மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

மோடி பொதுக்கூட்டம்:டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வாரா?

மோடி பொதுக்கூட்டம்:டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வாரா?

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் வெகு வேகமாக பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

வேன் மூலம் பிரச்சாரம், ஆங்காங்கே பொதுக்கூட்டம் என்று அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சார பாணியை வகுத்துள்ளார்கள். இது தவிர கூட்டணிகளின் சார்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

அமமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி உள்ளிட்டோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன். காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் என்று கூட்டணியில் இடபெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அதிமுக கூட்டணி சார்பிலும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மார்ச் 30, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் வருகிறார். பாஜக தமிழக தலைவர் எல். முருகன் போட்டியிடும் தாராபுரம், மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி, மதுரை, கோவை மற்றும் வட மாவட்டத்தில் ஒரு இடம் என்று மோடியின் பிரச்சாரம் தற்போதைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மோடி வருகையைப் பயன்படுத்தி அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மெகா பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிமுக தலைமையில் இருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் பேசியிருக்கிறார்கள். ‘நம் கூட்டணிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் தற்போதைய மூத்த தலைவர் நீங்கள்தான். மோடி கலந்துகொள்ளும் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’என்று அதிமுக தலைமையில் இருந்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் டாக்டர் ராமதாஸ் தனது முதுமையை சுட்டிக் காட்டி, கொரோனா தொற்று காலத்தில் இதுபோன்ற பொதுக்கூட்டங்களில் தான் கலந்துகொள்ள இயலாத நிலையை அதிமுக தலைமையிடம் சொல்லிவிட்டார். டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்போது கூட தனி மைக், சமூக இடைவெளி என்று வாகனத்திலேயே கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ராமதாஸுக்கு பதிலாக ஜி.கே.மணி, அல்லது அன்புமணி கலந்துகொள்ளக் கூடும் என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்.

-வணங்காமுடி வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 27 மா 2021