மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

பரபரப்பில்லாத பரப்புரை; பட்டை கிளப்பும் பரிவாரப்படை! இந்து வாக்கு வங்கியை உருவாக்க 60 ஆயிரம் பேர் களப்பணி

பரபரப்பில்லாத பரப்புரை; பட்டை கிளப்பும் பரிவாரப்படை! இந்து வாக்கு வங்கியை உருவாக்க 60 ஆயிரம் பேர் களப்பணி

தொகுதிப்பங்கீடு முடிந்தபோது கூட, பாரதிய ஜனதாவுக்குக் கொடுக்கப்படும் அத்தனை தொகுதியும் திமுகவுக்கு நாமாகவே எழுதித்தரும் தொகுதிதான் என்று அதிமுக தலைமையில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே பேசிக் கொண்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் கடுமையான களப்பணி, கட்டுப்பாடுகள், கடிவாளங்களின்றி இறக்கப்படும் காசு போன்ற காரணங்களால் ஒற்றை இலக்கத்திலாவது சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா பாதம் பதித்து விடுமென்ற நம்பிக்கை அந்தக் கட்சியினரிடம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு நான்கைந்து இடங்கள் கிடைக்குமென்று சொல்லியிருப்பது மேலும் அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்க முடியுமா என்று நமீதா முதல் நரேந்திரமோடி வரை எல்லோரும் களம் இறங்கி, சின்னச்சின்ன ஊர்களில் எல்லாம் பரப்புரை செய்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இவர்கள் ஒரு புறத்தில் ஓயாது ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு புறத்தில் சத்தமே இல்லாமல் கிராமம் கிராமமாகச் சென்று அமைதியாக பரப்புரை செய்து கொண்டிருக்கிறது 60 ஆயிரம் பேர் கொண்ட பரிவாரப்படை. இப்படியொரு தகவல் கிடைத்ததும் நமக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தகவல் வந்த திசையை நோக்கி நாம் நுால் பிடித்துச் சென்றபோது, இந்த ஆன்மிகப்படையின் நோக்கத்தையும், இலக்கையும் அறிய முடிந்தது.

அந்த பரிவாரப்படையைப் பற்றி அறிந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘உங்களுக்குக் கிடைத்த தகவல் உண்மைதான். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பரிவார அமைப்புகளில் முழு நேர ஊழியர்களாக இருக்கும் 60 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் தற்போது களம் இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழ், கன்னடம், மலையாளம் பேசத்தெரிந்த கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் இந்த பரிவாரப்படையில் இடம் பெற்றுள்ளனர். பத்து நாட்களுக்கு முன்பு, தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இவர்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக பாரதிய ஜனதா போட்டியிடும் 20 தொகுதிகளில் இவர்கள் அதிகளவில் களமிறங்கியுள்ளனர். இவர்கள் எல்லோரும் பிரச்சாரம் செய்யும் இடங்களிலோ, அவர்களின் பாணியிலோ பிரச்சாரம் செய்ய மாட்டார்கள்.

இவர்கள் போவது இந்துக்களின் வீடுகளுக்கு மட்டும்தான். வழிப்போக்கர் மாதிரி அல்லது ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர் மாதிரி தங்களைக் காண்பித்துக் கொள்வர். மலையாளி வீடாக இருந்தால் கேரளாவைச் சேர்ந்தவர், அங்கே செல்வார். கன்னடம் அறிந்த கன்னடியர், ஒக்கலிக்க கவுடர், மாத்வா போன்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு கர்நாடகாவிலிருந்து வந்தவர் அனுப்பப்படுவார். தெலுங்கு பேசும் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் செல்வார்கள். ஒவ்வொரு ஊரிலும் எந்த வீட்டில் இருப்பவர்களுக்கு செல்வம், செல்வாக்கு அதிகம் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த வீட்டில் இருப்பவர்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். இந்து மதத்தின் மேன்மையைப் பற்றி ஆன்மிக மயமாகப் பேச்சைத் துவக்கும் அவர்கள், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் சென்று, பாரதிய ஜனதா அரசு வந்த பின் இந்துக்களுக்காக செய்யப்பட்டுள்ள திட்டங்களை விளக்குவார்கள்.

