மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பாஜக சேதப்படுத்திய கடைக்கு நேரில் சென்ற கமல்

பாஜக சேதப்படுத்திய கடைக்கு நேரில் சென்ற கமல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது மக்கள் நீதி மய்யம்.

தேர்தலில் முதன்முறையாக மநீம தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ளும் கமல் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் நடைபெறும் சம்பவங்களுக்கு தனது கருத்தை உடனுக்குடன் தெரிவித்து வருகிறார். கூடியவரை சம்பவம் நிகழும் பகுதி அல்லது பாதிப்புக்குள்ளானவர்களை நேரில் சந்திப்பதை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த தவறுவதில்லை.

அதற்கான சூழலை பாஜக தொடர்ந்து கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி தருகிறது என்றே கூறலாம். நேற்றைய தினம் வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதிக்கு வந்தார். அப்போது இஸ்லாமியர்கள் வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது கடைகளை மூடுமாறு பாஜகவினர் நிர்பந்தம் செய்து, அது கலவரமாகி கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இது சம்பந்தமாக மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். அப்போது, பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் டவுன்ஹால் பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினரின் செயல்கள் ஊடகங்களிலும் வெளியாகின.

இதுகுறித்து, "கலவர ஸ்பெஷலிஸ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என இந்தச் சம்பவம் குறித்து அவர் ட்வீட் செய்திருந்தார்

இந்நிலையில் கலவரக்காரர்களால் மிரட்டப்பட்ட வி.எம். காலணியகம் என்னும் செருப்புக் கடைக்கு கமலஹாசன் நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து நடந்தது என்ன என்பதை விசாரித்து, தனது ஆதரவினை தெரிவித்தார். அந்தக் கடையில் தனக்கு காலணிகளும் வாங்கிக்கொண்டார்.

அப்போது கடை வீதியை சேர்ந்த வணிகர்கள் ஒன்றுதிரண்டு கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராமானுஜம்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 1 ஏப் 2021