15 லட்சம் வேண்டாம், 15 ரூபாய் கொடுத்தீர்களா: ஸ்டாலின்

politics

ஊழலை ஒழிப்போம் என அதிமுக தலைவர்களை வைத்துக்கொண்டு மோடி பேசுவதா எனத் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தென்காசி மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஆலங்குளம் (திமுக) பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி (காங்கிரஸ்) பழனி நாடார், கடையநல்லூர் (முஸ்லிம் லீக்) முகம்மது அபு பக்கர், சங்கரன்கோவில் (திமுக) ராஜா, வாசுதேவ நல்லூர் (மதிமுக) சதன் திருமலைக்குமார் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.

அப்போது பேசிய அவர், நாம் தற்போது காமராஜர் சிலை அருகில் நின்று கொண்டிருக்கிறோம். கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்து ஆட்சி நடத்திய போது சாமானியர்களின் ஆட்சியாகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய ஆட்சியாகவும் இருந்தது.

காமராஜருக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு தந்தை மகன் உறவு போன்று இருந்தது. காமராஜர் உடல் நலிவுற்று அவருடைய வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நெருக்கடிக் காலத்தில் அவருடைய வீட்டிற்குச் சென்ற கருணாநிதி நெருக்கடி நிலையை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆட்சியிலிருந்து விலகி விடலாமா என யோசனை கேட்டார்.

அப்போது காமராஜர், இந்தியாவில் சுதந்திரக் காற்றைத் தமிழ்நாட்டில்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் ராஜினாமா செய்து விடக் கூடாது என கருணாநிதியிடம் கூறினார்.

என் திருமணத்தின் போது காமராஜர் உடல் நலக் குறைவாக இருந்ததால் திருமண மேடைக்கே அவரது கார் வந்து செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. மேடைக்கு காரிலேயே வந்து எங்களை வாழ்த்தினார் காமராஜர். காமராஜருக்குக் காந்தி மண்டபம் அருகில் நினைவு மண்டபம்,

சென்னை மாநகராட்சியில் காமராஜருக்கு சிலை , கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணி மண்டபம் , நெல்லையில் காமராஜருக்கு சிலை அமைத்தது திமுக.

காமராஜரின் செயலாளர் வைரவனுக்கு வேலை வழங்கி அரசு வீடு ஒதுக்கீடு செய்தவர் கருணாநிதி. விபி சிங் பிரதமராக இருந்தபோது,சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து சட்டம் போட்டவர் கருணாநிதி.

தமிழகத்துக்குப் பிரதமர் மோடி வந்து, வழக்கம்போல் பொய் பேசிவிட்டுச் சென்றுள்ளார். நீங்கள் என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் உங்கள் மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது. அதிமுக கூட்டணியில் இருப்பதால் ஜெயலலிதா பற்றிப் பேசியுள்ளார். இதே ஜெயலலிதா பற்றி 2014, 2016ல் என்னென்ன பேசினீர்கள் என்பது தெரியாதா. அப்போது ஊழல் பெருச்சாளி என்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததுடன், ஜெயலலிதாவை அரசியலை விட்டு ஒழிக்க வேண்டும் என்று மோடி கூறினார். ஆனால், இப்போது தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் 1989 மார்ச் 25ல் தமிழக சட்டபேரவையில் ஜெயலலிதாவை திமுக ஆட்சி அவமானப்படுத்தியதாக அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்போது சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு அருகில் இப்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இருந்தார். அவர் அப்போது அதிமுகவிலிருந்தார். அதிமுகவை விட்டு விலகி வந்த அவர், 1989 மார்ச் 25 இல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை அதே சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் திமுக ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று கூறினார். மேலும், அதற்கு தானும் உடந்தையாக இருந்ததாகவும், அதற்கு இப்போது வருத்தப்படுவதாகவும் கூறினார். இது சட்டப்பேரவை அவைக் குறிப்பில் உள்ளது.

திருநாவுக்கரசர் பேசிய பேச்சை மோடிக்கு அனுப்பி வைக்கத் தயார். அதைப் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அதிமுக மகளிரணியினர் அளித்த வரவேற்பை சொல்லவே நா கூசுகிறது. உங்கள் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் அதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பெண் ஐஏஎஸ் சந்திரலேகா முகத்தில் திராவகம் ஊற்றபட்ட சம்பவத்தை அவரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். உயர்ந்த பதவியில் இருக்கும் மோடிக்கு பொய் பேச நா கூச வேண்டாமா?.

பிரதமர் மோடி, யோசித்து, சிந்தித்து ஆதாரம் இருந்தால் பேச வேண்டும். ஊழலை ஒழிப்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அருகில் வைத்துக்கொண்டு பேசுகிறார். திமுக சார்பில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை செய்த ஊழல் பட்டியல் புள்ளிவிவரத்தை ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளோம். ஆளுநரிடம் கேட்டு அதை வாங்கி பாருங்கள்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று உறுதிமொழி கூறினீர்களே கொடுத்தீர்களா? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பேன் என்றீர்களே, கொடுத்தீர்களா? ஒரு 15 ரூபாயாவது கொடுத்தீர்களா?. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிப்போம் என்று மோடி பேசினால் என்ன அர்த்தம்?” என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

“விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும் என்று கூறினீர்களே உயர்த்தினீர்களா? 125 நாட்களாக டெல்லியில் மழை, பனி, வெயிலில் குடும்பம் குடும்பமாக விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்களை அழைத்து பிரதமர் ஒரு நாளாவது பேசினாரா? விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத ஆட்சி மத்திய ஆட்சி. அதற்குத் துதி பாடும், அடிமையாக இருப்பது தமிழக ஆட்சி” என்று விமர்சித்தார்.

மேலும், பிரதமர் மோடி மீண்டும் 2ஆம் தேதி தமிழகத்துக்கு வர இருக்கிறார். நான் கேட்ட கேள்விக்கு அப்போதாவது பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், பதில் சொல்லாவிட்டால் 6ஆம் தேதி தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள் என்றார்.

**-சக்தி பரமசிவன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *