மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

தெற்கிலே தேய்ந்து போன அதிமுக வாக்கு வங்கி... கமல் போடும் கணக்கு: ஆளும் கூட்டணிக்கு ஆமணக்கு!

தெற்கிலே தேய்ந்து போன அதிமுக வாக்கு வங்கி... கமல் போடும் கணக்கு: ஆளும் கூட்டணிக்கு ஆமணக்கு!

பரம்பரை அடையாளம் தந்த பரமக்குடி, ஆளாக்கிய ஆழ்வார்பேட்டை என தமிழகம் முழுவதும் உள்ள 233 தொகுதிகளை விட்டு விட்டு, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்பதைப் போல கோவை தெற்கிலே தேர்தல் களம் கண்டார் கமல். அவர் கோவையில் போட்டி போடுவதாகக் கூறியதும், அங்கே எதற்குப் போட்டியிடுகிறார் என்று கேள்விகளை அடுக்கினார்கள் பத்திரிக்கையாளர்கள். அவர்களிடம் ‘ஏன் போட்டியிடக் கூடாது’ என்று எதிர்க்கேள்வி கேட்டு வழக்கம்போல குழப்பியடித்தார் உலக நாயகன்.

அப்போது அந்தக் கேள்விக்கு சரியான விடை கிடைக்காவிடினும், அவர் களத்தில் இறங்கி வீதி வீதியாகவும் வலம் வந்தபோதுதான் அதற்கு தானாகவே விடை கிடைத்தது. எங்கே போனாலும் மக்கள் திரள்கிறார்கள்; செல்பி எடுக்கிறார்கள்; அவரிடமே உங்களுக்குத்தான் ஓட்டு என்று உறுதி கொடுத்து விட்டு நகர்கிறார்கள். நீங்க மட்டும் போட்டா போதாது; நீங்க ஒவ்வொருத்தரும் 10 பேர்ட்ட ஓட்டு வாங்கித்தரணும் என்று கமல் கேட்க, சந்தோஷமாகத் தலையாட்டிக் கொண்டு போகிறார்கள். தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து கமல், கோவையில் தான் முகாம் அடித்திருக்கிறார். கோவை தெற்கு தொகுதியிலேயே அமைந்திருக்கும் ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தாவில் தங்கிக் கொண்டு, காலையில் வாக்கிங் போகிறார்; எம்ஜிஆர் உடற்பயிற்சி செய்த ஜிம்மைப் போய்ப் பார்க்கிறார். டவுன்பஸ்சில் ஏறி மக்களிடம் உட்கார்ந்து பேசுகிறார். எங்கேயோ இறங்கி ஆட்டோவில் ஓட்டலுக்குத் திரும்புகிறார். கூட்டம் எவ்வளவு இருந்தாலும் கூசாமல் உள்ளே ஊடுருவிச் செல்கிறார். கையெடுத்துக் கும்பிடுகிறார்; கைகுலுக்குகிறார். தோளில் கை போடுகிறார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார். சொல்லப்போனால் கமலின் பரப்புரையும் அவருடைய ‘வெற்றிவிழா’ படம் போலவே பரபரவென்று போகிறது.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அவர் களத்தில் இறங்கியபோது, ‘நிறைய்யா ஓட்டுப் பிரிப்பாரு; அது பிஜேபி வேட்பாளர் வானதிக்குதான் சாதகமா இருக்கும்’ என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள், பேசினார்கள். ஆனால் கமலின் பரப்புரை ஏற்படுத்தியிருக்கும் மாற்றம், எல்லா வேட்பாளர்களையும் வீழ்த்தி, அவருக்கே வெற்றிச்சான்று கொடுத்து விடுமோ என்று மற்ற கட்சியினர் அனைவரும் மலைத்துப் போக வைத்திருக்கிறது. இங்கிருந்து அருகருகில் உள்ள பல மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டரிலும், கார்களிலும் பறந்து பறந்து போய் பரப்புரை செய்து விட்டு கோவைக்குத் திரும்பி விடுகிறார் கமல். இடையில் திருச்சி, மதுரை, சென்னை என எங்கெங்கோ போய் விட்டதால், இனி அவர் இங்கு பரப்புரைக்கு வரமாட்டார் என்று இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் சற்று ஆசுவாசமடைந்திருந்தனர்.

