மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

கருத்துக்கணிப்பு: ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின் சொல்வது என்ன?

கருத்துக்கணிப்பு:  ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின் சொல்வது என்ன?

சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியமைப்பார்கள், யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான முடிவுகள் திமுகவுக்குச் சாதகமாகவே உள்ளது.

நேற்று ஜூனியர் விகடன் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 52 இடங்கள் கிடைக்கும். மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் வெற்றி பெறும். 18 இடங்களில் முடிவு தெரியாமல் இழுபறி நீடிக்கிறது என்று தெரிவித்திருந்தது.

இவ்வாறு கருத்துக் கணிப்புகள் திமுக ஆட்சியமைக்கும் என்று முடிவுகள் வெளியாகும் நிலையில், கருத்துக் கணிப்பால் அலட்சியம் வேண்டாம் என்றும், இதற்கு முன்னாள் எத்தனையோ கருத்துக் கணிப்புகள் தவறாக வந்துள்ளன என ஆளும் கட்சியினரும் கூறி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பழனியில் தேர்தல் பரப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் பழனிசாமிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இப்போது தொலைக்காட்சிகளில், ஊடகங்களில், நம்மை எதிர்க்கும் ஊடகங்களில் கூட திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

முதன் முதலில் "புதிய தலைமுறை" கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அவர்கள் மிரட்டப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள். அடுத்து மாலை முரசில் வந்தது. அவர்களுக்கு எச்சரிக்கை விட்டார்கள். அதேபோல தந்தி டிவியில் வந்தது. நேற்று முன்தினம் இரண்டாவது நாள் கருத்துக்கணிப்பு வந்தது. அந்த டி.வி.யை மிரட்டி, அவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். இன்றைக்கு ஜூனியர் விகடனில் வந்திருக்கிறது. எவ்வளவு நாள் இந்த ஆட்டம்? இன்னும் நான்கு நாட்கள்தான் இந்த ஆட்டம் ஆடப்போகிறீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் எந்த இடத்திற்குப் போகப்போகிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

அந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. கருத்துக் கணிப்பு என்பது, நாம் செய்யும் பணிகளுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரக்கூடியது. அதனால் இன்னும் நாம் பணியாற்ற வேண்டும். நான் இன்னும் உறுதியோடு சொல்கிறேன். 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும். அதற்குரிய பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். அதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர், கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர்.

அதில், “ பத்திரிகைகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பைக் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளா? கடந்த காலத்தில் எத்தனை கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போயின என்பதை அனைவரும் அறிவோம்.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோர் தேர்தல் களம் கண்ட காலங்களில் கூட, கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள், மக்களின் தோ்தல் தீர்ப்புகளின் முன், முனை மழுங்கிப் போயின என்பதைத் தமிழகம் நன்கு அறியும். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரசாரங்களால் மக்கள் யாரும் தங்களது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினர் அனைவரும், கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடர் வெற்றிக்குத் தொய்வின்றி உழைப்போம்” என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார். சிங்காநல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் தீர்ப்பு வழங்குவதற்கு நாட்கள் குறைவாக இருக்கிறது. தேர்தல் களத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறோம். எனவே கருத்துக் கணிப்புகளை நாங்கள் நம்புவதில்லை. எங்களைப் பொருத்தவரை அது கருத்து திணிப்புகள்” என்று கூறியுள்ளார்.

அதே சமயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் சொல்வது போல் கருத்துக் கணிப்பா அல்லது கருத்து திணிப்பா என்பது மே 2 ஆம் தேதி தெரிந்துவிடும்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 1 ஏப் 2021