மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்யும் ரெய்டுகள்!

திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்யும் ரெய்டுகள்!

நாளை (ஏப்ரல் 4) யோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும் நிலையில், திமுகவை நோக்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு ஆபரேஷன்கள் நேற்று தீவிரமாகின.

திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் ரெய்டு, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ரெய்டு என்பதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன உரிமையாளர் ஜெயமுருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கும் ஜெயமுருகனைக் குறிவைத்து நந்தனம் பகுதி அலுவலகம், வீடுகளில் நேற்று நள்ளிரவு தாண்டியும் வருமான வரிச் சோதனை தொடர்ந்தது. மறைந்த கலைஞருக்கு நெருக்கமானவராக இருந்த ஜெயமுருகன் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் நெருக்கமானவராக கருதப்படுபவர்.

இவர் திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்ததோடு தன்னைப் போன்ற வேறு சில மதுபான நிறுவனங்களிடம் இருந்து திமுகவுக்கு தேர்தல் நிதி வசூல் செய்து கொடுத்ததாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து நேற்று இரவு ரெய்டு செய்த வருமானவரித்துறை ஜெயமுருகன் தரப்பினரிடம் கேட்ட முதல் கேள்வி, ‘திமுகவுக்கு எவ்வளவு தேர்தல் நிதி கொடுத்தீர்கள்? எவ்வளவு வாங்கிக் கொடுத்தீர்கள்?’என்பதுதானாம்.

நேற்று சபரீசன் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த ரெய்டுகள் பற்றி வருமான வரித்துறை வெளியிட்ட தகவலில், :” இன்று சென்னையில் சில இடங்களில் பிசினைஸில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் வருமான வரிச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ரியல் எஸ்டேட், மதுபானம், வட்டிக்கு விடுதல், சூரிய மின் சக்தி ஆகிய துறைகளில் தொழில் செய்துவரும் இவர்களின் பணம் தேர்தலிலும் பயன்படுத்தப்படுவதால் சோதனைகள் நடத்தப்பட்டன. வரி ஏய்ப்பு பற்றிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. ரெய்டு தொடர்கிறது” என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

திமுகவை அரசியல் ரீதியாக ஒருபக்கம் தாக்கி வரும் பாஜக இன்னொரு பக்கம் தேர்தலை எதிர்கொள்வதற்கு அக்கட்சி ஏற்படுத்தி வரும் நிதி உள்கட்டமைப்புகளை தாக்குவதையும் முக்கிய திட்டமாக வைத்திருக்கிறது.

திமுகவின் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனை கடந்த 2020 ஜூலை 1 ஆம் தேதி அமலாக்கப் பிரிவுக்கு அழைத்து விசாரணை செய்தனர் அப்பிரிவு அதிகாரிகள்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மூலம் ஆதாயம் அடைந்ததாக அவர் மீதான புகாரில் சென்னையிலுள்ள அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் அவர் இந்த விசாரணைக்கு ஆஜரானார். சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடந்தன. இதுபற்றி ஜூலை 2 ஆம் தேதி மின்னம்பலத்தில், திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்ய அமித் ஷா ஆபரேஷன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “ வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த வகையிலும் திமுக ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு கோணமாக திமுகவுக்கு செக் வைத்து வருகிறார் அமித் ஷா. அதில் முக்கியமான ஒரு கோணம் திமுகவுக்கான நிதிப் போக்குவரத்துகளை நிறுத்த வேண்டும் என்பது. 2011 இல் தமிழகத்தில் ஆட்சியை இழந்த திமுக சுமார் 9 வருடங்களாக எதிர்க்கட்சியாகவே இருக்கிறது. அக்கட்சியின் நிதிக் கட்டமைப்பும் வீக் ஆக இருக்கிறது என்பதால் தேர்தல் செலவுக்காக பல தொழிபதிபர்களை அணுகி வருகிறது. இந்நிலையில் திமுகவுக்கு பொருளாதார ரீதியாக உதவக் கூடாது என்று ஏற்கனவே முக்கியத் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு சார்பில் மெசேஜ் பாஸ் செய்யப்பட்டுள்ளது. திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்வதுதான் அமித் ஷாவின் திட்டம்”என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், “ நேற்று வரை நடந்திருக்கும் ரெய்டுகளுக்கான அடிப்படையே திமுகவின் நிதி நரம்புகளை கட் செய்வதுதான். சபரீசன், மோகன் கார்த்திக், பாலா உள்ளிட்டவர்கள், செந்தில்பாலாஜி, ஜெயமுருகன், ஏற்கனவே எ. வ. வேலுவை குறிவைத்த ரெய்டுகள் நடந்துள்ளன. திமுகவுக்கு தேர்தல் நிதி வரும் பாதைகளை கண்டுபிடித்துத் தடுக்க வேண்டும். அந்தப் பாதையைக் கண்டறிந்து திமுகவுக்கு உதவுபவர்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்க வேண்டுமென்பதே இந்த ரெய்டுகளின் நோக்கம். இது எந்த அளவுக்கு வெற்றி அடையும் என்பது தேர்தலில் தெரிந்துவிடும்” என்கிறார்கள் திமுகவினர்.

நேற்று பிற்பகல் திமுகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு வாய்மொழி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அதாவது, ‘நமது கடைசி கட்ட தேர்தல் பணிகளை நிலைகுலைய வைப்பதற்காக எந்த நேரமும் எந்த வேட்பாளர் வீட்டிலும் வேட்பாளருக்கு நெருக்கமான ஒன்றிய நகர நிர்வாகிகள் யார் வீட்டிலும் ரெய்டு நடக்கலாம். அப்படி வந்தால் ரெய்டு பாட்டுக்கு நடக்கட்டும். உங்களது கடைசி கட்ட பணிகளில் எந்த தொய்வும் இல்லாமல் இருக்க வேண்டும். இதுதான் முக்கியம். கவனத்தை சிதறவிட்டுவிடக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 3 ஏப் 2021