மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பிரதமரின் பேச்சு: ’அதிர்ச்சியில் காங்கிரஸ்’, அழகிரி பட்டியல்!

பிரதமரின் பேச்சு: ’அதிர்ச்சியில் காங்கிரஸ்’, அழகிரி பட்டியல்!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை அளித்திருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.

திமுகவும் காங்கிரசும் பெண்களுக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் நடைபெறும் என்றும் பிரதமர் மோடி தாராபுரம் கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும், திமுக பேச்சாளர் லியோனியின் கண்டிக்கத்தக்க பேச்சு குறித்து பிரதமரான மோடி தன்னுடைய உரையில் குறிப்பிட்டது பல தரப்பிலும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவருடைய உரை குறித்து கே.எஸ். அழகிரி இன்று மதியம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது தகுதிக்கு குறைவான பல்வேறு கருத்துக்களை கூறினார். குறிப்பாக, மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ. ராசா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் பேசியது அவரது பதவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. ஏற்கனவே, ஆ. ராசா, தான் கூறிய கருத்துக்கு மனப்பூர்வமான மன்னிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அதேபோல, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் அந்தக் கருத்துக்கு கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி, ஆ. ராசா பற்றி குறிப்பிட்டு பேசியதோடு நில்லாமல், தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்தும் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு சில சம்பிரதாய மரபுகள் உள்ளன. அதனை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் அவரது தமிழக தேர்தல் சுற்றுப்பயண பேச்சு அமைந்தது.” என்று அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று பிரதமர் மோடியும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருப்பதற்கு அழகிரி கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

”காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் நீண்டகாலமாக பெண்களின் மேம்பாட்டிற்காக, உரிமைகளுக்காக கடுமையாக போராடியிருக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களாக அன்னிபெசன்ட் அம்மையார், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபளானி, அருணா ஆசப் அலி, துர்காபாய் தேஷ்முக், சாவித்ரி புலே மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆகியோர் தீவிர பங்காற்றியுள்ளனர். இதை எவரும் மறுக்க முடியாது.” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ள அழகிரி,

”இந்தியாவின் பிரதமராக உலகம் போற்றும் வகையில் 15 ஆண்டுகாலம் பதவி வகித்து பெருமை சேர்த்தவர் அன்னை இந்திரா காந்தி. 20 ஆண்டுகாலம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் சோனியா காந்தி. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் 2007- இல் பிரதீபா பாட்டில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய வாக்காளர்களில் 49 சதவிகிதமாக இருக்கிற பெண்களுக்கு உரிய பொறுப்புகள் மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் ராஜிவ்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் முயற்சி எடுத்துள்ளனர்.” என்றும் கூறியுள்ளார்.

” ராஜீவ்காந்தி 1993 இல் கொண்டுவந்த நகர்பாலிகா, பஞ்சாயத்துராஜ் சட்டம் அனைத்து பொறுப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கப்பட்டு, அதன் காரணமாக, இன்றைக்கு பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் 13 லட்சத்து 45 ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அழகிரி,

“மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டுமென்பதற்காக 108-வது அரசமைப்பு சட்டத் திருத்தம்செய்ய, சோனியா காந்தியின் முயற்சியால் 2010 மார்ச் 9 ஆம் தேதி மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், பா.ஜ.க. முதலிய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் மக்களவையில் அது நிறைவேற்றப்படாமல் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.”என்றும்,

“ மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டிருந்தால் பெண்களுக்கான மேம்பாடு உயர்ந்து சமஉரிமை, சமவாய்ப்பு பெற்றிருப்பார்கள். ஆனால், அந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பா.ஜ.க. முயற்சி செய்யவில்லை. 2014 மக்களவை தேர்தலில் 62 பெண்களும், 2019 மக்களவை தேர்தலில் 78 பெண்களும், அதாவது, 14.31 சதவிகிதம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய குறைவான பிரதிநிதித்துவம் மேலும் உயர்ந்து 33 சதவிகிதமாக சோனியா காந்தியின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கும்.”என்றும் கூறியுள்ள அழகிரி, அந்த வாய்ப்பை பா.ஜ.க. முடக்கிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

”விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து மகாத்மா காந்தி தலைமையில், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கிய பெருமை, இந்திய தேசிய காங்கிரசிற்கு உண்டு. ஆனால், இன்றைய பா.ஜ.க.வின் தாய் ஸ்தாபனமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இதுவரை ஒரு பெண் உறுப்பினராகவோ, தலைமைப் பொறுப்பிற்கோ வந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் கோல்வால்க்கர் சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது. இந்த இயக்கம் எப்பொழுதுமே பெண்கள் உரிமையை ஏற்றுக்கொண்டதில்லை.” என்று பாஜக மற்றும் சங் பரிவார் இயக்கத்தின் மீது குறைகூறவும் செய்தார், அழகிரி.

”எனவே, ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி, தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில், பிரதமர் மோடி உள்ளிட்ட எவர் கூறினாலும், அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க தயாராக இல்லாத நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது. ”என்றும் கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார்.

-இளமுருகு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வியாழன் 1 ஏப் 2021