மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

மோடி வருகையால் பாஜகவுக்குதான் வாக்கு குறையும்: ஸ்டாலின்

மோடி வருகையால் பாஜகவுக்குதான் வாக்கு குறையும்: ஸ்டாலின்

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 30) பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் சுரேஷ் ராஜன் , கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்குப் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “ சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ‘இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை” என்று பேசியிருக்கிறார்.

நினைத்துப் பாருங்கள். அவர் முதலமைச்சர். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?. இதைவிட மோசம், என்னவென்றால் அவரைத் தேர்ந்தெடுத்த எடப்பாடிக்கே எதுவும் செய்யவில்லை. நான் அந்த தொகுதிக்குச் சென்றிருந்தேன். நீங்கள் இப்போது அவர் பெயரைச் சொல்லாதீர்கள் என்று சொன்னது போல, நான் எடப்பாடிக்குச் சென்றபோது எடப்பாடி பழனிசாமி என்று சொல்லாதீர்கள். அது எங்கள் ஊருக்குக் கேவலம் என்று சொன்னார்கள். அது தான் அங்கு இருக்கும் நிலை” என்று குறிப்பிட்டார்.

மேலும், ”இங்கு டெல்லி பிரதிநிதி ஒருவர் இருக்கிறார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம். அவர் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தொழில்ரீதியாக ஒரு பார்ட்னராக இருக்கிறார். அவருக்குக் குமரி முதல் கம்போடியா வரை சொத்து இருக்கிறது. ஆனால் குமரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா?

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். சசிகலாவால் டெல்லி பிரதிநிதி பொறுப்பை ஏற்றவர். சசிகலாவால் உயர்த்தி வைக்கப்பட்டவர், இப்போது பழனிசாமியிடம் உட்கார்ந்திருக்கிறார். இந்த தேர்தலுக்குப் பிறகு அங்கேயும் துரோகம் செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேரப்போகிறார். அது உறுதி. அது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள்.

கடந்த முறை நான் தக்கலைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு புதிய பன்னாட்டு மாற்று முனையத்தை அமைக்கப் போகிறது. அதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நம்முடைய பேராயர்கள் வந்து என்னிடத்தில் முறையிட்டார்கள்.

‘தி.மு.க. ஆட்சியில் நிச்சயமாக உறுதியாக அதற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம்’ என்று அப்போது உறுதி அளித்துவிட்டுச் சென்றேன். அதற்குப்பிறகு குமரிக்கு முதலமைச்சர் வந்தார். அவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவ்வாறு எந்த சரக்கு பெட்டக முனையத்தையும் அமைக்க போவதில்லை. எனவே ஸ்டாலின் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் ஆதாரம் இருக்கிறது. நான் கலைஞருடைய மகன். எதையும் புள்ளிவிவரத்தோடுதான் பேசுவேன்.

20.02.2021 அன்றைக்குப் பத்திரிகையில் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் துறைமுகத் துறை விளம்பரத்தில் தெளிவாக இருக்கிறது. அதாவது மார்ச் 20க்குள் யாராவது விண்ணப்பிக்க வேண்டி இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசின் மூலமாக விளம்பரம் தரப்பட்டிருக்கிறது.

இது கூடத் தெரியாத ஒரு முதலமைச்சர் இருக்கிறார். எனவே அப்படிப்பட்ட முதலமைச்சர் ஆளத்தகுதி உள்ளவரா? என்பதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன். அவரை பொன். ராதாகிருஷ்ணன் என்று சொல்லக்கூடாது; பொய் ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்லவேண்டும். 2014-இல் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். மத்தியில் அமைச்சராக இருந்தார். ஆனால் இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இம்மி அளவு நன்மை செய்யவில்லை. ” என்று விமர்சித்தார்.

“அதேபோல இன்றைக்குப் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவ்வாறு வந்து வழக்கம்போல பொய் சொல்லிவிட்டுப் போகப்போகிறார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவிற்கு பா.ஜ.க.வுக்கு வாக்குக் குறையப் போகிறது. அதுதான் நடக்கப்போகிறது.

அவர் ஒவ்வொரு முறை வரும்போதும் தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்துவிட்டதாகப் பேசிவிட்டுச் செல்கிறார். இதுதான் ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

மோடி, பொறுப்புக்கு வந்த பிறகு மீனவர்களைக் காப்பதற்காகக் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார். 2014-ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இந்தியா - இலங்கை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். 7 வருடம் ஆகிவிட்டது. அதில் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இன்றைக்கும் தொடர்ந்து மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது, இவ்வாறு அராஜகங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அரசோ, மோடியோ இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனைத் தட்டிக் கேட்கப் போவதுமில்லை.

எனவே, தமிழகத்தில் நம்முடைய கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம்” என்று உறுதியளித்தார்.

.-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 30 மா 2021