மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

எடப்பாடி டெபாசிட் கூட வாங்கமாட்டார்: ஸ்டாலின்

எடப்பாடி டெபாசிட் கூட வாங்கமாட்டார்: ஸ்டாலின்

எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி டெபாசிட் கூட வாங்கமாட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர் தேவராஜி, ஆம்பூர் தொகுதி வேட்பாளர் வில்வநாதன், திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி, வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் முகமது நயீம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஏலகிரியின் காற்றும் குளிரும் கொண்டது ஜோலார்பேட்டை. அந்த காலத்தில் வாணிகர் பாடியாக இருந்த வாணியம்பாடி. பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர். ஆங்கிலேயர் ஆட்சியில் முதன் முதலாக வரிவசூல் தொடங்கிய திருப்பத்தூர் எனத் தொகுதிகளின் சிறப்புகளைக் கூறி உரையை தொடங்கிய ஸ்டாலின், “ இந்த மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார், வீரமணி. பழனிசாமி அமைச்சரவையில் மூன்று அருமையான மணிகள் இருக்கின்றனர். வேலுமணி, தங்கமணி, வீரமணி.

வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார். வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் என்றால் எல்லோருடைய பெயரிலும் ‘மணி’ இருக்கிறது அல்லவா, அதனால் அவர்கள் மணியில் தான் குறிக்கோளாக இருப்பார்கள். கரெப்ஷன் - கமிஷன் –கலெக்‌ஷன் இதுதான் அவர்களுடைய கொள்கை.

தன்னுடைய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதுதான் அவருடைய தொழிலாக - அதில்மட்டுமே மும்மரமாக இருப்பவர்தான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வீரமணி.

4 வருடத்திற்கு முன்பு வருமான வரித் துறையினர் வீரமணி வீட்டிலும் அவரது பினாமிகள் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அதில் என்ன நடந்தது? அதில் என்ன நடவடிக்கை? என்பது யாருக்கும் தெரியாது. மத்தியில் மோடியின் தலைமையில் இருக்கும் பா.ஜ.க. அரசு, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பினாமிகள், உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

அவ்வாறு சோதனை நடத்தி அங்கிருந்த ஆதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதேபோல சோதனை செய்து சில அமைச்சர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒருவர்தான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி.

வீரமணியின் வேலை, இடங்களை வளைத்து உரியவர்களை மிரட்டி, அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவது. அதில் மிகவும் கெட்டிக்காரர் அவர். பகுதிநேர வேலையாக அல்லாமல் முழுநேர வேலையாக அவர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

வேலூரில் மையமான ஒரு இடத்தை வளைக்கும் தகராறில் இவரே நேரடியாகச் சம்பந்தப்பட்டார். அது சம்பந்தமாக வழக்குப் பதியப்பட்டு உயர்நீதிமன்றம் வரைக்கும் அந்தப் பிரச்சினை சென்றது. அதை விசாரித்த நீதியரசர்கள், “நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்பதாலும் அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை” என்று தீர்ப்பு வழங்கிய வரலாறு தான், அமைச்சராக இருக்கும் வீரமணியின் வரலாறு.

அந்த நில விவகாரத்தில் சிக்கிய வீரமணியின் வீடியோ வெளியானது. தன்னுடைய கல்லூரிக்காக மணல் கொள்ளை, ஏலகிரி பெப்சி குடோன், சட்ட மீறல்கள் என்று எதையும் செய்வதில் கைதேர்ந்தவர்தான் இந்த வீரமணி. அப்படிப்பட்ட வீரமணியை இந்தத் தேர்தலில் நீங்கள் நிராகரிக்க வேண்டுமா வேண்டாமா? ” என திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

மேலும், “தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து , முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கெல்லாம் நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – சிஏஏ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர். ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில், அந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம், வற்புறுத்துவோம் என்று தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் சிஏஏ-வை எதிர்த்து வாக்களித்தார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தவர்கள் 125 பேர். அதை எதிர்த்தவர்கள் 105 பேர். இந்த அ.தி.மு.க. – பா.ம.க.வை சேர்ந்த 11 எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.

சிறுபான்மையினருடனான உறவு என்பது தி.மு.க.வின் தொப்புள்கொடி உறவு. எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். எப்போதும் சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக தி.மு.க. குரல் கொடுக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து ஒழிக்க வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதற்காக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதையும் ஆதரித்தவர்கள் தான் அ.தி.மு.க. – பா.ம.க. இப்போது தேர்தல் அறிக்கையில், வேளாண் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தலுக்காக பொய் சொல்கிறார்கள்.

இவர்கள் மட்டும் வாக்களிக்கவில்லை என்றால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இன்றைக்கும் டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்த்து பழனிசாமி ‘புரோக்கர்’ என்று சொன்னார். ஆனால் இவர் அடிக்கடி தன்னை ஒரு விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொள்வார். இவர் விவசாயி அல்ல, விஷ வாயு.

இந்த மூன்று வேளாண் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் பழனிசாமி தீர்மானம் போடவில்லை. அதனால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதை அனுமதிக்க மாட்டோம் என்ற தீர்மானத்தைத்தான் போடப்போகிறோம்.

நான் நேற்றைக்கு எடப்பாடி சென்றிருந்தேன். அங்கு வீதி வீதியாகச் சென்றேன். இப்போது சொல்கிறேன். அவர் அங்கு டெபாசிட் கூட வாங்க முடியாது. அந்த நிலைதான் அங்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 29 மா 2021