மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

பிரதமர் தகுதிக்கு இப்படி பேசுவது அழகல்ல: வைகோ

பிரதமர் தகுதிக்கு இப்படி பேசுவது அழகல்ல: வைகோ

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மதிமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்கு சேகரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று, மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இது அவர் தரத்துக்கு, தகுதிக்கு அழகல்ல. தமிழ்நாட்டில் திமுகவில் பெண்களை, தாய்மார்களை இழிவுபடுத்துகிறார்கள். பெண்களை மதிப்பதில்லை எனப் பிரதமர் பேசுகிறார். நீங்கள் இப்படிப் பேசலாமா?

யோகி ஆதித்யநாத் எங்கு ஆட்சி புரிகிறார். கனடாவிலா, ஆப்பிரிக்காவிலா... இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் தானே.

பாஜக ஆட்சி நடத்துகிற அந்த மாநிலத்தில், 2019இல் 59,853 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே அந்த மாநிலத்தில் தானே அதிக குற்றம் நடப்பதாக இந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மொத்த குற்றங்களில் 14 சதவிகிதம் உபியில் தான் நடந்திருக்கிறது.

2020 செப்டம்பர் 14ஆம் தேதி ஹத்ராஸில் ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது. உங்களின் நேரடிப்பார்வையில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் தானே?

தமிழ்நாட்டைப் பற்றியும் எட்டயபுரத்தைப் பற்றியும் பாரதியாரைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் மோடி பேசுகிறார். இப்படி எல்லாம் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால், தூத்துக்குடியில் உங்களின் நண்பர் அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் நிறுவனம் உள்ளது. அங்கு போராடியபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதில் இரண்டு பேர் பெண்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?

இப்படி கொடூரச் சம்பவங்கள் நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியாதா? இங்கே உள்ள அரசு ஊழல் அரசு, ஊழல் காரணமாகத்தான் புழு பூச்சிகளைப்போல் உங்கள் காலடியில் கிடக்கிறார்கள். உண்மைத்தேரைகளாக இருக்கிறார்கள், கொத்துப்பூச்சிகளாக இருக்கிறார்கள்.

அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் கொடுத்தார். அதில் முதலமைச்சர், தனது உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஒப்பந்த வேலைகளை ரூ.6,300 கோடி கொடுத்துள்ளார். வருமானத்துக்கும் அதிகமாக ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார்.ஆனால், வழக்கம்போல் ஆளுநர் அதனை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்.

இவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டத்தையும் பெற முடியாது. இதனால்தான் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்தார்கள். இவர்களும் பாமகவும் எதிர்த்து ஓட்டுப்போட்டிருந்தால் அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. இந்த ஆட்சியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர்” என்று குறிப்பிட்டார் வைகோ.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 1 ஏப் 2021