மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

மம்தா தொகுதியில் இன்று தேர்தல்: 144 தடை, பதற்றம், போலீஸ் குவிப்பு!

மம்தா தொகுதியில் இன்று தேர்தல்: 144 தடை, பதற்றம், போலீஸ் குவிப்பு!

எட்டு கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்க மாநிலத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நீடித்துவரும் பதற்றத்தால் மத்திய போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் கடந்த 27ஆம் தேதியன்று 30 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இரண்டாம்கட்டமாக 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியும் அடக்கம். இங்கு போட்டியிடும் மம்தா பானர்ஜிக்கும் பாஜக சார்பில் போட்டியிடும் அவரின் முன்னாள் அமைச்சரவைக் கூட்டாளியும் சீடருமான சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நந்திகிராமில் மட்டுமே போட்டி என்றாலும், அந்தத் தொகுதியை உள்ளடக்கிய கிழக்கு மித்னாப்பூர் மாவட்டம் முழுவதுமே திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்துவருகின்றன.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே நேற்று தொகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது தேர்தல் ஆணையம். நாளை (ஏப்ரல் 1) வெள்ளிக்கிழமை இரவுவரை இந்தத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்திரண்டு கம்பெனி மத்திய போலீஸ் படைகள் தேர்தல் பணிக்காக இறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பெனியிலும் சுமார் 80-120 பேர் இருப்பார்கள். இவர்கள் தவிர, 22 அதிவேக தாக்குதல் படையும் தயார்நிலையில் இருக்கும். மாநில போலீஸ்காரர்களும் தேர்தல் பணிக்கு துணையாக இருப்பார்கள்.

அதிகமான பாதுகாப்புப் படைகளின் குவிப்பால், தொகுதி நேற்றே வெறிச்சோடிக் காணப்பட்டதாக வங்கத்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கே சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன; மக்கள் நடமாட்டமே குறைந்துபோனதால் இ-ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களும் காலியாகவே நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.

தேர்தல் ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமாக நடந்துவந்தாலும், வன்முறை அச்சமும் பீதியும் தொடரத்தான் செய்கின்றன. முதலமைச்சரான மம்தா ஒரு வாரத்துக்கும் மேலாகவே முன்வைக்கும் குற்றச்சாட்டு, வெளிமாநில குண்டர்கள் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள் என்பது. அதில் எந்த அளவு உண்மை என்பது இருக்க, நந்திகிராம் தொகுதியிலேயே பல இடங்களில் திரிணமூல் கட்சியினர் மீது பாஜகவினர் கும்பலாகப் போய் தாக்கிவருவதாக மம்தாவும் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.

மம்தாவின் கட்சியிலிருந்து சுவேந்து அதிகாரி குடும்பத்தினர் ஒவ்வொருவராக பாஜகவுக்குத் தாவத் தொடங்கிய கடந்த டிசம்பர் முதலே, திரிணமூல் கட்சியினர் தாக்கப்பட்டு வருகின்றனர். அந்தக் கட்சியில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றக் கூடாது என மிரட்டப்படுவதாகத்தான் பெரும்பாலான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகத்தினரிடம் கூறுகின்றனர்.

டெங்குவா எனும் ஊரில் கடந்த செவ்வாயன்று இரண்டாம்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த மம்தா, 20 நாள்களுக்குப் பிறகு சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார். பிரச்சார நிறைவுக் கூட்டத்தை தேசிய கீதத்துடன் முடிப்போம் எனக் கூறிவிட்டு, ’எழுந்து நிற்கப் பார்க்கிறேன்’ என்றபடியே எழுந்து நின்றார்.

அந்தக் கூட்டம் முடிந்த பின்னர், கட்டுப்படுத்த முடியாமல் அழுத அந்த இளைஞரைப் பார்த்து, வெகுண்டு எழுந்தவராகச் சொன்னார்: “நான் அங்கு போகத்தான் வேண்டும்... யார் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்துவிடுவோம்.”

அவருடைய திரிணமூல் கட்சியின் ஆதரவாளரான ராபின் மன்னா என்பவரை, ஒரு கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பலராம்பூர் பகுதியில் அவருடைய வீட்டுக்கு வெளியே நின்றிருந்தபோது, பாஜக ஆட்கள் சிலரே அவரைத் தாக்கியதாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். மம்தாவிடம் முறையிட்டவர், அவரின் மகன் ராஜு மன்னா.

தன் வாகன அணியை பலராம்பூருக்கு விடச்சொன்னார் மம்தா. அந்தப் பகுதியே சாதாரண சாலையிலிருந்து துண்டிக்கப்பட்ட இடங்களாகவே இருக்கும் என்பதால், மாலை 5.30 மணிக்கு மேல் அங்கு போவது, அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள். ஆனாலும் மம்தா விடவில்லை.

“இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? ஒரு இளைஞன், தன்னுடைய சொந்த வீட்டில், தன்னுடைய குடும்பத்தினருடன் வாழப் பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு பயங்கர பீதிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறான். இந்தப் பகுதியில் பாஜகவினர் எல்லாரையும் இப்படி பீதியூட்டிக்கொண்டு இருக்கின்றனர். இது தொடரக் கூடாது” என்றவர், ராஜு மன்னாவையும் கூட்டிக்கொண்டு, அவர்களின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

பலராம்பூருக்குச் செல்ல போலீஸார் யோசித்ததில் காரணம் இல்லாமல் இல்லை; செல்லவேண்டிய 10 கிமீ தொலைவுக்கு பாதையில் சேறும் பள்ளமேடுமாக இருக்கும். இருட்டில் அந்த வழியாகப் போவது உசிதமில்லைதானே என்பது அவர்களின் யோசனை.

எப்படியோ பலராம்பூருக்குச் சென்றுவிட்டார் மம்தா. தாக்கப்பட்ட மன்னாவின் மனைவி, மகள், அவரின் தந்தை என மொத்த குடும்பமும் மம்தாவின் காலில் விழுந்து கதறிவிட்டார்கள்.

”நாங்கள் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போன வெள்ளிக்கிழமை நள்ளிரவு 20 பாஜக குண்டர்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினார்கள். எங்கள் அப்பாவைக் கேட்டார்கள். அவரை மிரட்டியதுடன் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள்” என்றார் ராஜு மன்னா.

என் கணவரை அவர்கள் சாகடித்தக்கத்தான் இல்லை; அவ்வளவு மோசமாகத் தாக்கினார்கள்; அன்றைக்கு இரவு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாஜகவினர் அத்தனை மிரட்டல்களை விடுத்தார்கள் என அழுதபடியே முறையிட்டார், ராஜுவின் தாயார் லட்சுமி மன்னா.

ஓட்டுப் போடப் போகக் கூடாது என அவர்கள் எச்சரித்துவிட்டுப் போனார்கள் என மம்தாவிடம் சொன்னார், குடும்பத்துப் பெரியவர் மனோரஞ்சன்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, தேவையான உதவிகளையும் செய்ய உத்தரவிட்டார், மம்தா.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “பாஜக, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதில்லை. இதனால் அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். வெளியிலிருந்து வன்முறை கும்பலை இங்கு இறக்குகிறார்கள் என எத்தனையோ முறை நான் சொல்லிவிட்டேன்” என்றார்.

பாஜகவின் பயங்கர சூழல் என புகார் கூறிய மக்களிடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகே, அங்கிருந்து கிளம்பினார், மம்தா.

தேர்தல் ஆணையம் கூறுவதைப்போல, இரு பெரும் முக்கியப் புள்ளிகள் போட்டியிடுவதால்தான் இவ்வளவு பதற்றம் என்றால், அதே காரணத்துக்காகவே, இப்படியான பயபீதி இல்லாமல் செய்வதும் அவர்களின் கடமைதானே!

- இளமுருகு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

வியாழன் 1 ஏப் 2021