மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

வரவில்லை, வரவுமில்லை; சிக்கலாக்கிய சித்தி: திக்கித்திணறும் தினகரன்! ஆதரவான 60 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு

வரவில்லை, வரவுமில்லை; சிக்கலாக்கிய சித்தி: திக்கித்திணறும் தினகரன்! ஆதரவான 60 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த முடிவு

ஐந்தே தொகுதிகளில் போட்டியிடும் கட்சியெல்லாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, மதுக்கடைகளை மூடுவோம், மதுரையை சிங்கப்பூர் ஆக்குவோம் என்று சொல்வதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆட்சியில் பங்கே வகிக்க முடியாமல் இத்தகைய வாக்குறுதிகளை அள்ளி வீசும் அந்த துணிச்சல்தான் மக்களுக்கு மகா எரிச்சல். அதையும்விட நிற்குமிடங்களில் எல்லாம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று சின்னமே தெரியாத சின்னக்கட்சிகளெல்லாம் சவடால் விடுவதுதான் தாங்கிக்கொள்ளவே முடியாத மன உளைச்சலாகவுள்ளது. தினகரனின் கட்சியும் அந்த வரிசையில்தான் இடம் பெற்றிருக்கிறது. தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த தினகரன், அதன்பின் தே.மு.தி.க., சிக்கியதால் அவர்களிடம் 60 சீட்டுகளைத் தள்ளிவிட்டு, அந்தத் தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்தார். இப்போது அவரே 60 தொகுதிகளில் கவனம் செலுத்தி, அங்கே அதிகமான வாக்குகளை வாங்கினால் போதுமென்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

சித்தி சிறையில் இருந்தவரையிலும், அவர் வந்தபின்பு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று திட்டங்களாகத் தீட்டிக்கொண்டிருந்தார் தினகரன். அமோக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்தார்; ஆயிரமாயிரம் வண்டிகளை அனுப்பிவைத்து அகில இந்தியாவையும் அதிரவிட்டார். கோடிகளாய் வாரி இறைத்து ‘மாஸ்’ காட்டியும் எதற்கும் உதவவில்லை. தன்னை வந்து அமைச்சர்கள் பார்ப்பார்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்பார்கள் என்று கற்பனையோடு வந்த சசிகலாவுக்கு, தினகரனின் நிஜமான செல்வாக்கு சில நாட்களிலேயே தெரிந்து விட்டது. பார்த்தார் சசிகலா. நிறைவாகும்வரை மறைவாயிரு என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார். இப்போது ஊர் ஊராக, கோவில் கோவிலாக சசிகலா சென்று கொண்டிருக்க, கோவில்பட்டி ஒரு தொகுதியையாவது ஜெயிக்க வேண்டுமென்று தினகரன் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆட்சியை வைத்துப் பணம் பண்ணுவது, பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பது என்ற கலையில் வித்தகர்களான சசிகலா குடும்பத்தினருக்கு, முக்கியமாக தினகரனுக்கு இப்போது பிரச்சினையும் பணம்தான். எங்கேயோ இருக்கிறது சொத்தாக, பணமாக. எதுவும் கைக்கு வரவிடாமல் ஆங்காங்கே தடுப்புகள். அதனால் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, அனைவருக்கும் செலவுக்குப் பணம் தரமுடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார் தினகரன். அதனால் அவர் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமான அ.ம.மு.க., நிர்வாகிகள் சிலர். அவர்களிடம் இன்னும் விரிவாக விளக்கச் சொல்லிக் கேட்டோம்...

‘‘பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சிறையை விட்டு சின்னம்மா வெளியில் வந்தார். அவர் எதிர்பார்த்த பல விஷயங்கள் நடக்கவில்லை. பழனிசாமியையும், பன்னீரையும் இணைத்து, அதிமுக ஆட்சி தொடர்வதற்கு பாரதிய ஜனதா தலைமை உதவியதுபோல, மீண்டும் தானும் கட்சியில் சேர்வதற்கும், அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கும் உதவும் என்றும் அவர் நினைத்தார். அதற்காக அவர் எத்தனையோ விஷயங்களைத் தியாகம் செய்யவும் தயாராகயிருந்தார். அவர்களும் அதற்காக பலவிதமான முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் ஒற்றுமையாக இருந்து அதைத் தடுத்து விட்டார்கள். அவர்களுக்கு தினகரன் உள்ளே வந்தால், தங்களை ஓரம் கட்டி, கட்சியை ஆக்கிரமித்துவிடுவார் என்ற பயம் இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்தக் காரணங்களால் சின்னம்மாவும் அரசியலில் இருந்தே ஒதுங்குகிற சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பின், அவரிடமிருந்து தினகரனுக்கோ, அமமுகவுக்கோ எந்த உதவியும் கிடைக்குமென்ற நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது.

அவர் அதிமுகவுக்கு எதிராக பரப்புரை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஏனெனில் அவர் எந்தக் காலத்திலும் அதிமுகவுக்கு எதிராக பரப்புரை செய்ய வாய்ப்பேயில்லை. அதே நேரத்தில் அதிமுக தலைமையில் மாற்றம் கொண்டு வரவேண்டும், அதற்கு அதிமுக இந்தத் தேர்தலில் மட்டும் தோற்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். அதன் காரணமாக பரப்புரைக்கு சின்னம்மா வராவிட்டாலும், தேர்தலுக்கான செலவுக்கும், வாக்காளர்களுக்குத் தருவதற்கும் ஒரு பெரும்தொகையை தருவார் என்று எதிர்பார்த்தார் தினகரன். அதுவும் முடியாது என்று அவர் கை விரித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் அவர், எல்லாத் தொகுதிகளிலும் கவனம் செலுத்துவதை விட, ஜெயிப்பதற்கு அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்குமளவுக்கு செல்வாக்குள்ள 60 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அங்கு மட்டும் கொஞ்சம் செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறார். அந்த 60 தொகுதிகளில் அதிமுக வாக்குகளைப் பிரித்து, அதிகமான வாக்குகள் வாங்கிவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிடலாம் என்று அவர் நினைக்கிறார்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கடுமையான போட்டி இருக்கும் இன்னும் சில தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகள் வாங்கினாலே திமுகவுக்கு வெற்றி கிடைத்து விடும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் 75க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவைத் தோற்கடித்து விட வேண்டுமென்பதே தினகரனின் திட்டம். இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், தங்கள் கட்சித் தலைமையிடமிருந்து செலவுக்கு ஏதாவது வருமென்று எங்கள் வேட்பாளர்கள் நினைத்துக் கொண்டு ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது வரையிலும் அவரிடமிருந்து பணம் எதுவும் நகர்வதாகத் தெரியவில்லை. அவரிடம் பணமில்லையா அல்லது அவர் யாரிடமாவது எதிர்பார்த்து அங்கிருந்து வரவில்லையா என்பதும் எங்களுக்குப் புரியவில்லை. இப்போதுள்ள நிலை நீடித்தால், கடைசி நேரத்தில் பல தொகுதிகளில் எங்கள் கட்சி நிர்வாகிகளும், வேட்பாளர்களும் அதிமுகவினரிடம் விலை போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.!’’ என்றார்கள்.

தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் உள்ள 75க்கும் மேற்பட்ட தொகுதிகளில்தான் தினகரன் கட்சி, தீவிரமான களப்பணி செய்து கொண்டிருக்கிறது. அவற்றில் இப்போது 60 தொகுதிகளை மட்டும் குறி வைத்து, அதிதீவிரமாக கவனம் செலுத்தலாம் என்பதுதான் தினகரனின் திட்டமாகத் தெரிகிறது. என்னதான் சமுதாய வாக்குகள் கை கொடுக்கும் என்று நினைத்தாலும், வாக்களிப்போரின் கைகளில் ஏதாவது திணித்தால் மட்டுமே, அந்த வாக்குகளை இரட்டை இலையிடமிருந்து பிரிக்க முடியும் என்பதிலும் தினகரன் தெளிவாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருடைய கட்சி நிர்வாகிகள். ஆனால் அவருக்கான ஸ்வீட் பாக்ஸ்கள் எங்கே மறைந்திருக்கின்றன, எப்போது வருமென்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

பணம் பத்தும் செய்யும்; இல்லாவிட்டால் மொத்தமாய்க் கவிழ்த்துவிடும்!

–பாலசிங்கம்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 30 மா 2021