மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

முதியோர் வாக்குகள் சொல்லும் ஆரூடம்... திமுகவுக்கு சூட்டுமா மகுடம்?

முதியோர் வாக்குகள் சொல்லும் ஆரூடம்... திமுகவுக்கு சூட்டுமா மகுடம்?

தபால் வாக்குகளால் வெற்றி எதிர் திசைக்குத் திரும்பிய வரலாறு தமிழகத்தில் நிறைய நடந்திருக்கிறது.

நம்முடைய ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தேசத்தில் நிலை நிறுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பது நமக்குத் தெரிவதை விட, அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

2006 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செளந்தரராஜன் வாங்கிய வாக்குகள் ஒரு லட்சத்து 269. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னசாமி வாங்கியது ஒரு லட்சத்து 283 வாக்குகள். அதாவது 14 வாக்குகள்தான் வித்தியாசம். அப்போதிருந்த தேர்தல் அதிகாரி, செளந்தரராஜனுக்கு விழுந்த தபால் வாக்குகளை அதிமுகவுக்கு மாற்றிவிட்டதாக வாக்கு எண்ணும் மையத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடினர். எந்த பயனும் ஏற்படவில்லை.

ராதாபுரம் அப்பாவு வழக்கு ஊரறிந்த சேதி. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், மூன்று சுற்றுக்களில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வாக்குகளும் எண்ணப்பட்டன. அதில் அவர் வென்று விட்டதாகவே தகவல்கள் வெளியில் கசிந்தன. ஆனால் அந்த முடிவை அறிவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அதற்கு தடை பெற்றார் இன்பதுரை. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது. ஐந்தாண்டுகள் முடிந்து, அதே தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை.

இப்படி தபால் வாக்குகள் ஏற்படுத்தும் விளைவுகள், அரசியலில் பல அதிர்வுகளை உண்டாக்கியிருக்கின்றன. முன்பெல்லாம் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மட்டும்தான் தபால் வாக்குகள் போட முடியுமென்ற நிலை இருந்தது. இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக, 80 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக 12டி என்ற படிவம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தரப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்கள், அந்தந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, 80 வயதுக்கு மேற்பட்டோரைக் கண்டறிந்து, அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று, ‘‘நீங்கள் வாக்குச்சீட்டு முறையில் வீட்டில் இருந்து வாக்களிக்கிறீர்களா... வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கிறீர்களா?’’ என்று கேட்டு, விருப்பம் தெரிவித்தவர்களிடம் படிவத்தில் கையெழுத்து அல்லது கைநாட்டு வாங்கிச் சென்றார்கள். அதன்பின், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன், வாக்குச்சீட்டை இரண்டு அலுவலர்கள் கொண்டு வருகின்றனர். அதே வீட்டுக்குள் மறைவாக ஓரிடத்தில் தங்கள் விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு உதவுகின்றனர். அதன்பின், அந்த வாக்குச்சீட்டு முறைப்படி மடிக்கப்பட்டு, சீலிடப்பட்ட பெட்டியில் போடுகின்றனர். வாக்களித்ததற்கான சான்றாக மீண்டும் கையெழுத்து அல்லது கை நாட்டு வாங்கிக் கொள்கின்றனர். கட்சிக்காரர்கள் யாராவது வந்தால் அவர்களை வெளியில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பெட்டி, மறைவிடம் என ஒவ்வொரு வீடும் வாக்குச்சாவடியைப் போன்று தோற்றம் பெறுவதைப் பார்க்க முடிந்தது.

தமிழகத்தில் மட்டும் 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் கணக்கிட்டது. தமிழகத்தில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 6.27 கோடி வாக்காளர்களில் இவர்களின் எண்ணிக்கை 2.07 சதவிகிதம் ஆகும். மாநிலம் முழுவதுமாகச் சேர்த்தே 80 வயதுக்கு மேற்பட்டோர், ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 49,114 பேரும், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள 35 பேர் என மொத்தம் இரண்டு லட்சத்து எட்டாயிரம் பேர் மட்டுமே தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியால் தேர்தல் பரபரப்பு மேலும் அதிகமாகியுள்ளது. திமுகதான் ஜெயிக்கும், அதிமுகதான் ஜெயிக்கும் என்று தேர்தல் கணிப்புகள் மாறிமாறி வெளியாகிவரும் நிலையில், இந்த தபால் வாக்குகளில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அதிகமிருக்கும் என்று தெரிந்தால், அதுவே ஒட்டு மொத்தத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற கருத்தும் பரவிவருகிறது. இதனால் தபால் வாக்குகள் சேகரிக்கும் அலுவலர்களிடம் இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், யாருக்கு வாக்கு விழுந்தது என்று கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி, பெரம்பலுார், வேலுார் ,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும், நாமும் இதுகுறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள களமிறங்கி விசாரித்தோம்.

