மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

எடப்பாடியும் மோடியும்...! - இடதுசாரி தலைவர்களின் அட்டாக்!

எடப்பாடியும் மோடியும்...! - இடதுசாரி தலைவர்களின் அட்டாக்!

திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் இரண்டாவது சுற்றாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் மையப்படுத்தி பிரச்சாரம் செய்கையில், இடதுசாரி தலைவர்களோ நாடளவுக்கு இருக்கும் பிரச்னைகளையும் பிரதமர் மோடியின் அரசாங்கத்தையும் கையில் எடுத்துக்கொள்கின்றனர்.

சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பொதுச்செயலாளருமான பிரகாஷ் காரத், சென்னை துறைமுகம், அண்ணாநகர், பெரம்பூர் தொகுதிகளில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர், ” மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்து திணிக்கும் திட்டங்களை தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மறு பேச்சில்லாமல் ஆதரிக்கிறது. அதை எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. தமிழகத்தில் அடுத்து அமைய உள்ள அரசு, மோடி, அமித்ஷாவால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அரசாக இருக்காது.” என்றார்.

மேலும், “ கொரோனா தொற்றால் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். பேரிடர்க் காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மாறாக, தொழிலாளர், மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தது. அதை அதிமுக அரசு ஆதரித்தது. விமான நிலையங்களை அதானிக்கும், இரும்பு தொழிற்சாலை ஆகிய பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு விற்று வருகிறது. விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையை தனியாருக்கு விற்பதை எதிர்த்து தொழிலாளர்களோடு மக்களும் சேர்ந்து போராடுகிறார்கள். நிலக்கரி சுரங்கங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் இரும்பு தொழிற்சாலைகளை தனியாரிடம் விற்க முயற்சிக்கிறார்கள். இவற்றை அதிமுக கண்டிக்காமல் இருக்கிறது.

பேரிடர்க் காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு 7500 ரூபாய் வழங்க எதிர்க்கட்சிகள் கோரினோம். மத்திய அரசோ ஏழை எளிய மக்கள் மீது புதியபுதிய வரிகளை விதித்தது. பெட்ரோல் விலையில் 62 சதவீதம் வரியாக வசூலிக்கிறது. சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. அதேசமயம் பெருநிறுவனங்களுக்கு வரியைக் குறைத்துவருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால், பல பொருள்களின் விலை தானாக உயர்ந்துவிடும். ஆனால், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கை எதையும் அதிமுக எதிர்ப்பதே இல்லை. “ என அதிமுகவைப் பற்றிய விமர்சனங்களைப் பட்டியலிட்டார், பிரகாஷ் காரத்.

அத்துடன், “ ஆர்எஸ்எஸ் என்கிற பாசிச அமைப்பால் பாஜக இயக்கப்படுகிறது. இந்தியாவை இந்து நாடாக்கும் கொள்கையை பாஜக செயல்படுத்துகிறது. இதனால் சிறுபான்மையினர் இரண்டாந்தர குடிமக்களாக மாற்றப்படுவார்கள். வருண அடிப்படையில் சனாதான முறையில் எளிய மக்கள் நடத்தப்படுவார்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்துகின்றனர். காதல் திருமணங்களை லவ் ஜிகாத் என்ற பெயரிலும், மாட்டுகறி உண்பதை பசுவதை தடைச்சட்டம் என்ற பெயரிலும் தடுக்கின்றனர். இவற்றை எதிர்த்ததற்காக ஊபா சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு அதிமுக கூட்டு சேர்ந்துள்ளது.

அதிமுகவின் போர்வையில் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிப்பதை அனுமதிக்கமாட்டோம். அதிமுகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு போடும் ஓட்டுதான். கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதை எதிர்த்த போராட்டங்கள், வங்கி தனியார்மயத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தம், இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது. தமிழகத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள, உழைப்பாளர்களுக்கு பாதுகாப்பான அரசு அமைய வேண்டும். எனவே, பாஜக-அதிமுக அணியை தோற்கடித்து திமுக தலைமையில் மக்கள் நல ஆட்சி அமைத்து புதிய அத்தியாயத்தை எழுதுவோம்.” என்றும் காரத் பேசினார்.

சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அக்கட்சியின் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்கு கேட்டு அங்கு பேசினார். அப்போது அவர், அதிமுக அரசாங்கம் பாஜகவிடம் சரணாகதி அடைந்திருப்பதுடன், அதன் மூலம் நாட்டு மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டதாகவும் சாடினார்.

அக்கூட்டத்தில் பேசுகையில், ” இந்திய மக்கள், தமிழக வாக்காளர்களாகிய உங்களிடம் மிகவும் முக்கியமாக ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். உங்களுடைய வாக்குச்சீட்டின் மூலம் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும், இந்திய அரசமைப்புச்சட்டத்தை, மதச்சார்பின்மை மாண்புகளை, வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றைக்கு இந்தக் குடியரசின் அனைத்து மாண்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் ஒவ்வொரு உரிமையும் மிதித்து நசுக்கப்படுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த 370ஆவதுபிரிவு ரத்து மற்றும் பலவற்றைப் பட்டியலிடலாம். நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் சுயேச்சை அமைப்புகளான நாடாளுமன்றம், செயலாக்கத்துறை, உச்சநீதிமன்றம் என எந்த அமைப்பாக இருந்தாலும் அவை மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளன. இதற்குக் காரணமான பாஜக-வையும் அதற்கு சரணாகதி அடைந்துள்ள அதிமுக-வையும் தூக்கி எறிவதன் மூலம் இந்தியாவிற்கே ஒருமுன் மாதிரியாக விளங்க வேண்டும். ” என்றார் யெச்சூரி.

மேலும், “ நாட்டின் தலைநகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 120 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக? மோடி அரசாங்கம், விவசாயத்தை அழிக்கும் விதத்தில், விவசாயிகளை அழிக்கும்விதத்தில் கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்களால் உணவுப் பாதுகாப்பு அழிக்கப்பட்டுவிடும். பசி-பட்டினிச் சாவு ஏற்படும். ரேசன் விநியோக முறை ஒழிக்கப்பட்டுவிடும். இவற்றையெல்லாம் பாதுகாப்பதற்காகத்தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் தியாகிகளாகி இருக்கிறார்கள். ஆனாலும் போராடும் விவசாயிகளுடன் மோடி அரசாங்கம் பேச மறுக்கிறது. ஐமுகூ ஆட்சிக் காலத்தில் திமுக, இடதுசாரிக் கட்சிகள் ஆதரவுடன் மகாத்மா காந்திதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் ஆண்டிற்குக் குறைந்தபட்சம்100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் இதன்கீழ் இப்போது 42 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. இந்தச் சட்டத்தையும் ஒழிக்க மோடிஅரசு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.” என விவசாயிகளின் நிலைமையை விளக்கமாக எடுத்துவைத்தார் யெச்சூரி.

மக்களுக்குவிரோதமாக அம்பானி போன்றவர்களுக்கே சாதகமாக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“ நாடாளுமன்றத்தில் மோடி சுய சார்பு என்று (self-reliance) பேசினார். அவரைப் பொறுத்தவரை, செல்ஃப் என்றால் மோடி, ‘ரிலையன்ஸ்’ என்றால் அம்பானி. நாட்டிலுள்ள சொத்துக்கள் அனைத்தும் தனக்கும், தன்னைச் சேர்ந்த கூட்டுக் களவாணிகளுக்கும்தான் சொந்தம் என்கிறபடி மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் சுமார் 15 கோடிப் பேர் வேலை இழந்தார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்திலும்கூட மக்களுக்கு வேலை தரப்படவில்லை. சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே சமயத்தில் மோடியின் கூட்டுக்களவாணிகளோ உலகப் பணக்காரர்கள் வரிசைக்கு முன்னேறியிருக்கிறார்கள். நாட்டின் செல்வங்கள் நாட்டு மக்களுக்குத்தான் சொந்தம். பிரதமர் என்பவர் அவற்றை மேற்பார்வை செய்திடும் மேலாளர் மட்டுமே. நாட்டின் செல்வங்களைச் சூறையாடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் பிரதமர் மோடியோ நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், எண்ணெய் நிறுவனங்களையும், ஏர் இந்தியாவையும், வங்கிகளையும், கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் தனியாரிடம் தாரைவார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்.” என்றவர்,

”இவற்றைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய மோடி அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டங்களுக்கும், அதிமுக ஆதரவு அளித்துள்ளது” என்று முத்தாய்ப்பு வைத்தார், யெச்சூரி.

-இளமுருகு

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 31 மா 2021