமென்று கூறியது அந்தக் கருத்துக் கணிப்பு. இவற்றைத் தவிர்த்து, ‘டெமாக்ரசி டைம்ஸ் நெட்வோர்க்’ உள்ளிட்ட பல்வேறு இணைய தள ஊடகங்களும் திமுக கூட்டணியே வெற்றி பெறுமென்று கூறியுள்ளன. இதனால் ஆளும்கட்சியினரே, இந்த கருத்துக் கணிப்புகளை எதிர்த்துக் கருத்துக் கூறுவதை நிறுத்திவிட்டனர்.

தமிழகத்தில் இத்தகைய சர்வேக்களை நடத்திக் கொடுக்கும் மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலரிடம் இது குறித்துப் பேசினோம்...

‘‘கடந்த 2016 தேர்தலின்போது, ஜெயலலிதா இருந்ததால் உண்மையாகவே கடுமையான போட்டி இருந்ததை நாங்கள் நேரில் கண்டுணர்ந்தோம். இருப்பினும் திமுக கூட்டணியே மிகச்சொற்பமான இடங்களில் ஆட்சியைப் பிடிக்குமென்றே பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதற்கு மாறாக மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதைத்தான் ஆளும்கட்சியினரும் நம்பிக்கொண்டு, இப்போது எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகள் பொய்யாகுமென்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடுமையான போட்டி இருந்தது உண்மை. அதை அறிந்து, 5 சதவீதத்துக்குக் குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள 30 தொகுதிகளைக் கண்டறிந்து, அவற்றில் பணத்தையும், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரத்தில் உள்ளவர்களையும் களம் இறக்கி நான்கு சதவீதம் வரையிலான வாக்குகளை அதிமுக திசை மாற்றியது. அதுவே அக்கட்சி ஆட்சியமைக்கக் காரணமானது. மொத்தமே 3 சதவீத வாக்குகளில்தான் அந்த வாய்ப்பை திமுக நழுவவிட்டது என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இந்தத் தேர்தலில் அத்தகைய சூழ்நிலை இல்லை. பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

சில ஊடகங்களில் 50லிருந்து 60 தொகுதிகளில் கடும் போட்டி என்று கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகத் தெரிகிறது. அரசு கேபிள் டிவியை செய்தி ஊடகங்கள் நம்பியிருப்பதால், சேனலை நிர்ப்பந்தித்து இப்படியொரு தகவலைப் பரப்ப மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. கடும் போட்டி இருப்பதாகக் கூறினால் அந்தத் தொகுதிகளில் தங்களுடைய கட்சியினர் கடுமையாக உழைப்பார்கள், செலவிடுவார்கள் என்றும் ஆளும்கட்சி கணக்குப் போட்டிருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட!’’ என்றார்கள்.

கணிப்பு என்கிறார்கள்...திணிப்பு என்கிறார்கள்...மே 2 யாருக்குத் தரப்போகிறதோ இனிப்பு?

–பாலசிங்கம்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 3 ஏப் 2021