ராமர் கோவில் கட்டுவதைப் பற்றி பூரிப்போடு பேசுவார்கள். இந்துக்கள் நலன் பற்றியும், இந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவார்கள். ஆனால் கடைசி வரை எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்லமாட்டார்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்வார்கள். ஒரு கிராமத்துக்குச் சென்றால் அங்கே சில வீடுகளில் போய் பேசிவிட்டு, அதே கிராமத்திலேயே கூட ஏதோ ஒரு திண்ணையிலோ, கோவிலிலோ தங்கிவிடுவார்கள். இப்படியே ஊர் ஊராகச் செல்வார்கள். மொத்தம் 60 ஆயிரம் பேர், நாளுக்கு நான்கு வீடுகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு நாளுக்கு இரண்டரை லட்சம் வீடுகளில் இருப்பவர்களை இவர்கள் சந்தித்து விடுவார்கள். இவர்கள் சந்தித்தவர்களில் 50 சதவீதம் பேரிடம் மாற்றம் நிகழ்ந்தாலே அது பெரிய வெற்றிதான். இந்தத் தேர்தலை மட்டும் இலக்காக வைத்து இவர்கள் இந்த வேலையைச் செய்யவில்லை. தேர்தலுக்குப் பின்னும் இவர்களின் பணிகள் தொடரும் வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் இந்துக்கள் வாக்கு வங்கியை உருவாக்குவது ஒன்றுதான் இந்த பரிவாரப்படையின் ஒற்றை அம்சத்திட்டம்.

சமீபத்தில் அரவக்குறிச்சியில் பாரதிய ஜனதா வேட்பாளர் அண்ணாமலையை பள்ளபட்டி பகுதிக்குள் உள்ளே விடமாட்டோம் என்று ஜமாத் சார்பில் அறிவித்தது, பெரும் பிரச்சினையாக வெடித்தது. வெகுண்டெழுந்து பேட்டி கொடுத்த அண்ணாமலை, ‘‘பள்ளபட்டி பாகிஸ்தானில் இல்லை. அங்கு எங்களுடைய பிரச்சார வாகனம் கண்டிப்பாகப் போகும்!’’ என்று பேட்டி கொடுத்தது பயங்கர வைரல் ஆனது. அதன்பின் ஜமாத் இறங்கிவந்து, எல்லாக்கட்சிகளின் பிரச்சார வாகனங்களும் வரலாம் என்று அறிவித்தது. ஜமாத் வெளியிட்ட அறிவிப்பே, இப்போது அங்குள்ள இந்துக்களை ஒன்று படுத்தியிருக்கிறது. அந்த அறிவிப்புக்கு முன், அண்ணாமலை வெற்றி பெறுவது கஷ்டமென்ற நிலை இருந்தது. இப்போது சமுதாயரீதியாகவும் அவருக்கு ஆதரவு பெருகி இருப்பதால் அவர் அங்கே ஜெயித்துவிடுவார் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இதற்கு பரிவாரப்படை ஆங்காங்கே உருவாக்கி வைத்த ஆதரவாளர்களின் களப்பணியும் முக்கியக் காரணம். இதேபோல தமிழகம் முழுவதும் இந்துக்களுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம். அதற்கு இந்த பரிவாரப்படையின் பணி பெரிதும் உதவும்!’’ என்றார்கள்.

அரசியலையும் ஆன்மிகத்தையும் பகுத்துப்பார்க்கும் தமிழகத்தில் இத்தகைய முயற்சிகள் இதற்கு முன்னும் எடுக்கப்பட்டிருப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, அதிகாரத்தில் இருப்போரின் ஆதரவு, சமூக ஊடகங்களின் தாக்கம் என பலமுனைத் தாக்குதல்கள் நடக்கும்போது எப்படிப்பட்ட கட்டமைப்பும் அசைக்கப்படும் என்பது உண்மைதான் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். சித்தாந்த ரீதியாக தமிழகத்தை மாற்றுவது சிறியதொரு காலஅவகாசத்தில் நடந்து விடும் மாற்றமாக இருக்காது என்பது திராவிட இயக்கச் சிந்தனையாளர்களின் நம்பிக்கையாகவுள்ளது.

தடம் மாறுமா தமிழகம்...தகர்க்கப்படுமா இந்த மாநிலத்தின் தனித்துவம்?

-பாலசிங்கம்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 31 மா 2021