மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

எடப்பாடியின் அம்மா: ஆ.ராசா பேசியது என்ன?

எடப்பாடியின் அம்மா:  ஆ.ராசா பேசியது என்ன?

தமிழகத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது அதிமுகவின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திருமாறன் இன்று (மார்ச் 27) தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், “ மார்ச் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் ஆ.ராசா. அப்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி தகாத முறையில் மூன்றாம் தர வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். அது குறித்த பத்திரிக்கை செய்தியையும் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளேன்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி ஏற்கனவே ஆ.ராசா அவதூறான கருத்துகளைப் பேசியிருக்கிறார். அதற்காக ராசா மீது சென்னை மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆ.ராசா தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் தவறான, இழிவான, வெறுப்பூட்டும் பேச்சுகளை தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு மாறாக தொடர்ந்து பேசி வரும் ஆ. ராசாவின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அந்த புகாரில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து ஆளுநரிடமும் ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

திருமாறன் அளித்த புகாரோடு இணைக்கப்பட்ட வீடியோவில் ஆயிரம் விளக்கில் ஆ. ராசா பேசிய பேச்சின் சில மணித்துளி பதிவு உள்ளது. அதில், “ திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நல்ல உறவில் பிறந்த குழந்தை என்றும் எடப்பாடிபழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை” என்றும் ராசா பேசுகிறார். இந்த வீடியோ நேற்று முதல் சமூக தளங்களில் வைரலாகி இன்று அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதற்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆயிரம்விளக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராசா சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பேசியிருக்கிறார். அந்த பேச்சின் பதிவை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். அந்த முப்பது நிமிட பேச்சையும் நாம் முழுமையாக கவனித்தோம்.

“திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசியல் ரீதியாக எப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்தார் என்றும் மிசா காலத்தில் ஓராண்டு சிறைவாசம், அதன்பிறகு மாவட்ட பிரதிநிதி, அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர், அதன் பிறகு செயற்குழு உறுப்பினர், அதன் பிறகு துணைப்பொதுச்செயலாளர், அதன்பிறகு பொருளாளர், கலைஞர் உடல்நலம் குன்றிய போது செயல் தலைவர், கலைஞர் மறைவிற்கு பின் தலைவர் என்று படிப்படியாக மு.க.ஸ்டாலின் அரசியல் வளர்ச்சி அமைந்திருக்கிறது

அதேநேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வளர்ச்சி படிப்படியாக அமைந்ததா? ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி முகத்தை உங்களில் யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா மறைந்த பிறகு கூவத்தூரில் இந்த ஆட்சி எப்படி அமைந்தது என்று அந்த ஆட்சியின் கேபினட் மினிஸ்டர் ஆக இருக்கும் சி.வி சண்முகமே தெரிவித்துள்ளார். தினகரன் தங்களுக்கு ஊற்றிக்கொடுத்து இந்த ஆட்சி அமைந்ததாக சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் அதிகாரத்தில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய அரசியல் வளர்ச்சியும் மு. க .ஸ்டாலின் உடைய அரசியல் வளர்ச்சியும் எப்படி ஒன்றாக முடியும்? மு .க. ஸ்டாலின் என்பவர் பெண் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் முடித்து சாந்திமுகூர்த்தம் நடத்தி நல்ல உறவில் பிறந்த குழந்தை. எடப்பாடிபழனிசாமி என்பவர் இது எதுவுமே நடக்காமல் கள்ள உறவில் பிறந்த குழந்தை” என்று இருவரது அரசியல் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பேசுகிறார். இந்த நிலையில்தான் ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

தன் மீதான புகார்களுக்கு பதிலளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, “ திமுக தலைவர் ஸ்டாலினையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்திப் பேசிய, எனது தேர்தல் பரப்புரை பேச்சுகளை, ஒட்டியும் வெட்டியும் தங்களுக்கு ஏற்றார் போல், சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இருவரையும் அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தி நான் பேசிய இரண்டு மூன்று வரிகளை ஒட்டியும், வெட்டியும் எடுத்து முதல்வரை அவதூறாகப் பேசியது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. முதல்வரை அவதூறாகப் பேச வேண்டும் என்றோ, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ எனக்கு கிடையாது.

நான் பேசியது எல்லாம், அரசியலில் இருக்கும் இடையே உள்ள உயரம், ஒப்பீடு. ஒரு குழந்தை ஆரோக்கியமான குழந்தை, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தை என்று பேசினேனே தவிர, இரண்டு வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அவரது பிறப்பை கொச்சைப்படுத்திப் பேசினேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து ஆ,ராசாவின் பெயர் குறிப்பிடாமல் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

“ மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும். தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்”என கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

வேந்தன், பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

சனி 27 மா 2021