மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ஆ.ராசாவுக்கு 48 மணி நேரத் தடை: தீயாய்செய்த தேர்தல் ஆணையம் !

ஆ.ராசாவுக்கு 48 மணி நேரத் தடை: தீயாய்செய்த தேர்தல் ஆணையம் !

திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசாவுக்கு 2 நாள்கள் பிரச்சாரம் செய்வதற்குத் தடைவிதிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்த மாதம் 26ஆம் தேதியன்று பிரச்சாரத்தில் பேசிய ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியது, சர்ச்சைக்கு உள்ளானது. அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராசாவிடம் நேற்று விளக்கத்தைக் கேட்டு வாங்கியது, தேர்தல் ஆணையம்.

தன் மீதான புகார் என்ன என்பதே தெரியாமல் எப்படி பதில்கூற முடியும் என ராசா கேட்டிருந்தார். ஆனால், அதை நிராகரித்த தேர்தல் ஆணையம், ராசாவின் விளக்கத்தை ஏற்கமறுத்து, 2 நாள் பிரச்சாரத் தடை விதித்தது.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ராசாவுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ஆணையின் விவரம்:

” கடந்த 27ஆம் தேதியன்று தலைமைத் தேர்தல் அதிகாரி மூலமாக அதிமுக சார்பில் ஆணையத்துக்கு ஒரு புகார் வந்தது. அதில், ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்த 26ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகவும் மனம் புண்படும்படியும் நீங்கள் பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஆணையம் தனியாக அறிக்கை ஒன்றை வாங்கியது. அதையொட்டி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசால் உங்களுக்கு எதிராக மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

பூர்வாங்க அறிக்கைகளின்படியும் பேச்சுகளின் எழுத்துவடிவத்திலிருந்தும் கீழப்பழூர், மீன்சுருட்டி ஆகிய இடங்களிலும் நீங்கள் இப்படி பேசியிருக்கிறீர்கள்.

(அ) கீழப்பழூரில் இரவு 7 மணிக்குப் பேசுகையில், “........... ஸ்டாலின் நல்ல உறவில் நன்றாகப் பிறந்த ஒரு குழந்தை; எடப்பாடி பழனிசாமியோ கள்ள உறவில் முன்கூட்டியே பிறந்த குழந்தை..” என்றும்

(ஆ) மீன்சுருட்டியில் இரவு 8.30 மணிக்குப் பேசியதில், ‘இந்த இடத்துக்கு வருவதற்காக ஊர்ந்து வந்து, சசிகலாவின் காலில் விழுந்தீர்கள்’ என்றும் “எடப்பாடி பழனிசாமிக்கு அறிவும் சுயமரியாதையும் இருந்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து உடனே விலகிவிடுங்கள், ஊர்ந்துசென்று சமவயதோ அல்லது 6 மாதம் இளையவரென சொல்லப்படும் சசிகலாவின் காலைப் பிடித்தீர்கள். ஊர்ந்துவந்து அவருடைய காலைப் பிடித்து கெஞ்சினீர்கள்தானே இல்லையா.. எப்படி இந்தப் பதவிக்கு வந்தீர்கள்.........” என்றும் ’கள்ள உறவில் பிறந்த குழந்தை, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிசாமி......” என்றும் பேசியிருக்கிறீர்கள்.

உங்களின் பேச்சுகளையும் அறிக்கைகளையும் கருத்தில்கொண்டு, ஆணையமானது, நீங்கள் அவதூறாக மட்டுமில்லாமல் பெண்களின் தாய்மை சுயமரியாதை குறித்து தரக்குறைவாகவும் அருவருப்பாகவும் பேசியிருக்கிறீர்கள் என ஆணையம் முடிவுக்கு வருகிறது; இது சீரியசான தேர்தல் நடத்தை விதி மீறல். ஆகவே, உங்களின் விளக்கத்தை அறிய 30ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பினோம்.

உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து இடைக்கால பதிலை 31ஆம் தேதிக்குள் அனுப்பினீர்கள். அத்துடன் உங்களின் குற்றம்சாட்டப்படும் பேச்சின் முழு எழுத்தாக்கத்தின் நகலையும் அதிமுகவினர் 20ஆம் தேதியன்று அளித்த புகாரின் நகலையும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். விரிவான பதிலை அளிக்கவும் நேரடியாக வழக்குரைஞருடன் விசாரணையில் கலந்துகொள்ளவும் வாய்ப்பு கேட்டிருந்தீர்கள்.

ஆனால், நீங்கள் அளித்திருக்கும் பதிலே திருப்தி அளிக்கவில்லை என ஆணையம் கருதுகிறது. மேற்படி விவரங்களை நீங்கள் கேட்பதும் நேரடி விசாரணைக் கோரிக்கையும் தேர்தலுக்கு இடையே அவகாசம் கோரும் உங்கள் முயற்சி என்பதால், ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

நீங்கள் (புதன்கிழமை) 31ஆம் தேதி அனுப்பிய பதில், எங்களுக்கு கிடைத்த அறிக்கைகள், உண்மைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு,

தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருக்கிறீர்கள் என அறிவிக்கிறோம்;

திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்கம்செய்கிறோம்;

48 மணி நேரம் பிரச்சாரம் செய்யக்கூடாது என தடைவிதிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும், இனி பிரச்சாரத்தின்போது கவனமாக இருக்கும்படியும் அநாகரிகமாகவும் அவதூறாகவும் அவருவருப்பாகவும் பெண்களின் சுயமரியாதையைக் குறைக்கும்படியாகவும் பேசவேண்டாம் என்றும் அறிவுரை கூறுவதாகவும் தேர்தல் ஆணையம் ராசாவுக்கு அனுப்பிய உத்தரவில் கூறியிருக்கிறது.

என்ன அபத்தம் என்றால், ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக சார்பில் 20ஆம் தேதியன்று புகார் அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராசா பேசியது, மார்ச் 26.

*

மற்றது, கீழப்பழூர் என்ற இடத்தில் பேசியதாகவும் கீழப்பூர் என்ற இடத்தில் பேசியதாகவும், மீன்சுருட்டி என்றும் மீன்சுருபட்டி என்றும் ஒரே ஊரை விதம்விதமாக இந்தியாவுக்கே தேர்தல் நடத்தும் ஆணையம், ஒரு உத்தரவை வழங்கியிருக்கிறது.

ராசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் முறையீடுசெய்தார். தேர்தல் வருவதற்கு சில நாள்களே இருப்பதால் அவசரமாக வழக்கை விசாரிக்குமாறு அவர் கோரினார். அவரின் வேண்டுகோளை ஏற்க, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு மறுத்துவிட்டது.

- இளமுருகு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 1 ஏப் 2021