இந்தி பேசி ஓட்டுகளைக் கவர வடமாநிலத் தலைவர்களை இறக்கும் பாஜக!

politics

காங்கிரஸ் கட்சியோ, பாஜகவோ, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்தியத் தலைவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கமானதுதான்; ஆனால், இந்த முறைதான் அதிக அளவில் வேற்று மாநிலங்களின் மாநிலத் தலைவர்களைச் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைக் கவரக் களம் இறக்கியுள்ளது பாஜக .

மேற்குவங்கத்தில் இந்தி பேசும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றுகின்றனர். ஏற்கெனவே அங்கு வங்காள மண்ணைச் சேர்ந்தவர்கள், அந்நிய சக்திகள் என மம்தா பிரச்சாரத்தை ஒரு பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டும் காணாததுமாக தங்கள் பக்கத்தை வலுப்படுத்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், முன்னாள் முதலமைச்சரும் இப்போதைய மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஆகியோரை அடிக்கடி மேற்குவங்கத்தில் பெரும் பொதுக்கூட்டங்களில் பேசவைத்தது. அவர்களும் சில நாள்கள் ஒன்று சேர்ந்தாற்போல முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதைப்போலவே, தமிழகத்திலும் பாஜகவின் அகில இந்தியத் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போன்றவர்களைக் களம் இறக்கியுள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் பிரச்சாரம் செய்த நட்டாவை, வடசென்னை பகுதியில் இந்தி, ராஜஸ்தானி, மார்வாரி மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் செய்யவைத்தது.

சென்னையில் மார்வாரிகள் அடர்த்தியாக வசிக்கும் சௌகார்பேட்டை பகுதியில் நட்டா பிரச்சாரம் செய்கையில் மருந்துக்கும் ஆங்கிலத்திலோ தமிழிலோ பேசவில்லை. வடமாநில மக்களுடன் அவர்களின் மொழியில் பேசுவது என்பது மனோரீதியாக அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் எனும் யதார்த்தத்தை பாஜக பயனுள்ள உத்தியாகக் கடைப்பிடித்துள்ளது.

கோவையிலும் கிட்டத்தட்ட இதே அளவுக்குப் பரவியிருக்கும் வடமாநில பூர்வீக மக்கள் மத்தியிலும் இந்தி பேசும் பாஜக தலைவர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். கவரக்கூடிய பேச்சாளர்களாகவும் வடமாநிலத் தலைவர்களைக் கொண்டு வந்திருக்கிறது, பாஜக தரப்பு. முன்னாள் நடிகையும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இராணி, வடமாநில பூர்வீக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு திரை பிரபலம். அவரை இன்னும் நடிகையாகவே பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவரைக் கொண்டுவந்து கண்முன் நிறுத்தி வாக்குகளைத் திரட்ட முயல்கிறது, பாஜக. கோவையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்மிருதிஇரானி வந்த வேலையைச் சரியாகவே செய்துகாட்டினார். ஸ்கூட்டரில் பேரணி சென்றும் வாக்காளர்களைக் கவர்ந்தார்.

சென்னையில் சௌகார்பேட்டை உள்ளடங்கிய துறைமுகம், எழும்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் பாஜக கூட்டணிக்காக ஸ்மிருதி பிரச்சாரம் செய்தார்

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் சில வடமாநில பிரபலங்கள் பாஜகவுக்காக வாக்குகளைத் திரட்ட வருகை தர இருக்கின்றனர்.

அவர்களின் கணக்கில் அர்த்தம் இல்லாமல் இல்லை!

ஏனென்றால் முன்னர் மக்களவைத் தேர்தலின்போது மைய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், வடமாநில பூர்வீக மக்களிடம் வாக்குக்கேட்க அவர்களின் மொழியில் சுவரொட்டி அடித்து ஒட்டியது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மொழியுரிமை காக்கப் போராடிய தமிழ் மண்ணில், வளர்ந்துவரும் இந்த மொழி அரசியல் ஆட்டம் வித்தியாசமானது!

**- இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *