மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

பணமின்றி பரிதவிக்கும் பாட்டாளி வேட்பாளர்கள்!

பணமின்றி பரிதவிக்கும் பாட்டாளி வேட்பாளர்கள்!

முதல்வர் பதவி ஆசை யாரைத்தான் விட்டது... மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று கடந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாய்ந்த பாமக, இப்போது 23 தொகுதியிலேயே செட்டில் ஆகிவிட்டது. தேர்தலில் சீட்டே வேண்டாம்; இட ஒதுக்கீடு அறிவித்தால் போதும், அதிமுகவை ஆதரிக்கிறோம் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் ‘டயலாக்’ விட்ட டாக்டர் ராமதாஸ், அதையும் அறிவித்த பின்னும் அத்தனைக்கும் ஆசைப்படுபவராக மாறி, 30 சீட், 40 சீட் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஐந்தில் ஆரம்பித்து, அலறவிட்டார் எடப்பாடி. பழனிசாமியை பதம் பார்க்க எண்ணி, ‘சீட்டே வேண்டாம்; ஆதரிக்கிறோம்’ என்று ராமதாஸ் ராக்கெட் விட, ‘அதை அப்படியே எழுதிக் கொடுத்திருங்களே!’ என்று எதிர் ஏவுகணையை விட்டார் எடப்பாடி. எப்படியோ 23 சீட்டு, 250 ஸ்வீட் பாக்ஸ் என்று முடிந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.

எத்தனையோ எதிர்ப்புகளைத் தாண்டி, இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதால், வடக்கு மாவட்டங்களில் பாமகவுக்குச் செல்வாக்கு உள்ள அத்தனை தொகுதிகளையும் உங்களுக்குத் தரமுடியாது என்று சொல்லி, அவற்றில் 9 தொகுதிகளை அப்படியே ஒதுக்கிக்கொண்டது அதிமுக தலைமை. ஜெயிப்பது கஷ்டமென்ற நிலையிலுள்ள திருவல்லிக்கேணி உள்ளிட்ட 9 தொகுதிகளை பாமகவுக்குத் தள்ளிவிட்டது. அந்தத் தொகுதிகளில் தலைகீழாக நின்றாலும் வெல்லவே முடியாது என்பதால், மருத்துவர்கள் இருவரும் ஒரு அவசர ஆபரேஷனுக்குத் தயாராகி இருக்கிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது. அதாவது, 23 தொகுதிகளிலும் உழைப்பையும், பணத்தையும் விரயமாக்குவதை விட, ஜெயிக்க வாய்ப்புள்ள 12 தொகுதிகளில் மட்டுமே கூடுதல் கவனத்தையும், கவனிப்பையும் காட்டுவது என்பதுதான் அந்த முடிவு என்கிறார்கள் தைலாபுரத்தின் வாசமறிந்தவர்கள்.

ஆனால் அந்த 12 தொகுதிகள் உள்ளிட்ட 23 தொகுதிகளிலுமே இப்போது பாமக வேட்பாளர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை என்கிறார்கள் பாட்டாளிச் சொந்தங்கள். என்னதான் பிரச்சினை என்று பாமக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியானதும் பெரும் உற்சாகத்தோடுதான் களத்தில் இறங்கினோம். ஆனால் நினைத்ததை விட, களம் மிகவும் கடுமையாக இருக்கிறது. முதலில் சமூக ஊடகங்கள் பெரும் சவாலாக இருக்கின்றன.

இட ஒதுக்கீடு பெற்றதும் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வன்னியர் சமுதாய மக்களிடம் அமோக வரவேற்பை உண்டாக்கவில்லை. ஏற்கெனவே வாங்கிக்கொண்டிருந்த இட ஒதுக்கீட்டை இந்த அரசு குறைத்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக ஒரு தகவலை வன்னியர்கள் மத்தியில் அழுத்தமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பல தரவுகளையும் பகிர்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு படித்தவர்கள் பலர் கேட்கிற கேள்விகளுக்கு எங்களால் பதில் தரவோ, விளக்கம் அளிக்கவோ முடிவதில்லை. அதேநேரத்தில் மற்ற சமுதாயத்தினர் எங்களை விரோதியாகவே பார்க்கின்றனர். அதனால் வன்னியர் மக்கள் இருக்குமிடங்களில்தான் பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இதையெல்லாம் விட பெரிய பிரச்சினை, பணம்தான். நிற்கின்ற வேட்பாளர்களில் பலர், பெரிதாக வசதி இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால், பொருளாதாரத்தில் ரொம்பவே ‘வீக்’ ஆனவர்கள். இவர்களில் பலர் அன்றாடச் செலவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தேர்தல் களத்தில் செலவு எப்படியிருக்குமென்பது, கட்சித் தலைமைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் இன்று வரையிலும் வேட்பாளர்களுக்கு தலைமையிடமிருந்து எதுவுமே வரவில்லை. இதனால் எப்படியாவது செலவு செய்ய வேண்டுமே என்பதற்காக, சொத்துகளை விற்றும், வீடுகளை அடமானம் வைத்தும் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

விருத்தாசலம் தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை நேர்காணல் செய்தபோது, ‘உன்னால செலவு பண்ண முடியுமா’ என்று தலைமையில் கேட்டார்கள். அவரும் சீட் வாங்க வேண்டுமென்பதற்காக, ‘செலவு பண்ண முடியும்’ என்று உறுதி கொடுத்து சீட் வாங்கிவிட்டார். எங்கேயாவது கடன் வாங்கியாவது தேர்தலுக்குச் செலவு செய்து விடலாம் என்று தான் நினைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எந்த இடத்திலிருந்தும் பணம் கிடைத்ததாகத் தெரியவில்லை. அன்புமணி ராமதாஸ் விருத்தாசலம் பரப்புரைக்கு வந்ததற்கு செலவு செய்யவே பெருமளவில் திணறிவிட்டார். பூத் செலவுக்கே அவரிடம் பணம் இருப்பதாகத் தெரியவில்லை.

கண்டிப்பாக ஜெயிப்பார் என்று நம்பிக்கை ஏற்படுத்துகிற சில வேட்பாளர்களுக்கு மட்டும், உடன் பிறந்தவர்களும், உறவினர்களும், நண்பர்களும் செலவு செய்ய முன் வருகிறார்கள். மற்றவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. நெய்வேலி தொகுதி வேட்பாளர் ஜெகன் அன்றாட பரப்புரைக்குச் செலவு செய்வதற்கே தன்னிடம் இருந்த இரண்டு பிளாட்களையும் விற்றுவிட்டார். அதுவும் பற்றாக்குறையாகி, சகலையிடம் கொஞ்சம் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் இன்னும் ஐந்து நாள் பரப்புரைக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் கலக்கத்தில் இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வேட்பாளர் ராஜேந்திரனை எதிர்த்து, திமுகவில் நிறுத்தப்பட்டுள்ள மஸ்தான் மானாவாரியாக பணம் செலவு செய்து கொண்டிருக்கிறார். அதைச் சமாளிப்பதற்காக, தன்னுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கியிருக்கிறார் ராஜேந்திரன். இவர்கள் எல்லோருக்குமே தேர்தல் முடிவுகள் எதிராக வந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் மிகப்பெரிய கலக்கத்திலும் இருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிய ஐந்து வேட்பாளர்களைத் தவிர, 18 வேட்பாளர்களின் நிலைமை படுபரிதாபமாகத்தான் இருக்கிறது. இத்தனை நாட்களாக பணம் கொடுக்காத தலைமை இனிமேல் கொடுக்குமா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. அப்படி ஒருவேளை சுத்தமாகப் பணமே வரவில்லை என்றால், இந்தத் தொகுதிகள் அனைத்திலும் கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக் கட்சியினர் பணத்தை வாரியிறைத்து, மொத்தமாக அள்ளிவிடுவார்கள். இனி எல்லாமே அய்யாவின் கையில்தான் இருக்கிறது!’’ என்றார்கள்.

–பாலசிங்கம்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 31 மா 2021