மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ஆளும்கட்சியை அலறவிடும் அதிகாரிகள் படை , ஆனாலும் பணப்பட்டுவாடாவுக்கு ஏதுமில்லை தடை!

ஆளும்கட்சியை அலறவிடும் அதிகாரிகள் படை , ஆனாலும் பணப்பட்டுவாடாவுக்கு ஏதுமில்லை தடை!

எண்ணி ஐந்தே நாட்கள்தான் இருக்கிறது; அதற்குள் என்னென்ன நடக்குமோ என்று அச்சம் பரவத் துவங்கியிருக்கிறது கோவையில். நேற்று முன் தினம் பிரதமர் மோடி வந்து, தாராபுரத்தில் பரப்புரை செய்து விட்டுப் போனார். நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் இன்று கோவை, நீலகிரியில்தான் பரப்புரை செய்யவுள்ளனர். இந்த முறை தேர்தல் துவங்கியதிலிருந்து முடியும்வரையிலும் மேற்கு மாவட்டங்களில் மாறிமாறி தலைவர்கள் முற்றுகையிடுவது, இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலம் எவ்வளவு முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளது. இதன் காரணமாகவே, எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் நடந்துவிடுமா என்ற அச்சமும் பதற்றமும் பரவிக்கொண்டிருக்கிறது.

அதற்குக் காரணமாக சில சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பேசுவதற்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு நேற்று வந்தபோது, அவரை வரவேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியினர், நுாற்றுக்கணக்கான டூ வீலர்களில் பாஜக கொடிகளுடன் நகருக்குள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது டவுன்ஹால் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் கடைகளை அடைக்கச் சொல்லியிருக்கின்றனர். அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும்போதே, செருப்புக்கடை ஒன்றில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கற்களை எறிந்துவிட்டனர். இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் போலீசார் சாதுர்யமாகச் செயல்பட்டு, இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போக வைத்து விட்டனர். இல்லாவிடில் அதே இடத்திலேயே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் யூகிக்கவே முடியவில்லை.

ஏற்கெனவே மதக்கலவரம், குண்டு வெடிப்பு போன்றவற்றால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, கோவை மாநகரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது கோவை மக்களிடையே பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில், ‘இன்று கோவை தெற்கில் உண்மையாக நடந்த சம்பவம் என்ன?’ என்று தலைப்பிட்டு, ‘இந்து முன்னணி மற்றும் பாஜக தொண்டர்கள் அமைதியாக ஊர்வலம் செல்லும் பொழுது, டவுன்ஹால் பகுதியில் இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு எதிர்வினையாக ஊர்வலம் சென்ற நபர்கள் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் மட்டும் தான் எழுப்பினர். இச்சம்பவத்தில் இரு தரப்பினரும் வாக்குவாதத்திலும், வன்முறையிலும் ஈடுபடவில்லை. தவறான செய்திகளைப் பரப்புதல் செய்து யாரும் கோவை போல் அமைதி பூமியில் வன்முறையை தூண்ட வேண்டாம்!’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவுவதற்குள், பாரதிய ஜனதா கட்சியினர் கல்லெறியும் வீடியோ காட்சி, பல்லாயிரக்கணக்கில் பகிரப்பட்டிருந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியினரும் அறிக்கையோ, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்தோ வெளியிடாதிருந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் இதுகுறித்து ‘‘கலவர ஸ்பெலிஸ்ட்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என்று ட்வீட் செய்தார். ட்விட்டரில் கமெண்ட் போட்ட கையோடு, சிறிது நேரத்தில் கிளம்பி, கல்லெறியப்பட்ட வி.எம்.காலணியகத்துக்கே சென்று, அங்குள்ள கடைக்காரரிடம் நேரில் பேசி தன் ஆறுதலையும் தெரிவித்தார். அங்கேயே தனக்கு சில காலணிகளையும் வாங்கிக் கொள்ள சுற்றிலும் இருந்த இஸ்லாமிய கடைக்காரர்கள் பலரும் அங்கு குவிந்து விட்டனர். அவர்கள் கோவையில் சமூக நல்லிணக்கம் எப்படி இருந்தது என்பதையும், சிலரால் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசிய கமல், ‘‘இரண்டு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப் படுவார்கள். அவர்களுடைய எண்ணங்கள் ஈடேற விடாமல் நீங்கள் பொறுமையுடனும் புத்திக்கூர்மையுடனும் செயல்பட வேண்டும்’’ என்று கமல் கூற, அங்கிருந்தவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, கமலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியே உணர்ச்சிமயமாக இருந்தது.

