மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

எடப்பாடியில் ஸ்டாலின்: கொளத்தூரில் எடப்பாடி

எடப்பாடியில் ஸ்டாலின்: கொளத்தூரில் எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று இரவு மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

சேலத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் எடப்பாடி தொகுதிக்குச் சென்றார். எடப்பாடியில் முதல்வரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் சம்பத் குமாருக்கு வாக்கு சேகரித்து, சாலையில் நடந்து சென்று பிரச்சாரம் செய்தார்.

எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, திமுக தேர்தல் அறிக்கையை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் எடப்பாடி காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்குச் சென்றும் வாக்கு சேகரித்தார்.

பொதுமக்கள் பலர் ஸ்டாலினுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தேர்தல் பிரச்சார அட்டவணையில் எடப்பாடி தொகுதியில் நேற்று ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகக் குறிப்பிடப்படாத நிலையில் இந்த திடீர் விசிட் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென எடப்பாடி நகருக்கு நடந்து வந்து வாக்கு சேகரித்த அவரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.

எடப்பாடி தொகுதிக்கு ஸ்டாலின் சென்ற நிலையில் நேற்று, முதல்வர் பழனிசாமி கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை ஆதரித்துப் பேசிய அவர், "ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது கொளத்தூர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுக வந்தபிறகுதான் கொளத்தூர் தொகுதிக்குப் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இப்போது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தொகுதிக்கு வந்து முகத்தைக் காட்டி செல்கிறார்” என்று விமர்சித்தார்.

மேலும், "அதிமுக ஊழல் செய்துள்ளது என்று செல்லும் இடத்திலெல்லாம் ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படியே இருக்கட்டும், இதே கொளத்தூருக்கே நான் வருகிறேன். ஸ்டாலினும் வரட்டும், ஒரு மேடை போடுங்கள். இருவரும் மைக் பிடித்துப் பேசுகிறோம். எந்த துறையில் ஊழல் நடந்துள்ளது என அவர் சொல்லட்டும். நான் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு கூறுங்கள். அதேபோன்று திமுக ஆட்சியில் என்னென்ன செய்தீர்கள் என்று நாங்களும் கேட்போம், அதற்குப் பதில் சொல்லவேண்டும்" என்று ஆவேசமாக பேசினார்.

இதுபோன்று ஒரே நாளில் கொளத்தூரில் எடப்பாடியும், எடப்பாடியில் ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தது இரு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 29 மா 2021