அதிக லைக்குகளால் அரண்டுபோன காங்கிரஸ்.. இது பாட் யுத்தம்?

politics

உண்பது, உறங்குவது, அன்றாடக் கடமைகளைத் தவிர அனைத்தையும் சமூக ஊடகத்திலேயே செய்துவிடலாம் என நினைக்கும் காலகட்டத்தில், லைக்குகளை விரும்பாதவர்கள் இருப்பார்களா?

அதெப்படி என எதிர்க் கேள்விதானே கேட்கத்தோன்றுகிறது.. மேற்கொண்டும் படியுங்கள்.

கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஆளும் இடதுசாரி கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்து பல போராட்டங்கள், நடவடிக்கைகளில் முன்னால் நின்றுவருகிறார். காங்கிரஸ் வெற்றிபெற்றால் அடுத்த முதலமைச்சராக வரக்கூடியவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர்.

சில வாரங்களாகவே, கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னிதாலா தகவல்களையும் அவை தொடர்பான விவரங்களையும் ஆவணங்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். ஆளும் கூட்டணி அரசாங்கத்துக்கு இது குடைச்சலாக மாறவே, சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரான எம்.ஏ. பேபி, அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு வாக்காளர்களின் விவரங்களை சென்னிதாலா கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் தரப்பில் இடது கூட்டணி தரப்பு மீது அடுத்த குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

ரமேஷ் சென்னிதாலாவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும் இடுகைகளுக்கு திடீரென ஆயிரக்கணக்கான லைக்குகள் வந்து விழுகின்றன. லைக்குகளுக்காகவே சமூக ஊடகங்களே கதியெனக் கிடக்கும் உலகத்தில், காங்கிரஸ் கட்சியினரோ இதை அறவே விரும்பவில்லை.

ஏற்கெனவே ஒரு முறை இப்படித்தான் ரமேஷ் சென்னிதாலாவின் முகநூல் பக்கத்தில் லைக்குகளின் படையெடுப்பு நிகழ்ந்தது. முதலில் மகிழ்ச்சிக் கடலில் மிதந்த காங்கிரஸ் கட்சியினர், அடுத்தடுத்த தகவல்களால் அரண்டுபோனார்கள்.

காரணம், இந்த லைக்குகளை மனிதர்கள் இடுவதில்லை. அதாவது, சென்னிதாலா வெளியிட்ட தகவலோ படமோ நன்றாக இருக்கிறது என தனி நபர்கள் அவர்களாகவோ அல்லது காசுபணம் தந்தோ இடும் லைக்குகள் அல்ல, இவை.

முழுக்க முழுக்க செயற்கையாக, இன்ன வேலையை திரும்பத் திரும்ப செய்யவேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளைப் போன்றது எனச் சொல்லலாம். ஆனால், அது பொதுவான மென்பொருள் அல்ல; இதை ’பாட்’ என்கிறார்கள். ரோபாட் எனப்படும் எந்திர மனிதன் என்பதைப் போன்றது, இது. சிறிய ரோபாட் என்ற பொருளில்தான், ’பாட்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

சென்னிதாலாவின் முகநூல் பக்கத்தில் விழும் லைக்குகளை இப்படியான ‘பாட்’ மூலம் செய்கிறார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு.

சரி, லைக்குகளால் என்ன பிரச்னை?

இப்படி ஒரே நேரத்தில் ஏராளமான லைக்குகளை விழச்செய்யும் ‘பாட்’ உற்பத்தியாளர்கள், அந்தக் குறிப்பிட்ட (சென்னிதாலாவின் )முகநூல் பக்கத்தின் மீது இணையத்தாக்குதல் நடத்தும்படியாக, அதை உருவாக்கவும் முடியும்; அதற்கான வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது. இதனால்தான் அதிக லைக்குகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துபோய் இருக்கிறார்கள், காங்கிரஸ் தரப்பில்.

ஓரிரு பாட்கள் அல்ல, பாட் படை எனக் கூறக்கூடிய அளவுக்கு செயல்படும்படியாக உருவாக்கப்பட்டவைதான், ஆயிரக்கணக்கான லைக்குகளை கடமையே கண்ணாக இட்டுவருகின்றன.

ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த ’பாட்’டின் வருகையை உணர்ந்திருக்கிறார்கள், சென்னிதாலா தரப்பில். அவர்கள் தரப்பு கூறுவதன்படி, லைக்கு இட்ட 321 முகநூல் கணக்குகள், கேரள அரசாங்கத்தின் டிஜிட்டல் பணி மேலாண்மை அமைப்பின் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்பவையாக இருக்கின்றன. அந்தக் கணக்குகள் தொடங்கிய 5 நாள்கள்வரை இப்படி அரசின் பக்கத்தைப் பின்தொடர்ந்துவிட்டு, பிறகு அதிலிருந்து விடுபட்டுவிட்டன. இவற்றில் 95 சதவீதம் ‘பாட்’கள்தான் என்பது காங்கிரஸ் தரப்பு வைக்கும் வாதம்.

கேரள அரசாங்கத்தின் இந்த டுவிட்டர் பக்கத்தை, மும்பையில் இருக்கும் ஒரு மக்கள்தொடர்பு நிறுவனம் கையாண்டுவரும் நிலையில், இடது கூட்டணி தரப்பு மீது காங்கிரஸ் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

இந்தியாவில், இதுவரை வலதுசாரி கட்சியான பாஜக மற்றும் அதுசார்ந்த அமைப்புகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, இப்போது இடது பக்கம் திரும்பியிருக்கிறது.

கேரள இடதுசாரிகள் என்ன பதில் சொல்வார்களோ?

**- இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *