மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

அதிமுகவின் வெற்றிக்கு மக்களே சாட்சி: பழனிசாமி

அதிமுகவின் வெற்றிக்கு மக்களே சாட்சி: பழனிசாமி

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதேபோல அதிமுகவின் வெற்றிக்கு இங்குள்ள மக்களே சாட்சி. எல்லாத்திசையிலும் மக்கள் வெள்ளம் கடல் போல காட்சி அளிக்கின்றது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகை செல்வனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (மார்ச் 26) பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, எம்ஜிஆர் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக வாழ்ந்தவர்கள். ஆனால் திமுக தலைவர்கள் தங்களது வீட்டைக் காப்பாற்றும் தலைவர்களாக உள்ளனர். அதிமுகவிலிருந்து சென்ற பலருக்கு தற்போது திமுகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் ஸ்டாலினை விமர்சனம் செய்த செந்தில் பாலாஜிக்கு தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் தாங்கள் செய்ததைக் கூறாமல் என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாரிசு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கட்சி திமுக தான். திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின் தான் ஊழல் பெருகியது. 13 திமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் நடைபெற்று வருகிறது.

அதிலிருந்து அவர்கள் யாரும் தப்ப முடியாது. நாங்கள் எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை, மக்களின் நல்லதை மட்டுமே பார்க்கிறோம். பொய்யென்றால் திமுக, திமுக என்றால் பொய். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் நிகழாண்டு 435 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். அருப்புக்கோட்டை மக்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். எனவே இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் மற்றும் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் ராஜசேகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

விருதுநகர், சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி , தி.மு.க தலைவர் ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம், இந்த தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என பேசி வருகிறார். ஸ்டாலின், இந்த ராஜபாளையம் தொகுதிக்கு வந்து பாருங்கள் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று.

தொடர்ந்து அவதூறு பிரசாரம், பொய்பிரசாரம் செய்து வருகிறார் ஸ்டாலின். இதுவரை திமுக சந்திக்காத படு தோல்வியை இந்தத் தேர்தலில் சந்திக்கும். நாட்டு மக்களுக்கு உழைக்கின்ற கட்சி அதிமுக. ஸ்டாலின், நீங்கள் எவ்வளவு தான் பொய் பேசினாலும் மக்கள் நம்பப்போவது இல்லை.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதேபோல அதிமுகவின் வெற்றிக்கு இங்குள்ள மக்களே சாட்சி. எல்லா திசையிலும் மக்கள் வெள்ளம் கடல் போல காட்சி அளிக்கின்றது. இந்த மக்கள் வெள்ளம் அதிமுகவின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கிறது. ஆக ஸ்டாலின் எங்களைப் பற்றி எவ்வளவு தான் விமர்சனம் செய்தாலும், எங்கள் இயக்கத்தை ஒன்றும் செய்யாது, நாங்கள் மேன்மேலும் வளரத்தான் செய்வோம். ஏனென்றால் நாங்கள் உழைக்கின்றோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துகின்றோம்.

அதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கின்றது. நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. அதனால் மக்கள் உங்களை மறந்து விட்டார்கள். 10 ஆண்டுக்காலம் தி.மு.க ஆட்சியில் இல்லாமல் இருக்கின்றார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருக்கின்றபோதே மக்களை மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். ஸ்டாலினுடைய மகன் உதயநிதி காவல் துறை உயர் அதிகாரி டி.ஜி.பியையே மிரட்டுகிறார்.

இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? எண்ணிப்பாருங்கள். எம்.ஜி.ஆர் அந்த காலத்திலேயே தி.மு.க தீய சக்தி, அந்த தீய சக்தியை நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இன்னமும் தி.மு.க திருந்தவில்லை. இந்த அராஜக கட்சி மீண்டும் தமிழகத்தில் தலையெடுத்துவிடக் கூடாது. இன்றைக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஜாதிச் சண்டை கிடையாது. மதச்சண்டை கிடையாது. அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தி.மு.க வந்தால் கூலிப்படை வந்துவிடும், உங்களது சொத்து உங்களிடத்தில் இருக்காது. இந்த நிலைமை தமிழகத்திற்கு வராமல் இருக்க அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 27 மா 2021