மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கதரும் காவியும் கொடுக்குது துட்டு: காசு தராமல் கமலுக்கு விழுமா ஓட்டு?

கதரும் காவியும் கொடுக்குது துட்டு: காசு தராமல் கமலுக்கு விழுமா ஓட்டு?

தேர்தலை ஏன் இவ்வளவு குறுகிய காலத்தில் நடத்துகிறார்கள் என்பது இப்போதுதான் கொஞ்சம் புரிகிறது. முன்பெல்லாம் அடுத்த தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருமென்பதை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஓரளவுக்கு யூகித்து விட முடியும். கிராமத்து டீக்கடை பெஞ்ச்சிலும், நகரத்து டவுன்பஸ்சிலும் உட்கார்ந்து நாலு பேர் பேசுவதைக் கேட்டாலே ஒட்டு மொத்த தமிழர்களின் உள்ளக்கிடக்கையையும் அறிந்துவிடலாம். அதேபோல இந்தத் தொகுதியில் இவர்கள்தான் மோதுவார்கள் என்பதை கட்சியின் அடிமட்டத்தொண்டனே அடித்துச் சொல்லியும் விடுவான். ஆனால் இப்போதெல்லாம் எதையும் யூகிக்க முடிவதில்லை. யார் யாரோ களமிறங்குகிறார்கள். எது எதுவோ சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. நாளுக்கு நாள் டிரெண்ட் மாறுகிறது. களப்பணி, கட்சியின் வாக்கு வங்கி, கூட்டணி பலம், வேட்பாளர் செல்வாக்கு, ஓட்டுக்கு நோட்டு என எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு விஷயம், யாருமே எதிர்பாராத ஒருவரை ஜெயிக்க வைக்கிறது. இப்படி தேர்தல் களம் எல்லோரையும் குழப்பி கும்மியடிக்க வைக்கிறது என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம், கோவையில் முக்கிய தொகுதிதான். நீங்கள் யூகித்தது சரியே... உலக நாயகனும், தேசத்தை ஆளும் கட்சியின் மகளிரணி தேசிய செயலாளரும், மண்ணின் மைந்தனும் மோதும் கோவை தெற்கு தொகுதிதான் அது.

இப்போதில்லை; அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவது வானதி சீனிவாசன்தான் என்று பாரதிய ஜனதா கட்சியினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதித் தராத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாவம் அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜூனன்தான், மாநகர் மாவட்டச் செயலாளராகவும், சிட்டிங் எம்எல்ஏ ஆகவும் இருக்கும் தனக்கு அந்தத் தொகுதியை எப்படியும் அமைச்சர் வேலுமணி வாங்கிக் கொடுத்து விடுவார் என்று ரொம்பவே நம்பிக்கையோடு இருந்தார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், முதல்வர் எடப்பாடி கோவைக்கு வந்தபோதும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமர்க்களமாக வரவேற்பு கொடுத்தும் அசத்தினார். ஆனால் கடைசி நேரத்தில் தொகுதி இல்லை என்றதும் ஆவேச அம்மனாக மாறினார். அவருடைய ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். போராட்டம் நடத்தினர். ஒரு கதையும் ஆகவில்லை. அவரைச் சமாதானப்படுத்தி, கோவை வடக்கில் சீட் கொடுத்தார்கள். இதனால் அவருடைய ஆட்கள் வேலை பார்க்க மாட்டார்கள் என்றுதான் எல்லோரும் பேசினார்கள்.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘இந்தத் தொகுதியில் வானதி ஜெயித்தாலும் நான்தான் எம்எல்ஏ. அவரை ஜெயிக்க வைத்தால்தான் நான் ஐந்தாண்டாக இந்தத் தொகுதிக்கு உழைத்ததற்கு ஓர் அர்த்தம் இருக்கும்!’’ என்று உருகித்தள்ளினார் அம்மன் அர்ஜூனன். அதற்குப் பின் வானதியை எதிர்ப்பது யாரென்ற கேள்வி எழுந்தது. தொகுதியை காங்கிரசுக்கு மீண்டும் கொடுத்ததால் திமுகவிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் திமுக தலைமை என்ன நினைத்தது என்று தெரியவில்லை. மீண்டும் தொகுதியை காங்கிரசுக்குக் கொடுத்து கைகழுவிக் கொண்டது. தேசியக்கட்சிகள் மோதுகின்றன என்றாலும் வானதிக்கு இருக்கும் செல்வாக்கில் எளிதாக வென்று விடுவார் என்று எல்லோரும் நினைத்தனர்.

அதில் பேரிடி விழுந்தது. கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக திடீரென களம் இறங்கினார் கமல்.

கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அவரால் எப்படி இங்கு வந்து பரப்புரை செய்யமுடியும், சும்மா ரெண்டு நாளைக்கு வருவார், அப்புறம் போய்விடுவார் என்று மற்ற கட்சியினர் நினைத்தனர். அதிலும் மண் விழுந்தது. கோவையில் தங்கிக்கொண்டே எல்லா இடங்களுக்கும் போய் வருகிறார் கமல். தினமும் வீதி வீதியாக பரப்புரை செய்து, மக்களோடு மக்களாகக் கலந்து அவர் கலக்கினார். தெருவில் நடந்து, பஸ்சில் ஏறி, ஆட்டோவில் சுற்றி, கடைகளில் ஏறி இறங்கி அவர் செய்த களப்பணி, கோவை மக்களை அவரிடம் நெருங்க வைத்தது. சிறுபான்மையினர், பொதுவுடைமை பேசுவோர், தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள் என எல்லாத்தரப்பும் அவரை ஆதரிக்கத் துவங்கினர். இதனால் அவர்தான் ஜெயிப்பார் என்று அடுத்தடுத்து வந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அடித்துச் சொல்லிவிட்டன. இதே நம்பிக்கையில்தான், கோவையின் முக்கிய தொழில் அமைப்பினரே கமலைச் சந்தித்து மனுக் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மாறியது.

இதற்கு எதிர்மாறாக, வானதிக்கு பல விஷயங்கள் ‘ரிவர்ஸ்’ ஆக மாறின. ஜெயலலிதாவின் தோழியும், கல்லுாரி நிர்வாகியுமான கீதா என்பவர், வானதி சீனிவாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வெளியிட்ட வீடியோ, தொகுதி முழுவதும் வைரல் ஆகப் பரவியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது ஏற்பட்ட மோதலில் இஸ்லாமியர் கடையில் கல் வீசித்தாக்குதல் நடக்க அதுவும் பயங்கர வைரலாகி, கோவையில் மதக்கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. பற்றாக்குறைக்கு கல் வீசி தாக்கப்பட்ட கடைக்கு நேரில் சென்று கமல் ஆறுதல் கூற அது ஹிட் ஆனது. அதே கடைக்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் போனார். இது பாரதிய ஜனதா கட்சியினருக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வானதிக்கு ஆதரவாக வட மாநிலப்பெண்கள் பலரும் களம் இறங்கி, அரைகுறைத் தமிழில் வாக்குச் சேகரிப்பது, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களைச் சந்தித்தது. அதன்பின் உ.பி,, முதல்வர் வந்தபோது அனுமதியின்றி நடந்த இரு சக்கர வாகன பேரணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டதாகவும் தகவல் பரவியது. இதெல்லாம் உண்மையிலேயே கோவை மக்களிடத்தில் ஒரு விதமான அச்சவுணர்வை ஏற்படுத்தின.

இந்தக் காரணங்களால், வானதிக்கான வெற்றி வாய்ப்பு குறைந்து, கமலின் வெற்றிவாய்ப்பு மேலும் பிரகாசமாகி இருப்பதாகக் கருதப்பட்டது. மற்றொரு புறத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு விழும் சிறுபான்மை வாக்குகள், கமலுக்குப் பிரிந்து போகுமென்ற கணிப்பும் உருவானது. இதனால் கமல் வெல்வது உறுதி; இரண்டாமிடத்துக்குதான் வானதிக்கும், மயூரா ஜெயக்குமாருக்கும் போட்டி என்று தான் கோவை மக்கள் மத்தியில் மட்டுமின்றி, கொங்கு மண்டலம் முழுவதுமே நம்பிக்கையோடு பேசப்பட்டது. இதெல்லாம் இரண்டு நாள்களுக்கு முன்பு வரையிலான நிலவரம். தேர்தல் பரப்புரை நாளை முடிவடையவுள்ள நிலையில், நேற்று முன் தினத்திலிருந்துதான் பணப்பட்டுவாடா இந்தத் தொகுதியில் ஆரம்பித்திருக்கிறது.

அங்கு இப்போது துவங்கியுள்ள பணப்பட்டுவாடா பற்றியும், அதனால் தொகுதியில் ஏற்பட்டுவரும் இறுதி நேர மாற்றம் குறித்தும், இத்தொகுதியை உன்னிப்பாகக் கவனித்து வரும் கோவையின் முக்கியமான போலீஸ் அதிகாரி ஒருவர் விளக்கினார்...

