மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

10.5% ஒதுக்கீடு, பற்றவைத்த பன்னீர்... எடப்பாடியுடன் ராமதாஸ் பேச்சு!

10.5% ஒதுக்கீடு, பற்றவைத்த பன்னீர்... எடப்பாடியுடன் ராமதாஸ் பேச்சு!

தமிழ்நாட்டில் நீண்ட காலத்துக்குப் பிறகு இட ஒதுக்கீடு தொடர்பான சட்டம் சந்தடிசாக்கில் கொண்டுவரப்பட்டு, சடுதியில் நிறைவேற்றப்பட்டது என்றால், அது 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்டம்தான். வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 40 ஆண்டு காலப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல் என்றால், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இப்போது ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்த உள் ஒதுக்கீடு மீண்டும் கிளறப்படுகிறது.

திமுக, பாமக சாராத, அதற்குப் போட்டியான வன்னியர் சமூக அமைப்புகள் இந்த ஒதுக்கீட்டுக்கு அதிருப்தி தெரிவித்தது ஒருபுறம் இருக்க, அதிமுக அணியிலேயே அதுவும் துணைமுதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி, புதிதாக சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாசையும் குறிப்பிட்டு, இந்த உள் ஒதுக்கீடு தற்காலிகமான ஏற்பாடுதான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய அனைவரும் ஏற்றுக்கொண்டனர் என்று தி இந்து ஏட்டுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் குறிப்பிட்டுள்ளார்.

தென்மாவட்டங்களில் இந்த உள் ஒதுக்கீட்டால் குறிப்பிட்ட சில சமூகத்தினர் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான மனநிலை உருவாகும் அளவுக்கு, பாதகத்தை உண்டாக்கியிருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்தபோது, சீர்மரபினர் சங்கத்தினர் என்ற பெயரில் சிலர் நேருக்கு நேர் கண்டன போஸ்டர்களைக் காட்டி, எதிர்ப்பு தெரிவித்ததை மறந்துவிடமுடியாது.

தென் தமிழ்நாட்டில் அப்படி என்றால், வடதமிழ்நாட்டில் துணைமுதலமைச்சர் பன்னீரின் பேட்டி, அதிருப்தியையும் ஏமாற்றிவிட்டார்களோ எனும் எண்ணத்தையும் ஏற்படுத்திவிட்டது. சமூக ஊடகங்களில் வட மாவட்ட வன்னியர் சமூகத்தினர், இதில் சந்தேகத்தையும் அச்சத்தையும் வெளியிட்டபடி இருக்கின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ராமதாசுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இன்று மதியம் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அதைப் பற்றி அவரே அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

” தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர்; அதை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுவதை விஷமப் பிரச்சாரமாகவே பா.ம.க. பார்க்கிறது.

வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்னை அல்ல... அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். 20% தனி இடப்பங்கீடு கேட்டு, கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் போராடிவருகின்றன. இதன் பயனாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டால் அது நிரந்தரமான சட்டம்தான். தற்காலிக சட்டம் என ஒன்றும் கிடையாது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்வரை நீடிக்கும். இதுதான் நடைமுறை.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள்தான். தமிழகத்தில் கல்வி & சமூக நிலையில் மிக மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கும் சமுதாயமும் வன்னியர்கள் தான். அதனால் அவர்களுக்கு மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூகநீதி ஆகும். அதற்கான போராட்டத்தை ஏற்றுக்கொண்டுதான், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்களுக்கான இடப்பங்கீட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் முதலமைச்சர் பேசும்போதும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது முதற்கட்டம்தான்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அது உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.

சற்றுமுன் (இன்று மதியம்) நான் தொலைபேசியில் பேசியபோதும்கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்.

ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. அத்தகைய ஊடகங்களின் செய்திகளுக்கும் நாம் முக்கியத்தும் அளிக்க வேண்டாம்.

அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் முழுமையான சமூகநீதி மலரும் என்பது தான் எனது கொள்கை.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, வன்னியர்களின் மக்கள்தொகை 15 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது உறுதி செய்யப்படும். அதனடிப்படையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் உயர்த்தி புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதை பா.ம.க. உறுதிசெய்யும். இதுவே என் உறுதியான நிலைப்பாடு.” என்று ராமதாஸ் தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

-இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 30 மா 2021