கைது வேணாம், காய்ச்சி எடுப்போம்: ஆ.ராசா வழக்கில் எடப்பாடி முடிவு!

politics

சென்னை, ஆயிரம்விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியானது, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து நடிகை குஷ்பு அங்கு போட்டியிடுவதை முன்னிட்டு, மீண்டும் பிரபலம் அடைந்துள்ளது. திமுக சார்பில் இங்கு போட்டியிடும் மருத்துவர் எழிலன், திரை நட்சத்திர அளவுக்கு பிரபலமானவர் அல்ல என உடன்பிறப்புகளில் சிலருக்கு வருத்தம் இருந்திருக்கலாம். அந்தக் குறையைப் போக்கும்படியாகவோ என்னவோ அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆ.ராசாவின் பேச்சு அமைந்துவிட்டது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து செய்துவரும் திமுகவின் துணைப்பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, கடந்த 26ஆம் தேதியன்று ஆயிரம்விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனுக்காக வாக்குகேட்டுப் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமியையும் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு அவர் பேசியபோது, குறிப்பிட்ட ஓரிரு வாசகங்கள் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன. அதை எதிர்த்து இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன.

ராசா மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தநிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குகளும் பதியப்பட்டு, போலீஸ் தரப்பில் தயாராக இருந்தும், கடைசியில் நேற்று மாலையில் நோ சொல்லிவிட்டார், எடப்பாடி.

ராசாவைக் கைதுசெய்தால் அவருக்கு ஆதரவாக திமுக போராட்டம் நடத்தினால், அது அவர்களுக்கு சாதகமாக ஆகிவிட்டால் என்ன ஆகும்? ஏனென்றால், திமுக மேடையில் அதிமுக தலைவர்களைப் பற்றியும் அதிமுக மேடையில் திமுக தலைவர்களைப் பற்றியும் பரஸ்பரம் கடுமையாகப் பேசியதைவிட, ராசாவின் இந்தப் பேச்சு மோசமானதா என்றெல்லாம் விவாதம் வந்தால் பதிலுக்கு நாம் என்ன செய்வது? காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியும் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் குடும்பத்துப் பெண்களைப் பற்றியும் ஜெயலலிதா பேசியதை எல்லாம், திமுகவினர் இரண்டு நாள்களாக சமூக ஊடகங்களில் ஆதாரங்களுடன் எடுத்துப்போட்டு வருகிறார்களே… அதற்கெல்லாம் நம்மிடம் என்ன பதில்?” என்று எடப்பாடியின் ஆலோசகர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட எடப்பாடி, இந்த விவகாரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் பாணியில் இறங்க வேண்டாம் எனும் பாணியைத் தவிர்ப்பது என முடிவு செய்தார். அது சென்னை, திருவொற்றியூர் பிரச்சாரக் கூட்டத்திலும் எதிரொலித்தது. ஆனால் இந்தப் பிரச்னையை முடிந்தவரை தங்கள் பக்கம் சாதகமாகப் பயன்படுத்தாமல் விடவும் அதிமுக தரப்பு தயாராக இல்லை.

“பாருங்கள் முதலமைச்சராக இருக்கும் என்னைப் பற்றியே ஆ.ராசா இப்படி பேசிவிட்டார்…” என கலங்கியபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோதே, அனிச்சையாக நடந்ததைப்போல சிறிது நேரம் ஓர் இடைவெளி விட்டார். இதைப் பற்றி அவர் என்ன பேசப்போகிறார் என அந்த இடத்திலும் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பார்த்துக்கொண்டிருந்த அதிமுக ஆதரவாளர்கள் மட்டுமின்றி மற்றவர்களும்கூட, ’அடடா ஆமால்ல’ என உச் கொட்டும்படி ஆனது.

வழக்கு, கைது ஆகியவை ஒருபக்கம் இருக்க, ‘இது நல்லாயிருக்கே’ என்கிறபடி, உணர்ச்சிவச கண்கலங்கலுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைக்கவும், இதையே தொடரலாமோ எனும் எண்ணத்தையும் அது உருவாக்கிவிட்டது.

இந்தச் சூழலில், கைது செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாக தள்ளிவைப்பதென முடிவு செய்யப்பட்டது என்கிறார்கள், அதிமுக உயர்மட்ட வட்டாரத்தில்!

எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம்!

**- இளமுருகு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *