மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ஆ.ராசா மன்னிப்பு கேட்டது ஏன்? கனிமொழி விளக்கம்!

ஆ.ராசா மன்னிப்பு கேட்டது ஏன்? கனிமொழி விளக்கம்!

ஆ.ராசா மன்னிப்பு கேட்டது குறித்து கனிமொழி விளக்கமளித்து பேசியுள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ,ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனது தாயை இழிவுபடுத்திப் பேசியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கண் கலங்கினார். இதையடுத்து, நீலகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ. ராசா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

அதுபோன்று, நேற்று ஆ.ராசா தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “என்னுடைய முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும். அதிமுகவின் புகார் நகலையும், தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்துக்கொண்ட முழு விவரங்களையும் தனக்கு அளிக்க வேண்டும். அதன்பிறகு விரிவான பதிலை அளிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழகம் வந்த பிரதமர் மோடி, ”தற்போது காங்கிரஸ் மற்றும் திமுக புதிதாக ஒரு ஏவுகணையை ஏவத் துவங்கியிருக்கிறது. அந்த 2ஜி ஏவுகணை ஒரே நோக்கத்திற்காக ஏவப்பட்டிருக்கிறது. இது பெண்களை இழிவுபடுத்துவதற்காக ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கிறது. காங்கிரஸும், திமுகவும் உங்களுடைய கட்சியினரைக் கட்டுப்படுத்துங்கள். முதல்வரின் தாயாரை இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பெண்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இன்னும் பெண்களை இழிவுபடுத்துவார்கள்.

திண்டுக்கல் லியோனி என்ற திமுக பேச்சாளர் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதை திமுக தலைவர் கண்டிக்கவில்லை” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நாங்கள் நேர்மையானவர்கள், நியாயமானவர்கள் என்பதால் மன்னிப்பு கேட்டோம். மனசாட்சி மற்றும் நியாய உணர்வு உள்ளதால் தவறு என்று தெரிந்ததும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டோம் என்று திமுக எம்.பி. கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடிக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள கனிமொழி, “ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏன் பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பாஜக எம்எல்ஏவால் இளம் பெண் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் பாதுகாத்தார்.

கத்துவாவில் கோயிலில் சிறுமியை அடைத்துவைத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி என்ன செய்தார்?. பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று உங்களோடு மேடையிலிருந்த முதல்வரிடம் கேட்டீர்களா?

சோனியா காந்தி தொடங்கி அரசு அதிகாரிகள் வீட்டுப் பெண்கள் வரை எச்.ராஜா இழிவுபடுத்திப் பேசி வருகிறார். இவர்களை எல்லாம் தட்டிக் கேட்க முடியவில்லை, தைரியம் இல்லை. ஆனால் தவறு என்று தெரிந்ததும் நாங்கள் மன்னிப்புக் கேட்டோம். அதன் பிறகும் பிரதமர் பேசியிருப்பது ஆணாதிக்கத்தின் உச்சம்” என்று கடுமையாகச் சாடினார்.

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை ஆதரித்து திருப்புல்லாணி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது கனிமொழி இவ்வாறு பேசினார்.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வியாழன் 1 ஏப் 2021