கோவையில் இப்படி ஏதாவது நடக்குமென்று, தேர்தல் ஆணையம் யூகித்ததா என்பது தெரியவில்லை. அடுத்தடுத்து அதிகாரிகளை அதிரடியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. முதலில் ஆளும்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் என்று திமுக சார்பில் புகாரளிக்கப்பட்ட கோவை ஆட்சியர் ராஜாமணி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் இருவரும் மாற்றப்பட்டு, தேர்தல் அல்லாத பணிகளில் நியமிக்கப்பட்டனர். அந்த மாற்றத்தால் ஆளும்கட்சியினரும், அவர்களுக்கு ஆதரவாகப் பணியாற்றும் அதிகாரிகளும் சற்று அச்சமடைந்து ஒதுங்க ஆரம்பித்தனர். ஆனால் ஆளும்கட்சியினர் கொடுத்த உற்சாகம் மற்றும் ஊக்கத்தொகையால் வழக்கம்போல், மீண்டும் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், ஆட்சியரும் காவல் ஆணையரும் மாற்றப்பட்ட ஒரே வாரத்திற்குள், மேற்கு மண்டல ஐ.ஜி., தினகரன், ரூரல் எஸ்பி அருளரசு இருவரையும் மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இவர்களும் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவானவர்கள் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பதிலாக மேற்கு மண்டல ஐ.ஜி.யாக அமல்ராஜ், புதிய கோவை ரூரல் எஸ்.பி.யாக செல்வரத்தினம் என்ற இளம் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் தேர்தலை முன்னிட்டு, இரண்டு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு மதங்களையும் சாராத இருவரை காவல் ஆணையர் மற்றும் ஐ.ஜி., ஆக நியமித்திருப்பதாக கோவை மக்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது. இவர்கள் இருவரும் அமைச்சர் வேலுமணியின் பரிந்துரையால் கோவையிலிருந்து மாற்றப்பட்டவர்கள் என்ற தகவலும் கோவை போலீசார் வட்டாரத்தில் பரவியிருக்கிறது. இதனால் தேர்தலிலும், வாக்கு எண்ணிக்கையிலும் ஆளும்கட்சியினர் எந்த அத்துமீறலிலும் முறைகேட்டிலும் ஈடுபட முடியாது என்று பலரும் நம்புகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகள், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக நடக்கும் நகர்வுகளாகவே ஆளும்கட்சியினர் கருதுகின்றனர். அதேநேரத்தில், மேல்நிலையிலுள்ள அதிகாரிகளை மாற்றினாலும், கடந்த பல ஆண்டுகளாக வேலுமணியின் ஆதரவில் நல்ல பசையுள்ள பதவிகளில் இருந்த மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்கள்தான், களத்தில் கீழ்நிலையில் பணியாற்றுவதால் பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமீறல் என எதுவுமே கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற குமுறலும் எதிர்க்கட்சியினரிடம் காணப்படுகிறது. மிக முக்கியமாக, தொண்டாமுத்துார் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் நிலையில் இதுவரை பெரிய தொகை எதுவும் பிடிபடாததே இந்த சந்தேகத்திற்குக் காரணமென்கின்றனர் திமுகவினர்.

தொண்டாமுத்துாரில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ‘‘அமைச்சர் தரப்பு ஏற்கெனவே பல இடங்களிலும் பணத்தைப் பதுக்கி விட்டது. இனிவரும் நாள்களில் தங்கு தடையின்றி, பணத்தை பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். கீழ்நிலை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதைத்தடுக்கவே முடியாது!’’ என்கிறார். அவர் சொல்வதைப் போலவே தமிழகத்திலேயே அதிகமாகப் பணம் புழங்கும் தொகுதி என்று எதிர்பார்க்கப்படும் தொண்டாமுத்துார் தொகுதியில் இதுவரை மிகமிகக்குறைவான பணமே பிடிக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பற்றி நம்மிடம் விளக்கினார் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி ஒருவர்...

‘‘தமிழகத்தில் செலவினப்பதற்றம் அதிகமுள்ள தொகுதிகளாக 105 தொகுதிகளை, தேர்தல் ஆணையம் கண்டறிந்து பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் கோவை மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்துார், கமலும் வானதி சீனிவாசனும் மோதும் கோவை தெற்கு, பாலியல் விவகாரத்தில் பரபரப்பான பொள்ளாச்சி தொகுதி, மேட்டுப்பாளையம் ஆகிய நான்கு தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் பரப்புரை துவங்கிய நாளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்பு வரை பிடிபட்ட பணத்தைப் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் பார்த்தால் கோவை தெற்கு தொகுதியில் 6,59,180 ரூபாய் மட்டுமே பிடிக்கப்பட்டிருக்கிறது. கோவையின் பெரும்பாலான நகைக்கடைகள், தங்கநகைக்கூடங்கள் எல்லாமே அந்தத் தொகுதியில்தான் இருக்கின்றன. ஆனால் அங்கே தங்கமோ, வெள்ளியோ பெரியளவில் பிடிபடவில்லை. காரணம், அங்கே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் நிற்பதால்தான்.