தபால் வாக்குகளைச் சேகரிக்கும் அலுவலர்கள் தரப்பில் நமக்குக் கிடைத்த தகவல்கள் இதுதான்...

‘‘நகர்ப்புறம், கிராமப்புறம் என எல்லாப் பகுதிகளிலும் பரவலாக முதியோர்கள் பலர், வீட்டிலிருந்தபடியே வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், தங்கள் வாக்குகளை யாருக்குப் பதிவு செய்திருக்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கும் தயங்கவே இல்லை. பலர் தங்களின் மகன் அல்லது மகள் தரும் பணத்தை வைத்து அல்லது இருவரில் ஒருவருடைய பென்ஷன் தொகையை தங்கள் அன்றாட, மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலையேற்றம் அனைத்தும் இவர்களுடைய அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் மீதுதான் அதிகமான வெறுப்பில் இருக்கின்றனர். அதைத் தங்கள் வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினர். சொல்லப் போனால், பலர் பகிரங்கமாக திட்டி, சாபமிடுகின்றனர். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவது அப்பட்டமாகத் தெரிகிறது. எங்களுக்குத் தெரிய பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை, திமுகவுக்குதான் விழுந்திருக்கின்றன!’’ என்கிறார்கள்.

இந்தத் தகவல், அரசல் புரசலாக வெளியில் கசிய ஆரம்பித்ததும், இதை வைத்து, அரசியல்கட்சியினரிடம் இன்னொரு விதமான கருத்தும் பரவி வருகிறது. அதாவது, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் பெரும்பாலும், அவர்களின் மகன் அல்லது மகள் யாராவது ஒருவரைச் சார்ந்துதான் வாழ்கிறார்கள். அவர்கள் யாரும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை, வெளியில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து வாக்களிக்கும் அளவுக்குத் தெளிவானவர்களாக இருப்பதில்லை. தங்கள் மகன், மகள் அல்லது மருமகன் சொல்கிறபடியே வாக்களிக்கின்றனர். அவர்கள் இவர்களுக்குச் சொல்லும் தகவல்களைத்தான் தங்கள் வார்த்தைகளில் இவர்கள் பிரதிபலிக்கின்றனர். அப்படிப் பார்க்கும்போது, முதியோர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களுடைய குழந்தைகளின் குடும்பத்திலும் அனைவரின் வாக்குகளும் அதே கட்சிக்குத்தான் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்போது திமுகவுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவானால் அதுதான் வரும் தேர்தலிலும் பரவலாக எதிரொலிக்கும். தற்போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குகள் பெருமளவில் திமுகவுக்குக் கிடைத்து வருவதாக வரும் தகவல்கள், அக்கட்சியினரை பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் அதிமுகவினரையும் ‘அலர்ட்’ செய்ய வைத்துள்ளன. இதனால் தபால் வாக்குகளை முடக்குவதற்கான முயற்சிகள் துவங்கிவிடுமோ என்ற அச்சமும் திமுகவினரிடம் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த தபால் வாக்குகளால் எத்தனை தொகுதிகளில் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படவுள்ளதோ என்ற பதற்றமும் இரண்டு கட்சியினரிடமும் காணப்படுகிறது. இது மே 2ஆம் தேதி வரை நீடிக்கும்.

தேர்தல் முடிவுகள் குறித்து கணிப்புகள் சொன்னதை விடஇந்த முதியோரின் வார்த்தைகளும் வாக்குகளுமே தேர்தல் முடிவுகளின் நிஜமான பிரதிபலிப்பாக இருக்க முடியும்!

–பாலசிங்கம்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 28 மா 2021