பெண்களுக்கான மரியாதை: கமலுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

politics

வானதி சீனிவாசனை துக்கடா தலைவர் என மநீம பொதுச்செயலாளர் குமாரவேல் கூறியது கோவை தெற்குத்தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து மார்ச் 27ஆம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விவாதிக்க தயாரா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலடியாக மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுசெயலாளர் குமாரவேல் அறிக்கை வெளியிட்டார். அதில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கமல்ஹாசனை வானதி சீனிவாசனுடன் விவாதத்துக்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாகத் திறமை உள்ளது என்பது அவரது வாதம். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

முதலில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். மேலும் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் விவாதம் செய்ய அவருக்கு விருப்பம். அவர்களுடன் விவாதித்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதம் நடத்துகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்து பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டு பதில் கூறியுள்ளார்.

அதில், குக்கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, வக்கீலாக பணியாற்றியுள்ளேன். பாஜகவில் சேர்ந்து மக்கள் நல பணிகளைச் செய்து சிறிது, சிறிதாக உயர்ந்து அந்த கட்சியின் மகளிரணி தேசிய தலைவி என்ற நிலைக்கு வந்துள்ளேன். அப்படி கஷ்டப்பட்டு உழைத்து பெரிய இடத்திற்கு வந்துள்ள என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கூறுகின்றனர்.

இந்த விமர்சனத்தின் மூலம் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா?, பொது வாழ்வில் பல தடைகளைக் கடந்து வரும் பெண்களைக் கேவலப்படுத்துவீர்களா? இப்படித்தான் இவர்கள் பேசுபவர்களா? இவர்கள் பெண்களை காப்பாற்றுவார்களா? என்பதை மக்களாகிய நீங்கள் உணரவேண்டும். மேலும் இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியும், அதன் தலைவர் கமல்ஹாசனும் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகை கவுதமி மக்கள் நீதி மய்யத்தையும் கமல்ஹாசனையும் வாட்டி எடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. கமல்ஹாசனுடன் தேவர் மகன், நம்மவர், அபூர்வ சகோதரர்கள், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனுடனான நட்பை முறித்து கொண்ட கவுதமி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் நடிகை கவுதமி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அது பற்றி இனி பேசவேண்டாம். பாஜக தலைவர்களான வாஜ்பாய், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாஜகவில் இணைந்தேன்.

மக்கள் நீதி மய்யத்தினர், மாற்றத்தை கொண்டு வருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதிக்கு பிறகு தெரியும்.

ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும் போது இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைப்பிடிக்கிறது. மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் பிரியுமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி பிரிந்தால் அது அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணிக்குத் தான் சாதகமாக இருக்கும்” என்றார்

**-சக்தி பரமசிவன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *