மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

அசாம், மேற்குவங்க தேர்தல்: ஒரு பருந்துப் பார்வை!

அசாம், மேற்குவங்க தேர்தல்: ஒரு பருந்துப் பார்வை!

ஐந்து சட்டப்பேரவைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதலில் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால், சட்டப்பேரவைத் தலைவர் ஹிதேந்திர கோஸ்வாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா மற்றும் பல அமைச்சர்கள் இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொகுதிகளில் பெரும்பாலும் ஆளும் பாஜக- அசாம் கண பரிசத் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான 10 கட்சி கூட்டணி, புதிய அசாம் ஜாதிய பரிசத் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையேதான் முதன்மைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பாஜக மட்டும் 39 தொகுதிகளிலும் அ.க.ப. 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இரண்டு தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் உடன்பாடு ஏற்படாததால், லக்கிம்பூர் மற்றும் நகர்கட்டியா ஆகிய தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் அணியில் அக்கட்சி 43 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, சிபிஐ-எம்.எல். விடுதலை, ஆர்.ஜே.டி., அஞ்சலிக் கண மோர்ச்சா ஆகியன தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட அசாம் ஜாதிய பரிசத் 41 இடங்களிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாயின் ராய்ஜர் தள் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

எட்டு கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குவங்கத்தில், முதல் கட்டமாக, புருலியா மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் பாங்குரா, ஜாக்ரம் ஆகிய மாவட்டங்களில் தலா நான்கு, மேற்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் ஆறு, கிழக்கு மித்னாப்பூரில் ஏழு இடங்களில் என 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

திரிணமூல் கட்சியும் பாஜகவும் தலா 29 இடங்களில் போட்டியிடுகின்றன. புருலியா மாவட்டம் ஜாய்ப்பூர் தொகுதியில் திரிணமூல் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரின் மனு ஏற்கப்படவில்லை. அதையடுத்து சுயேச்சையாகப் போட்டியிட்ட அக்கட்சியின் அதிருப்தியாளரை அக்கட்சி ஆதரிக்கிறது.

பாஜகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏஜேஎஸ்யு கட்சிக்கு பாக்முண்டி எனும் தொகுதியை ஒதுக்கியுள்ளது.

காங்கிரஸ்-இடதுசாரிகள்-ஐஎஸ்எஃப் கூட்டணி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆனாலும் சில தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால், கூட்டணிக் கட்சிகளே நட்புமுறையில் எதிரெதிராகப் போட்டியிடுகின்றன.

இதில், கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் இந்த முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதே மாவட்டத்தின் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் அவரின் முன்னாள் அமைச்சரவை சகாவும் பாஜகவுக்குத் தாவி, அந்தக் கட்சியின் முக்கிய வேட்பாளராக இருக்கும் சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினர் செல்வாக்கு உடைய பகுதி இது. மம்தாவுக்கும் அதிகாரிகள் குடும்பத்துக்கும் இடையிலான கௌரவப் பிரச்னையாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் தேர்தல் நடந்து முடியும்வரை பரபரப்பு நீடிக்கவேசெய்யும்.

- இளமுருகு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 27 மா 2021