மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

‘தலைவா’ : ரஜினிக்கு மோடி வாழ்த்து

‘தலைவா’ : ரஜினிக்கு மோடி வாழ்த்து

51ஆவது தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில், தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று (ஏப்ரல் 1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்த்திற்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தேர்தலுக்கும் இந்த விருதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதாக விளக்கமளித்தார்.

இந்திய திரைத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதாகும். ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

ரஜினி காந்த் 6 முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்குப் பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலை துறையில் இவரின் பங்களிப்பைப் பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது. இந்தியத் திரைப்படத்துறையின் சிறந்த ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்தியச் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. தற்போது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலைமுறை தாண்டிய புகழ், கடின உழைப்பு, மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு அன்பான ஆளுமை. அது தான் ரஜினி. தலைவருக்கு (தலைவா) தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் பிரதமர் மோடி ‘தலைவா’ என்று ரஜினியை குறிப்பிட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்று தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. மேலும், “திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துக்கள்” என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், "உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும், என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்த்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்" என கூறியுள்ளார்

கவிஞர் வைரமுத்து, "தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு என் வாழ்த்துகள் இந்த விருது அவரது கலைப்பயணத்தின் முற்றுப்புள்ளி என்று கருதிவிட முடியாது அடுத்த சிகரம் அடைவதற்கான ஆக்சிஜன் என்று கருத வேண்டும் அவர் கருதுவார் ” என குறிப்பிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றாராம் ரஜினிகாந்த். தமிழகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சக்தி பரமசிவன், பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 1 ஏப் 2021