மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

எலக்சனை நடத்துவது கமிசன் அல்ல, அமித்தும் மோடியும்தான் : மம்தா

எலக்சனை நடத்துவது கமிசன் அல்ல, அமித்தும் மோடியும்தான் : மம்தா

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று முன் தினம் இரண்டாம், கட்ட வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று வடக்கு வங்காளப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கூச்பிகார் மாவட்டம் தின்ஹட்டாவில் பிரச்சாரப் பேரணிக்குத் தலைமைவகித்தார்.

முந்தைய நாளான வியாழனன்று, உலுபெரியா எனும் இடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டுள்ள மம்தா தோற்றுவிடுவார் என்று கூறினார்.

எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்க மாநிலத்தில் கடைசிக் கட்டத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் மம்தா போட்டியிடுவார் எனக் கூறப்படுவதாகவும் அதை அவர் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் மோடி பேசியிருந்தார்.

அதற்கு பதிலளித்து நேற்று பேசிய மம்தா, ” நான் என்ன உங்கள் கட்சியிலா இருக்கிறேன்.. இன்னொரு தொகுதியில் போட்டியிடுமாறு என்னைச் சொல்வதற்கு.. நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிட்டிருக்கிறேன். உறுதியாக அங்கு வெற்றிபெறுவேன்.” என்று அழுத்தமாகச் சொன்னார்.

”பிரதமர் அவர்கள் முதலில் தன்னுடைய உள்துறை அமைச்சரைக் கட்டுப்படுத்தப் பாருங்கள்; பிறகு எங்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்வதைப் பார்க்கலாம். நாங்கள் ஒன்றும் உங்கள் கட்சி உறுப்பினர்கள் இல்லையே, நீங்கள் எங்களைக் கட்டுப்படுத்துவதற்கு..?” என்று மம்தா மீண்டும் ஒரு முறை கடுமையான எரிச்சலுடன் கூறினார்.

மாநிலத்தில் நடந்துமுடிந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. நந்திகிராம் தொகுதியில் மம்தாவே நேரடியாக பல இடங்களுக்கும் சென்று வாக்குச்சாவடிகளில் நிலைமையைக் கண்டறிந்தார். போயல் எனும் இடத்தில் வாக்குச்சாவடியிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்து, அங்கிருந்தபடியே ஆளுநரிடம் தன் செல்போன் மூலமாகவே புகார் தெரிவித்தார். அங்கு பிரச்னை தீர்ந்ததும் வேறு பல இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ வாக்குப்பதிவு தொடர்பாக 63 புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால் (1ஆம்தேதி பிற்பகல்) இப்போதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்கள் இப்படி செய்தால் நீதிமன்றத்துக்குப் போவதுதான் ஒரே வழி.” என்றார் மம்தா.

அங்கு மட்டுமில்லாமல், மற்ற 29 தொகுதிகளிலும் சேர்த்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது, வாக்குச்சாவடிக்குப் போகவிடாமல் தடுப்பது, மோசடியாக வாக்களிப்பது ஆகியவை தொடர்பாக 130 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளன. அதில் 90 புகார்கள் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்டவை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு தொடர்பான புகார்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்றதுமே, நடவடிக்கையும் தொடங்கிவிட்டது என்றனர். ஓரளவுக்கு அமைதியாகவே வாக்குப்பதிவு நடைபெற்றதாகவே அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் வாக்குப்பதிவு தினமே, ஒரு கொலைச்செய்தியுடன் தான் விடிந்தது. மேற்கு மித்னாப்பூர் மாவட்டத்தின் கேஷ்பூர் பகுதியில் அதிகாலையில் 48 வயது உத்தம் தொலுய் என்கிற திரிணமூல் கட்சித் தொண்டர், அவருடைய கட்சி அலுவலகத்தில் வைத்து 15 பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொல்லப்பட்டார். பாஜக சார்ந்த குற்றவாளிகள்தான் அவரைக் கொன்றதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நந்திகிராம் தொகுதியின் பெகுதியாவில் பாஜக தொண்டரான உதய் துபே என்பவர், தூக்கிலிட்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். திரிணமூல் கட்சியினரின் விடுத்த மிரட்டலை அடுத்தே மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கேஷ்பூர், கிழக்கு மித்னாப்பூர், மேற்கு மித்னாப்பூரின் சபாங் ஆகிய இடங்களில் திரிணமூல் கட்சியினர் மீதும் அவர்களின் வாகனங்கள் மீதும் கும்பலாக தாக்குதல் நடத்தினர். கேஷ்பூரில் சாவடிக்கு வெளியில் இருந்த திரிணமூல் வாக்குச்சாவடி முகவரின் மண்டை உடைக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாஜக வேட்பாளரின் காரும் தாக்கப்பட்டது. கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் நந்திகிராம் மற்றும் மொய்னா தொகுதிகளில் வாக்குச்சாவடி கைப்பற்றல் தொடர்பாக மட்டும் 20 புகார்கள் அளிக்கப்பட்டன. மேற்கு மித்னாப்பூரின் கேஷ்பூர், கரக்பூர் தொகுதிகள், பாங்குராவின் பர்ஜோரா, தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பதர்பிரதிமா ஆகிய தொகுதிகளிலும் வாக்குச்சாவடி கைப்பற்றல் அரங்கேறியது.

இதையெல்லாம் அறிந்துதான், முதலமைச்சரான மம்தா பான்ர்ஜி பகிரங்கமாகவே, தேர்தல் ஆணையத்தின் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டார். 63 புகார்கள் தந்து அரை நாள் ஆகியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவருடைய குற்றச்சாட்டு!

- இளமுருகு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 3 ஏப் 2021