அதற்கு மாறாக, மீண்டும் கோவைக்கு வந்த கமல், நேற்று வரையிலும் காலைதோறும் நகர்வலம் வந்து, மாலையில் மட்டும் வேறு ஊர்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், பாரதிய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனின் களப்பணி எல்லோரையும் மிஞ்சும் வகையில் இருந்ததால், கடைசி நேரத்தில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கவலை கொண்டிருந்தனர். இதுபற்றி கமலிடம் அவர்கள் பேசியுள்ளனர். அதனால் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து பரப்புரையின் கடைசி நாளான ஏப்ரல் 4 ஆம் தேதி வரையிலும் கோவையிலேயே முகாமிட்டு, உச்சக்கட்ட பரப்புரையை கமல் மேற்கொள்ளப் போகிறார் என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். தற்போதுள்ள நிலையில், தங்களுடைய தலைவர் கட்டாயமாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையே அவர்களிடம் காணப்படுகிறது.

என்ன கணக்கில்தான் ஜெயிக்க முடியுமென்று கேட்டபோது அவர்கள் சொன்ன கணக்கு இதுதான்...

‘‘கோவை தெற்கு தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்குகள்தான் இருக்கின்றன. இதில் ஒன்றே முக்கால் லட்சம் வாக்குகளுக்கும் குறைவான வாக்குகள்தான் பதிவாகும். எங்கள் தலைவர் உள்ளிட்ட முக்கியமான மூன்று வேட்பாளர்கள், அ.ம.மு.க., நாம் தமிழர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் வாக்குகளைப் பிரிப்பதால் 60 ஆயிரம் வாக்குகள் வாங்கினாலே சாதாரணமாக அங்கு வெற்றி பெற்று விடலாம். 75 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் பலமான வெற்றி. 85 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் ‘க்ளீன் ஸ்வீப்’ வெற்றி கிடைத்துவிடும். அப்படியொரு வெற்றியைக் குறி வைத்துத்தான் நாங்கள் களப்பணி செய்கிறோம்.

கோவை தெற்கு தொகுதி, நீண்ட காலமாக அ.தி.மு.க.,வசம்தான் இருக்கிறது. ஆனால் அதன் வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது. அதேபோல வாக்குப்பதிவும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில், கோவை மேற்கு தொகுதியாக இருந்தபோது, 72 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அப்போது அதிமுக வேட்பாளராக நின்ற சேலஞ்சர் துரை, 80, 637 வாக்குகள் வாங்கினார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனனுக்கு 59,788 வாக்குகள்தான் கிடைத்தன. அப்போது பிஜேபி தனித்து நின்றது. இதே வானதி சீனிவாசன் 33,113 வாக்குகள் பெற்றார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இவ்விரண்டு கட்சிகளும் இணைந்துதான் தேர்தலைச் சந்தித்தன. ஆனால் அந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்த வாக்குகள் 46, 368 மட்டுமே. ஐந்தாண்டுகளில் அதிகரித்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட்டு விட்டு இரு கட்சிகளும் முந்தைய தேர்தலில் தனித்தனியாக வாங்கிய வாக்குகளைச் சேர்த்திருந்தால் கூட 92,901 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அதில் பாதி வாக்குகள்தான் விழுந்திருக்கின்றன. இதில் இருந்தே இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் வேறு மாதிரி வாக்களிப்பார்கள் என்று கருதினாலும், அதிமுக நின்றால் அது சாத்தியம். இங்கே பிஜேபி வேட்பாளர் நிற்பதால் அதே மோடி வெறுப்பு இப்போதும் ஒர்க் அவுட் ஆகுமென்று நினைக்கிறோம். அதிலும் சிட்டிங் எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனனுக்கு இங்கே சீட் தராதது அந்தக் கட்சியினருக்கு பெரும் வெறுப்பைக் கொடுத்திருக்கிறது. அவர்களெல்லாம் எங்கள் தலைவருக்கு வாக்களிக்கவே வாய்ப்பு அதிகம்.

மற்றொரு புறத்தில், 2011 தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலுார் பழனிசாமி 52,841 வாக்குகள் வாங்கியிருந்தார். ஆனால் 2016 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு 46,369 வாக்குகள் மட்டும்தான் கிடைத்தது. அந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பத்மநாபனும் 7248 வாக்குகள் வாங்கியிருந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு இந்தத் தொகுதியில் மட்டும் 64,453 வாக்குகள் கிடைத்திருந்தன. இதே வாக்குகள் இப்போதும் கிடைக்குமென்று காங்கிரஸ் வேட்பாளர்கள் நம்புகின்றனர். ஆனால் திமுக வேட்பாளர் நின்றிருந்தால் அதே அளவு வாக்குகள் கிடைத்திருக்கலாம். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், மிகவும் ‘வீக்’ ஆக இருக்கிறார். திமுகவினரும் அவருக்கு வேலை பார்ப்பதில்லை. அதனால் திமுக அதிருப்தி வாக்குகளும் எங்கள் தலைவருக்குதான் விழப்போகின்றன.

சென்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில், எங்கள் தலைவர் வந்து பரப்புரை செய்து விட்டுப் போனதற்கே, இந்தத் தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் மகேந்திரனுக்கு 23,800 வாக்குகள் கிடைத்தன. இப்போது எங்கள் தலைவரே நேரடியாக நிற்பதால் இந்த வாக்குகள் அப்படியே இரட்டிப்பாகும் என்பது நிச்சயம். அத்துடன் திமுக, அதிமுக அதிருப்தி வாக்குகளும் எங்களுக்குக் கிடைத்தால் 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வாக்குகள் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. வேண்டுமானால் பாருங்கள். பிஜேபி மகளிரணி தேசியச் செயலாளரை கமல் தோற்கடித்தார் என்ற செய்திதான் மே 2 ஆம் தேதி அகில இந்தியாவிலும் பரபரப்பான செய்தியாக வெளிவரப்போகிறது!’’ என்று நம்மையே கலங்கடித்தார்கள் கமல் கட்சியினர்.

கோவை தெற்கு தொகுதி பிஜேபி தேர்தல் பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘இதெல்லாம் சினிமாக்கதை போலிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், இந்தத் தேர்தலில் பதிவாகப் போகும் வாக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. சென்ற தேர்தலில் இரண்டு கட்சி வேட்பாளர்களும் தனித்தனியாக வாங்கிய 92 ஆயிரம் வாக்குகளில் 70 ஆயிரம் வாக்குகளை நாங்கள் எளிதாக வாங்கிவிடுவோம். எங்கள் வேட்பாளர் கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய களப்பணி, தேர்தல் பிரச்சாரம் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. அதனால் இந்த முறை நாங்கள் ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் வேட்பாளர் மிகவும் பலவீனமாக இருப்பதால், இரண்டாம் இடத்துக்கு அல்லது மூன்றாம் இடத்துக்குதான் கமலால் வரமுடியும்.’’ என்றார்கள்.

மயூரா ஜெயக்குமார் தரப்பில் பேசியவர்கள், ‘‘எங்களுக்கு பப்ளிசிட்டி தேவையில்லை; பரபரப்பு தேர்தல் பணியோ தேவையில்லை. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, கோவையில் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு, இங்கு நடந்துள்ள ஊழல்கள், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தது, சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல்கள் என தற்போதுள்ள சூழ்நிலையே பிஜேபி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளிவிடும். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு விழுந்த வாக்குகளை விட அதிகமான வாக்குகள் இப்போது கிடைக்கும். கமலுக்குக் கூட்டம் சேரலாம்; அது சினிமா கவர்ச்சி. அதற்காக கூட்டத்தில் வருபவர்களெல்லாம் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர் இங்கு வந்து கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் இரண்டாமிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது!’’ என்றனர்.

மூன்று கட்சியினரின் கணக்கையும் கேட்டால் மூளையே குழம்பிவிடும் போலிருக்கிறது. கணிக்கவே முடியாத தொகுதிகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் கோவை தெற்குக்குதான் முதலிடம்!

–பாலசிங்கம்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

திங்கள் 29 மா 2021