மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

எஸ்.வி. சேகர் எழுத படிக்க தெரியாதவரா?

எஸ்.வி. சேகர் எழுத படிக்க தெரியாதவரா?

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்தைப் பகிர்ந்த வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் , 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்தது. எஸ்.வி. சேகர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகள், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு என நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி. சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், தனக்கெதிரான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 30) நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.

அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி, தேசப்பற்று தொடர்பான பதிவுகளை அவ்வப்போது அனுப்புபவர். அதைப் போலவே நினைத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 19இல் வேறொருவர் எழுதியதை, எஸ்.வி. சேகர் பார்வேர்டு மட்டுமே செய்துள்ளார். அது பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து எனத் தெரியவந்ததும், உடனடியாக ஏப்ரல் 20ஆம் தேதியே பதிவை நீக்கிவிட்டார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார் எஸ்.வி. சேகர். பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய பிறகும், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது” என கூறினார்.

பெண்கள் குறித்து அவதூறாகப் பதிவான கருத்தை எஸ்.வி. சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை பார்வேர்டு செய்திருப்பதும் குற்றமே என்பதால், அவர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதி, ”முகநூலில் வந்த தகவலைப் படிக்காமல் பார்வேர்டு செய்வதற்கு எஸ்.வி. சேகர் எழுதப் படிக்கத் தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி முக்கியப் பிரமுகர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, எஸ்.வி. சேகர் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுசெய்ய தடைவிதித்தும், நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து காவல் துறை ஏப்ரல் 16ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

செவ்வாய் 30 மா 2021