பூத் ஏஜென்ட் விதியை மாற்றுவதா? – வங்கத்தில் பொங்கும் மம்தா கட்சி!

politics

எட்டு கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்க மாநிலத்தில், வாக்குச்சாவடி முகவர் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் புது விதிக்கு மம்தாவின் திரிணமூல் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதை உடனடியாக மாற்றி பழைய விதியையே கொண்டுவர வேண்டும் என்றும் அந்தக் கட்சி ஆணையத்திடம் மனு அளித்திருக்கிறது.

நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைமுறைகள் உரியபடி நடக்கிறதா, யாராவது கள்ள ஓட்டு போடுகிறார்களா என்பனவற்றைப் பார்ப்பதற்காக, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன் முகவரை வைத்துக்கொள்ளலாம். இந்த முகவர் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியின் வாக்காளராகவே இருக்கவேண்டும். நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த விதியை, அண்மையில் கூடிய தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத்தில் அறிவிக்காமல், அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் தானே மாற்றிவிட்டதாக பிரச்னை எழுந்திருக்கிறது.

குறிப்பாக, மேற்குவங்கத்தில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில், பல இடங்களில் வெளி ஆள்கள் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்துகொண்டு வாக்காளர்களை உள்ளே விடவில்லை என்று பிரச்னை ஏற்பட்டது. பாஜகவினரே இப்படி பிரச்னை செய்தனர் என தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களும் அளிக்கப்பட்டன.

சம்பவத்துக்கு முன்னரும் பின்னரும் பிரச்சாரத்தில் மம்தா பேசுகையில், பாஜகவினர் உத்தரப்பிரதேசத்திலிருந்து குண்டர்களை வரவழைத்து வாக்குகளைக் கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர் என்று கூறியதும் இந்த இடத்தில் முக்கியமானது. அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் ஓர் இடத்தில் அனுமதியின்றி தங்கியிருந்த வெளி ஆள்களை போலீசில் பிடித்துக்கொடுத்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில்தான், வாக்குச்சாவடி முகவர் விதியில் தலைமைத் தேர்தல் ஆணையம் திடீரென ஒரு மாற்றத்தைச் செய்திருப்பது திரிணமூல் கட்சிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்கியதையொட்டி, எந்தக் கட்சியிடமும் சிறு ஆலோசனைகூட நடத்தாமல், நாடாளுமன்றக் கூட்டத்தில்கூட இதைப் பற்றி மூச்சு விடாமல், சத்தமில்லாமல் விதியை மாற்றியது. இதன்படி, வாக்குச்சாவடி முகவராக இருப்பவர்கள் அதே வாக்குச்சாவடி எல்லைக்குள் வாக்காளராக இருக்க வேண்டும் என்பது தேவையில்லை; அந்தத் தொகுதியின் எந்த சாவடி எல்லைக்குள்ளும் அவர் வாக்காளராக இருந்தால் போதுமானது.

எல்லா வாக்குச்சாவடிகளிலும் கட்சிக்கு உறுப்பினர் இல்லாத பாஜக போன்ற கட்சிகளுக்கு சாதகமாகவே, இந்த விதி மாற்றம் கொண்டுவரப்பட்டதா என்பது திரிணமூல் கட்சியின் கேள்வி.

இதை உடனே மாற்றி பழையபடி விதியைக் கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் தேதி அன்று வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த விதி விவகாரம் என்ன ஆகும் என புதிய எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

**- இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *