மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் : ஆ.ராசா

முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் : ஆ.ராசா

சமீபத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. முதல்வரின் தாயைப் பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று, சென்னையில், பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் தனது தாயைப் பற்றி இழிவுபடுத்திப் பேசுவதா என கண் கலங்கினார்.

முதல்வரின் தாயைப் பற்றி அவதூறு பேசியதாக ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டது. ராசா மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தநிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குகளும் பதியப்பட்டு, போலீஸ் தரப்பில் தயாராக இருந்தும், கடைசியில் நேற்று மாலையில் நோ சொல்லிவிட்டார், எடப்பாடி.

இதுதொடர்பாக மின்னம்பலத்தில் கைது வேணாம், காய்ச்சி எடுப்போம்: ஆ.ராசா வழக்கில் எடப்பாடி முடிவு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தனது பேச்சு குறித்து மீண்டும் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆ.ராசா, “இரண்டு நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமியைப் பற்றி நான் பேசியது குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வரும் செய்திகளுக்கு விளக்கம் அளித்தேன்.

திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆளுமையையும் , முதல்வர் பழனிசாமியின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி, உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகள் மட்டும் எடுத்து திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காகத் தவறாகச் சித்தரிக்கப்படுவதை விளக்கினேன்.

என்றாலும் அது குறித்த விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது அன்னையார் புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை என்றும், இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றித்தான் நான் பேசினேன் என்றும் நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு விளக்கம் அளித்தேன்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடபொறுத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக எனது மனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் ஒருபடி மேலே போய் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டதாக உணர்வாரேயானால் , எனது மனம் திறந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்வதில் எனக்குச் சிறிதும் தயக்கம் இல்லை.

முதல்வருக்கும் அவரது கட்சி காரர்களுக்கும் நடுநிலையாளர்களும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய, தனிமனித விமர்சனம் இல்லை பொதுவாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும் மற்றும் ஒப்பீடும் தான். முதல்வர் பழனிசாமி காயப்பட்டு கண் கலங்கியதற்காக என் மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கும் அதே வேளையில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

என் மீது தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி சைனி, தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படிப் புனையப்பட்டது என்பதை நான்கு வார்த்தைகளால் முடித்தார்.

அதாவது கோப்புகளைத் தவறாகப் படித்ததாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோப்புகளைப் படித்ததாலும் சில கோப்புகளைப் படிக்காமல் விட்டதாலும் சில கோப்புகளை இடப் பொருத்தமற்று படித்ததாலும் ஏற்பட்டதே இந்த வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ என்னால் முதல்வர் கண் கலங்கினார் என என்னுடைய பொது வாழ்வில் கரும்புள்ளியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கருத்தை தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 29 மா 2021