மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

தேர்தல் சமயத்தில் ரெய்டு நடத்துவது நியாயமா? ஸ்டாலின்

தேர்தல் சமயத்தில் ரெய்டு நடத்துவது நியாயமா? ஸ்டாலின்

வேதாரண்யம், கீழ்வேளூர், நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 3) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் ஓ.எஸ்.மணியன். பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்; பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன் என்று விமர்சித்தார்.

கஜா புயலின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நிவாரண உதவியும் வழங்கவில்லை என ஓ.எஸ்.மணியனைக் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கேட்டுப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த, பெயரை குறிப்பிடாமல் துறைமுகம் கொண்டு வருவோம் என கூறியிருக்கிறார். ஆனால் துறைமுகம் வராது என்று முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதெல்லாம், தேர்தலுக்காக போடக் கூடிய நாடகம்.

நேற்று என்னுடைய மகள் வீட்டில் ரெய்டு நடந்தது. அதுபோன்று நான் திருவண்ணாமலை சென்றிருந்த போது, திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும், அண்ணா நகர் வேட்பாளர் மோகன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது எதுவும் கிடைக்கவில்லை. மேலிடத்து உத்தரவு என்று சொல்லிவிட்டு போகிறார்கள். தேர்தல் சமயத்தில் ரெய்டு நடத்துவது நியாயமா?

ரெய்டுக்கு வரும் ஆபீசர்கள், காபி, டீ சாப்பிட்டு, டிவியை பார்க்கிறார்கள். அப்போது நாங்கள் வந்ததால் 25 சீட் அதிகமாகத்தான் வரப்போகிறது என்கிறார்கள். சொத்துக் கணக்கு முறையாகக் காட்டவில்லை என்றால் ரெய்டு நடத்தலாம்.

ஒருவேளை நாங்கள் தவறு செய்திருந்தால், ஒரு மாதத்திற்கு முன்னதாகவோ, அல்லது தேர்தலுக்குப் பிறகோ ரெய்டு நடத்தலாம். தேர்தல் சமயத்தில் ரெய்டு நடத்துவது என்பது தேர்தல் பணியைச் செய்யவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினால் அவர்கள் பயப்படலாம். நாங்கள் பயப்படமாட்டோம்.

தேர்தல் என்றால் தான் மோடி, அமித் ஷா தமிழகம் வருகிறார்கள். தாராபுரத்துக்கு வந்த பிரதமர், பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் பொள்ளாச்சி சம்பவம் மற்றும் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததெல்லாம் பிரதமருக்குத் தெரியாதா?. அமையாத எய்ம்ஸை பற்றி மதுரையில் பேசிக்கொண்டிருக்கிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது. மீனவர்கள் மீது தாக்குதல், வலையை அறுத்துவிடுதல், படகைச் சேதப்படுத்துதல் என மீனவர்களுக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை பாஜக கண்டு கொள்வதில்லை. அதிமுக அரசும் தட்டிக்கேட்பதில்லை. எனவே இந்த தேர்தலில் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களின் பிரச்சினைகள் களையப்படும்" என்று கூறி வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 3 ஏப் 2021