மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

‘ உலக மகா நடிப்புடா சாமி’ : ஓபிஎஸ் குறித்து ஸ்டாலின்

‘ உலக மகா நடிப்புடா சாமி’ : ஓபிஎஸ் குறித்து ஸ்டாலின்

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் தங்கத் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கம்பம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் மகராஜன் பெரியகுளம் வேட்பாளர் சரவணகுமார் அகியோரை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “போடிக்கு வந்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட போது, பன்னீர்செல்வத்தை மறைமுகமாகத் தாக்கி விட்டுச் சென்றிருக்கிறார். பன்னீர்செல்வத்தை, “ஓ.பி.எஸ். இந்த மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை” என்று பேசியிருக்கிறார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள். அதை இந்த நாட்டு மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’. விடாக்கண்டன் ஓ.பி.எஸ்., கொடாக்கண்டன் இ.பி.எஸ்.

பழனிசாமி, அவரை இந்த மாவட்டத்தின் கொடை என்று சொல்லி, நீங்கள் இங்கேயே இருங்கள், வெளியில் வந்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இது புரியாமல் ஓ.பி.எஸ். தலையாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அ.தி.மு.க.விற்குத் துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். அவ்வாறு பார்த்தால் அ.தி.மு.க.விற்கு முதன்முதலில் துரோகம் செய்தவர் யார்? ஆட்சிக்கு எதிராக 11 ஓட்டுப் போட்டார்களா? இல்லையா? அந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டும் போட்ட 11 பேரும் டெபாசிட் வாங்கலாமா?

இப்போது ஓ.பி.எஸ்-ஐ எல்லோரும் பெரிய தியாகி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையாக அவர் தியாகி அல்ல, பெரிய புத்திசாலி. ஏனென்றால் தோற்கப் போகின்ற அ.தி.மு.க.விற்கு பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னார்.

அதேபோல, அரசியலில் சிலருக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கும். ஓ.பி.எஸ்.க்கு ஒருமுறை அல்ல, மூன்று முறை முதலமைச்சர் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? இந்த நாட்டுக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவிற்கு உண்மையாக இருந்தாரா?

ஒரு தியான நாடகத்தை நடத்தினார். பதவிக்காகத் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அதை விசாரிக்க விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று கேட்டாரா? இல்லையா? ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். “உங்கள் சாவுக்கு யார் காரணம்? அதைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன். அதற்கு விசாரணைக் கமிஷன் வேண்டும்” என்று சொன்னாரா? இல்லையா?

உடனே விசாரணைக் கமிஷன் வைத்தார்கள். அவ்வாறு விசாரணை கமிஷன் வைத்தவுடன் அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்குப்பிறகு அதை மறந்து விட்டார். அந்த விசாரணைக் கமிஷன் அவரைப் பலமுறை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியது. அவர் ஒருமுறையாவது சென்று அந்த விசாரணைக் கமிஷன் முன் ஆஜரானாரா? இல்லை.

ஜெயலலிதா இருந்தவரை நின்று தரையைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தவர். இப்போது ஜெயலலிதாவைத் தலைமுழுகி விட்டார். ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்த இவரை இந்தத் தேனி மாவட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவரை இந்தத் தேனி மாவட்டத்திலிருந்து விரட்ட வேண்டுமா? வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் இந்த தொகுதிக்கு ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் வருகிறது என்று சொன்னவுடன் வாக்கு வாங்குவதற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு பெரிய நாடகத்தை நடத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கடைசிச் சட்டமன்றக் கூட்டத்தொடர். இனிமேல் சட்டமன்றத்திற்கு எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது. அந்தக் கூட்டத்தொடரில் ஓ.பி.எஸ்.ஐ வைத்துக்கொண்டு உள்ஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை பழனிசாமி கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது அமைதியாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஓ.பி.எஸ்.

ஆனால் இப்போது அது நிரந்தரச் சட்டம் அல்ல, தற்காலிகமான சட்டம்தான் என்று சொல்கிறார்.

ஆனால் அந்தச் சட்டம் நிறைவேறிய போது அருகிலிருந்து கைதட்டி வரவேற்றிருக்கிறார். அவர் மட்டுமல்ல, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும் அது தற்காலிகம் என்று பேசியிருக்கிறார்.

உடனே இன்றைக்கு பாமக நிறுவனர் நிறுவனர் ராமதாஸ் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். “நான் ஓ.பி.எஸ். அளித்த அந்தப் பேட்டியைப் படித்தேன். அதிர்ச்சிக்கு ஆளானேன். உடனடியாக நான் முதலமைச்சரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் அவ்வாறு அல்ல, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானதுதான்” என்று சொல்லியிருக்கிறார்." இது என்ன கூத்து!

எனவே மக்களை ஏமாற்றுவதற்காக, எப்படியாவது வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகத்தை இன்றைக்கு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? தங்களது தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். நிச்சயமாக நீங்கள் தான் வருகின்ற 6 ஆம் தேதி ஏமாறப்போகிறீர்கள். அது உறுதி.

நேற்று மோடி தாராபுரம் வந்த போது அவரை பார்த்து ஓ.பி.எஸ். “உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” என்று பாராட்டிப் பேசுகிறார். இவ்வளவு நாட்களாக பத்திரிகைகளில் ஓ.பி.எஸ். தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் அவரே கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று சொல்கிறார். இது என்ன நடிப்பு. சினிமாவில் ஒரு டயலாக் வரும், “உலக மகா நடிப்புடா சாமி” அதுபோலத்தான் இருக்கிறது” என்று விமர்சித்தார்.

நேற்று இரவு ராஜபாளையத்தில் பேசிய ஸ்டாலின், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், “தினமும் மைக்கை பார்த்தால் எதையாவது உளறுவது, என்றைக்காவது தனது துறையை பற்றி ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறாரா.

கிடையாது. பால் வாங்குவதில் பெறக்கூடிய கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வாய் திறந்திருக்கிறாரா. ஆவினில் ரூ.300 கோடி வரை வருவாய் இழப்பு சந்தித்த போது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்கம் அளித்த புகாருக்கு பதில் கூறியிருக்கிறாரா. ஆட்சி வந்ததும் ராஜேந்திர பாலாஜியைச் சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை” என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 31 மா 2021