xபுதுச்சேரி வேட்பாளர்களின் குற்றப் பின்னணி!

politics

புதுச்சேரியில் உள்ள வேட்பாளர்களில் 54 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித் தகுதி தொடர்பாகத் தன்னார்வ கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை நேற்று (மார்ச் 28) வெளியிட்டது.

ஆய்வு செய்யப்பட்ட வேட்பாளர்களில் 323 பேரில் 54 பேர் மீது (17 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் மீது (9 சதவீதம்) கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் இரு வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், ஒரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளன. ஒரு வேட்பாளர் மீது பெண்ணை மானபங்கப்படுத்தித் தாக்கிய வழக்கும் உள்ளது. இது கடந்த 2016 தேர்தலில் 30 பேராக இருந்தது.

**கட்சி ரீதியாக கிரிமினல் வழக்கு விவரம்**

அதிமுகவில் 5 வேட்பாளர்களில் 3 பேர் மீதும் (60 சதவீதம்), பாஜகவில் 9 வேட்பாளர்களில் 5 பேர் மீதும் (56 சதவீதம்), திமுக வேட்பாளர்களில் 13 பேரில் 7 பேர் மீதும் (54 சதவீதம்), காங்கிரஸில் 14 வேட்பாளர்களில் 4 பேர் மீதும் (29 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

**கடுமையான கிரிமினல் வழக்குகள் விவரம்**

அதிமுகவில் 5 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (40 சதவீதம்), பாஜகவில் 9 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் ( 22 சதவீதம்), காங்கிரஸில் 14 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (14 சதவீதம்), என்.ஆர்.காங்கிரஸில் 16 வேட்பாளர்களில் ஒருவர் மீதும் (6 சதவீதம்), சுயேச்சை வேட்பாளர்களில் 96 பேரில் 4 பேர் மீதும் (4 சதவீதம்) கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

**கல்வித் தகுதி**

புதுச்சேரியில் 162 வேட்பாளர்கள் 5 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள். இதன் சதவீதம் 50. 133 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் (41 சதவீதம்), 18 பேர் பட்டயப்படிப்பும், 6 பேர் படிக்காதவர்கள் என்றும், 4 பேர் ஓரளவு படிக்கத்தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

**வயது**

புதுச்சேரியில் போட்டியிடுவோரில் 175 பேர் 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் சதவீதம் 54. அதேபோல் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் 109 பேர். இதன் சதவீதம் 34. 61 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் 39 பேர். இதன் சதவீதம் 12 ஆகும்.

**பாலினம்**

புதுச்சேரியில் பெண் வேட்பாளர்கள் 36 பேர் களத்தில் உள்ளனர். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 343 பேரில் 26 பேர் களத்திலிருந்தனர்.

இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் கூறுகையில், “வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதை உச்ச நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். கொடூரக் குற்றங்கள் உடைய வேட்பாளர்களை நிரந்தரத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் தரும் வேட்பாளர்களை நீக்க வேண்டும். அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை உரியக் காலத்தில் முடிக்க வேண்டும். வேட்பாளர்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த ஆய்வு செய்தோம்” என்று குறிப்பிட்டார்

**இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *