மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு!

ஆ.ராசா  கொடும்பாவி எரிப்பு!

முதல்வரைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக, ஆ.ராசாவைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா, கடந்த மார்ச் 26ஆம் தேதி, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பிட்டு ஆ.ராசா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் பிறப்பு குறித்து அவதூறு பேசியதாக ஆ.ராசாவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும், அவ்வாறு பேசவில்லை என்று மறுப்புகளும் எழுந்தன.

இந்நிலையில், ஆ.ராசாவை கண்டித்துக் கடந்த இரு நாட்களாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம்

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே, ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதலமைச்சரின் தாயாரை கொச்சைப்படுத்திப் பேசியதாக ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் அவரது உருவபொம்மையை எரித்து, கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி

ஆரணியில் ஆ.ராசாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், அவரது புகைப்படங்களை எதிர்த்தும் கண்டனம் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நகர கழக செயலாளர் மதியழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுபோன்று செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்

வேலூர் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆ.ராசாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் எம்ஜிஆர் சிலை அருகே ஆ. ராசாவைக் கண்டித்து, அதிமுக புவனகிரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோன்று சிதம்பரத்திலும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அருகே செஞ்சி நான்குமுனை சந்திப்பு, நாகை வேதாரண்யம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், ஆ.ராசாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாரே ஊர்வலமாக வந்து பவானி காவல் நிலையத்தில், ராசாவை கைது செய்யக் கோரி புகார் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில், அதிமுக மகளிர் அணியினர் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும், ஆ.ராசாவை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.

சென்னை

சென்னை வேளச்சேரியில், முதல்வரின் தாயாரை கொச்சைப்படுத்திப் பேசியதாக ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அவரது கொடும்பாவியை எரித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று, தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் புகழையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்கிலும் பேசியதாக கூறி, ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தார். தேவையற்ற பேச்சுகள் எடுபடாது அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை வடபழனி பேருந்து நிலையம் பகுதியில் ஒன்று கூடிய அதிமுகவினர், ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்தும், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று, ஆ.ராசாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அப்போது, ‘அரசியல் ஆளுமையை ஒப்பிட்டுத்தான் பேசினேன். அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள்’ என ஆ.ராசா பதிலளித்திருக்கிறார்.

ஸ்டாலின் பேசியதையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கமளித்த ஆ.ராசா, ”இருவரையும் அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தி நான் பேசிய இரண்டு மூன்று வரிகளை ஒட்டியும், வெட்டியும் எடுத்து முதல்வரை அவதூறாகப் பேசியது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் பேசியது எல்லாம், அரசியலில் இருவருக்கும் இடையே உள்ள உயரம், ஒப்பீடு. ஒரு குழந்தை ஆரோக்கியமான குழந்தை, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தை என்று பேசினேனே தவிர, இரண்டு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அவரது பிறப்பைக் கொச்சைப்படுத்திப் பேசினேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது” என்று கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 28 மா 2021