வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக உபி முதல்வர் வாக்கு சேகரிப்பு!

politics

கோவை மண்ணிலிருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (மார்ச் 31) தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார்.

 கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி இரட்டை விரலைக் காட்டி வாக்குகளைச் சேகரித்தார்.

அப்போது, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் வாகன பேரணியில் ஈடுபட்டனர். புலியகுளம் பகுதியில் துவங்கிய வாகன பேரணி ராமநாதபுரம், சுங்கம், உக்கடம் வழியாகச் சென்று தேர்நிலை திடலை வந்தடைந்தது. இதில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசுகையில்,  “ராமரின் புண்ணிய பூமி உத்தரப் பிரதேசம். உத்தரப் பிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோயிலுக்குத் தமிழகத்திலிருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. அதற்காக 130 கோடி மக்கள் சார்பாக தமிழக மண்ணிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். சுயச்சார்பு பாரதத்தைப் பறைசாற்றும்படி இருக்கும் பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகத்தின் மீது இருக்கிறது. தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைத்து முடிக்கும்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகும்.

இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில், அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். . தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே புதிய விடியலை ஏற்படுத்தும். இந்தியாவில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வீடு, சிலிண்டர், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்திற்கு 54 லட்சம் கழிப்பறைகளைக் கட்டி கொடுத்துள்ளது மத்திய அரசு. வரும் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அதிகப்படியாக நிதி மற்றும் திட்டங்கள் தமிழகத்தை வந்து சேரும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையும் இடம் பெற்றுள்ளது. கோவைக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பெண்களை இழிவுபடுத்துகின்றன.

பெண்களை அவமதிக்கும் தி.மு.க ஆட்சிக்கு வர தகுதியற்றது. வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்குப் பாதுகாப்பு போன்றவைதான் அதிமுக-பாஜக கூட்டணியின் நோக்கம்” என்று தெரிவித்தார்.  

**-சக்தி பரமசிவன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *