மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

ஒரு தாயின் மரணம்.. இது மேற்குவங்க அரசியல்!

ஒரு தாயின் மரணம்.. இது மேற்குவங்க அரசியல்!

தேர்தல் காலம் வந்துவிட்டால் எல்லாமும் இங்கு அரசியலாகவே பார்க்கப்படுவது ஒரு போக்காகவே வளர்ந்துவிட்டது. தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் (மறைந்த) தாயாரைப் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இழிவுபடுத்திப் பேசிவிட்டார் என சில நாட்களாக அதிமுகவினரும் அவரும் வெளிப்படுத்திவரும் எதிர்ப்பும் கண்டனமும் இன்னும் முடிந்தபாடில்லை.

பிரச்சினையான பேசுபொருள் வேறு ஒன்றாக இருக்க, எப்போதோ இறந்துபோன அந்த மூதாட்டியை வைத்து அரசியல் செய்வதா என எதிர்க்கட்சியினரும் மற்ற பொதுத் தரப்பினரும் முகம்சுளிக்கின்றனர். இந்தப் பிரச்னையின் சுவடு மறைவதற்குள் மேற்குவங்கத்திலும் ஒரு தாயாரின் மரணம் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் கோபால் மஜூம்தாரின் தாயார், எண்பது வயது மூதாட்டியான சோவா மஜூம்தார். இருவரையும் கடந்த பிப்ரவரி 26 அன்று வடக்கு டம்டம் நகராட்சியில் இருக்கும் அவர்களின் சொந்த வீட்டில் ஒரு கும்பல் தாக்கியது. அதில், அந்த மூதாட்டியை வயதானவர் என்றுகூட பார்க்காமல் வன்முறை கும்பல், முகத்தில் குத்தியும் கட்டையால் அடித்தும் அட்டூழியம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் கோபாலையும் அவருடைய தாயாரையும் தாக்கினார்கள் என பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதையொட்டி அந்த வட்டாரத்தின் நிம்தா போலீஸ்நிலையத்தின் முன்பாக அவர்கள் போராட்டமும் நடத்தினார்கள்.

இந்த நிலையில், நேற்று அந்த மூதாட்டி இறந்துவிட்டார். அதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தலைவர்களும் திரிணமூல் கட்சியையும் அதன் தலைவர் மம்தாவையும் தாக்கி கருத்து தெரிவித்துள்ளனர்.

” திரிணமூல் கட்சி குண்டர்களால் தாக்கப்பட்ட வங்கத்தின் மகளான சோவா மஜூம்தார் அவர்களின் மரணம், வேதனை அளிக்கிறது. அந்தக் குடும்பத்தினரின் வலியும் காயமும் மம்தா அக்கா அவர்களை நீண்ட காலத்துக்கு வருத்தப்படவைக்கும். வன்முறை இல்லாத வருங்காலத்துக்காக வங்கம் போராடும். நம் சகோதரிகள், தாய்மார்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக ஆக்குவதற்கு போராடும்.” என்று அமித்ஷாவின் டுவிட்டர் பக்கத்தில் கருத்திடப்பட்டுள்ளது.

இதே கருத்தை எதிரொலித்திருக்கும் நட்டாவும், “ நிம்தாவைச் சேர்ந்த வயதான தாயார் சோவாவின் ஆன்மா சாந்தியடைய நான் வேண்டிக்கொள்கிறேன். அவருடைய மகன் கோபால் மஜூம்தார் ஒரு பாஜக தொண்டர் என்பதால், அவர் தன்னுடைய உயிரைக் கொடுத்திருக்கிறார் எனலாம். அவருடைய தியாகத்தை பாஜக என்றும் மறக்காது. அவரும் வங்கத்தின் ’சகோதரி’, ’தாய்’தான். வங்கத்தின் தாய்மார்களுக்காகவும் மகள்களுக்காகவும் பாஜக எப்போதும் போராடும்.” என்று தன் பங்குக்கு டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவருமே, இந்த இரங்கல் செய்தியில் வங்கத்தின் சகோதரி, வங்கத்தின் தாய் ஆகிய சொற்களை, முக்கியத்துவம் தந்து, குறிப்பிட்டிருப்பது, சமகால அரசியலையும் இந்த சாவில் இழுத்துவிட்டதையே காட்டுகிறது.

தீயாக நடந்துவரும் வங்கத் தேர்தல் பிரச்சாரத்தில், மம்தா தன்னை வங்கத்து மகள் என்றும் தாய் என்றும் பாஜகவினர் அந்நிய சக்திகள் என்றும் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா வருவதைப் போல வங்கத்தில் அரசியல் செய்கின்றனர் என்றும் காட்டமாகப் பேசிவருகிறார். இதற்கு குறிப்பிட்ட வங்காளிகள் மத்தியில் தாக்கம் ஏற்பட்டதை அடுத்து, பாஜகவினரும் பதிலடி தரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களும் மேற்குவங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என பேசிப்பார்த்தனர். அதற்கு உடனடி எதிர்வினை ஆற்றிய மம்தா, பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எந்தமாதிரி பாதுகாப்பு இருக்கிறது எனத் தெரியுமா என உத்தரப்பிரதேசத்து பெண்கள் மீதான வன்கொடுமைகளைப் பட்டியலிட்டார். அதையடுத்து பாஜக தரப்பில் இந்த விசயத்தில் அமைதியாகக் கடந்துசென்றனர்.

இந்த நிலையில், பாஜக தலைவர்களின் இந்த ’வங்கத்து சகோதரி, தாயார்’ கருத்துகளுக்கு தான் போட்டியிடும் நந்திகிராமில் நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, பதில் அளித்தார்.

பெண்கள் மீதான் எந்தத் தாக்குதலையும் நான் கண்டிக்கிறேன்; தாய்மார்கள் மீதோ சகோதரிகள் மீதோ தாக்குதல் நடத்துவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது என்ற மம்தா,

“ ஆனால் சிலர் நமது வங்காளத்தைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்கவிரும்புவது ஒன்றே ஒன்றுதான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது? எந்த அளவுக்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்? ஹத்ராஸ் சம்பவம் நிகழ்ந்தபோது நீங்களெல்லாம் எங்கே போயிருந்தீர்கள்? லூக்கோபிளாஸ்ட்டை வைத்து உங்கள் வாயை ஒட்டிவைத்திருந்தீர்களா?” என்று ஆவேசமாகக் கேள்விகளை அடுக்கினார், மம்தா.

இதற்கிடையே, மூதாட்டியின் மரணத்தில் திரிணமூல் கட்சியினருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அக்கட்சித் தலைவர்கள் சுகாதா ராய், பார்த்தா சட்டர்ஜி இருவரும் மறுத்துள்ளனர்.

அந்த மூதாட்டி முதுமையினால்தான் இறந்துபோனார்; அவரின் மரணத்தை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது என்கிறார்கள், திரிணமூல் கட்சியினர்.

பாஜக தரப்பிலோ இதை எளிதாக விடுவதாகத் தெரியவில்லை. மாநில பாஜக மகளிர் அணியினர் ஆளுநர் ஜெகதீப் தங்காரைச் சந்தித்து, இதில் கொலை வழக்காகப் பதியவேண்டும்; விரைவு நீதிமன்ற விசாரணைக்கு இவ்வழக்கை மாற்றவேண்டும் என நேரில் மனு அளித்தனர்.

அரசியல்வாதிகளின் தாயார்களுக்கு பெருமையாக மட்டும் இருந்துவிடுவதில்லை, வாழ்க்கை என்பது மட்டும் உறுதி.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 30 மா 2021