‘‘திமுக, அதிமுக இரண்டும் நேரடியாக மோதும் தொகுதிகளில்தான், பணம் அதிகமாகப் புழங்கும்; தேசியக் கட்சிகள்தான் மோதுகின்றன என்ற எண்ணத்திலும் இந்தத் தொகுதியை கமல் தேர்ந்தெடுத்திருக்கலாம். கமலின் நம்பிக்கை முதலில் வேலை பார்த்தது. இப்போது இந்த கணிப்பும், நம்பிக்கையும் காசால் தகர்ந்து விடுமோ என்ற சூழல் உருவாகியிருக்கிறது. வானதிக்காக இங்கு வேலை பார்க்கும் அதிமுகவினரும், மயூராவுக்காக வேலை பார்க்கும் திமுகவினரும் ‘பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும்’ என்பதை இருவருக்கும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டனர். அதனால் இருவருமே வாக்காளர்களுக்கு இனிப்பு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டு அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டனர். இந்தத் தொகுதியில் ஓட்டுக்கு நோட்டை எதிர்பார்க்கும் கீழ்த்தட்டு மக்களின் எண்ணிக்கை கணிசமாகவுள்ளது. அந்த வாக்குகளை வாங்கும் யுக்தி, அதிமுகவினருக்கு கைவந்த கலை. இந்தத் தொகுதியில் எந்தப் பகுதியில் எவ்வளவு வாக்காளர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் எவ்வளவு வாக்குகள் வாங்க முடியும் என்பது அத்துப்படி.

அவர்கள் மூலமாக இனிப்பு விநியோகத்தை பாரதிய ஜனதா துவக்கிவிட்டது. அங்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் விநியோகம் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால் எல்லாப் பகுதியிலும் அதே அளவு கொடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. எங்களுக்குத் தெரிய பாரதிய ஜனதா போட்டியிடும் தொகுதிகளில் இந்தத் தொகுதியில் புழங்கும் அளவுக்கு வேறு எங்கும் பணம் புழங்க வாய்ப்பேயில்லை. அதேபோல காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினரும் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு பணப்பட்டுவாடாவை துவக்கி விட்டனர். அவர்கள் ஓட்டுக்கு 500 மட்டுமே கொடுப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. வானதியைப் பொருத்தவரை, அதிமுக வாக்குகள், கடந்த முறை அவர் வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தாலே குறைந்தபட்சம் 60 ஆயிரத்துக்கு மேல் உறுதியாக வாக்குகள் வாங்கி ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். அதிமுக வாக்குகளை அப்படியே வாங்குவதற்குதான் அவர் அதிமுகவின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு ஓட்டுக்கு இவ்வளவு என்று கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். மயூராவும் அதே போன்ற கணக்கில்தான் பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கமல் கண்டிப்பாக ஒரு பைசா கூட தரமாட்டார்.

கமல் தனக்கு இருக்கும் செல்வாக்கு, தன்னுடைய களப்பணி இரண்டும் தன்னைக் கரை சேர்க்கும் என்று நிச்சயமாக நம்புகிறார். ஆனால் கள நிலவரத்தைப் பார்த்தால் அது சாத்தியமாகத் தெரியவில்லை. ஏனெனில் மயூராவுக்கு விழும் வாக்குகளில் பெருமளவை கமல் திருப்பிக் கொள்வார். இதனால் கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளே மயூராவுக்குக் கிடைக்கவே வாய்ப்பு அதிகம். அவருடைய களப்பணியும் இந்த முறை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. திமுகவினரும் தீவிரமாக வேலை பார்த்ததாகவே தெரியவில்லை. ஆக, கமலுக்கும், வானதிக்கும் இடையேதான் போட்டி பலமாகவுள்ளது. விழும் வாக்குகளில் இருவருக்கும் இடையே சிறிதளவுதான் வித்தியாசம் இருக்கும். இப்போது குறிப்பிட்ட சதவீத வாக்குகளுக்கு வானதி தரப்பில் கவனிப்பு நடந்திருப்பதால் அந்த வாக்குகள் அப்படியே கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் கமலுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி, வானதி திசைக்கு மாறிவிடுமென்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி கமல் அதிக வாக்குகளை வாங்கி வென்றால், நிச்சயமாக அது தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகத்தில் ஏற்பட்ட புதிய புரட்சியாகவே இருக்கும்!’’ என்றார் அந்த அதிகாரி.

கமலின் ஓயா உழைப்புக்கும், காசு தரக்கூடாது என்ற உன்னத நோக்கத்துக்கும் கோவை மக்கள் தரப்போகும் பரிசு, கம்பீரமான வெற்றியா, கெளரவமான தோல்வியா...காத்திருப்போம் மே 2 வரை!

–பாலசிங்கம்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 3 ஏப் 2021