அதேபோல தொண்டாமுத்துார் தொகுதியில் வெறும் 24 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்தான் பிடிபட்டிருப்பதாக அதிகாரிகள் கணக்குக் காண்பித்துள்ளனர். அதிலும் 4 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் திரும்பத் தரப்பட்டுள்ளது. அங்கே 2960 கிராம் தங்கமும், 1362 கிராம் வெள்ளியும் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திமுக எம்எல்ஏ கார்த்திக் நிற்கும் சிங்காநல்லுார் தொகுதியில் ஒரு கோடியே 78 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 9 லட்ச ரூபாய் திரும்பத் தரப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் கூட 3 கிலோ தங்கம் பிடிபட்டிருக்கிறது. இதிலிருந்தே அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பது நன்றாகத் தெரியும்!’’ என்றார்.

ஆனால் இதை மறுக்கும் போலீஸ் அதிகாரிகள் சிலர், ஆளும்கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும் எப்படி எப்படி பணத்தைக் கொண்டு போகின்றனர் என்பதைத் தெளிவாக விளக்கினார்...

‘‘இப்போதெல்லாம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருப்பதால் பணம் கடத்துவது எளிதாகிவிட்டது. 100 நோட்டு வைத்தால் 2 லட்சம். வேஷ்டி கட்டிய ஒருவர் வேஷ்டியைச் சுற்றி பெல்ட் போல பணத்தைக் கட்டி 500 நோட்டுகளை எளிதாகக் கடத்திவிடலாம். காரில் போனால்தான் சிக்கல். டவுன்பஸ்சில் ஏறிக் கொடுத்து விட்டு வந்து விடலாம். ஒரு நாளில் இப்படி ஒரு நபரே 50 லட்சம் கடத்திவிடலாம். கிராமப்புறங்களில் பச்சை நிறத்தில் பெல்ட் கட்டுவார்களே. அந்த பெல்ட்டில் ஐந்திலிருந்து பத்து லட்ச ரூபாய் கொண்டு போகலாம். அதேபோல, புதிதாகத் துணி எடுத்துக் கொண்டு போவது போல, பெண்களிடம் ஜவுளிப்பைகளில் பணத்தைப் போட்டு பஸ்களில் ஏற்றி விடுகிறார்கள். யாரும் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. டூ வீலரிலேயே பணத்தைக் கொண்டு போய்விடுகிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மண்டலத் தலைவர் ஒருவரின் கணவர், சென்ற தேர்தலில் திண்டுக்கல்லில் திமுகவில் நின்ற தன் உறவினருக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை தன் ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டு கோவையிலிருந்து கொண்டு போய்க் கொடுத்து விட்டு திரும்ப வந்து விட்டார். இப்படியாக பணம் கொண்டு போவதை யாராலும் தடுக்கவே முடியாது. ஆளும்கட்சியினர் மட்டுமில்லை; எதிர்க்கட்சியினரும் புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடித்து, பணத்தைக் கொண்டு போகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயத்தில் எல்லாக் கட்சியினரும் ஒற்றுமையாக இருப்பதால் யாரும் யாரையும் போட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். பணத்தைப் பிடித்துக் கொடுத்து விட்டால், உங்களுக்குத் தரும் பணத்தை அவர்கள் பிடித்துக் கொடுத்து விட்டார்கள் என்று மக்களின் வெறுப்பை தங்கள் மீது திருப்பிவிட்டுவிடுவார்கள் என்கிற பயம் எல்லாக் கட்சியினரிடமும் இருக்கிறது. மக்களாகப் பார்த்து பணம் வாங்க மறுத்து திருந்தினால் மட்டுமே இதற்கு முடிவு கட்ட முடியும். இல்லாவிட்டால் நுாற்றில் 10 சதவீதப் பணத்தைக் கூட நம்மால் பிடிக்க முடியாது என்பதே நிஜம்!’’ என்றார்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்...கொங்கு மாறினால் எல்லாம் மாறும்!

–பாலசிங்கம்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 1 ஏப் 2021