மாநிலமா தேசியமா? : நேர்மாறாக மாறிய புதுச்சேரி காட்சி!

politics

மாநிலக் கட்சியின் தலைமை பலவீனத்தால் தேசியக் கட்சியின் தலைமையிடம் சீட்டுக்காக கெஞ்சக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஒரு எம்பி தொகுதி, 30 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய புதுவையில், மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் ஆண்களைவிட 58,392 பேர் அதிகமாக இருக்கிறார்கள். இங்கு பல்வேறு மதத்தினரும் சாதியினரும் வாழ்ந்துவருகிறார்கள்.

கடந்த காலங்களில் மாநிலக் கட்சிகளிடம் தேசியக்கட்சிகள் தொகுதிகள் கேட்டு மன்றாடும். அந்த நிலை மாறி தற்போது தேசியக் கட்சிகளிடம் மாநில கட்சிகள் கையேந்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி புதுச்சேரி அரசியல் நடப்புகளை உற்றுநோக்கிவரும் பலரிடமும் பேசினோம்.

காரைக்கால் மாவட்டத்தில் ஈரம் எனும் அமைப்பின் நிறுவனர் தம்பி மாரிமுத்து நம்மிடம் பேசினார்.

”தேசியக் கட்சிகள் மத்தியில் ஆண்ட கட்சியோ இப்போது ஆளும் கட்சியோ மாநிலக் கட்சியைச் சார்ந்துதான் ஆட்சி நடத்தமுடியும் என்பது வரலாறு. சட்டமன்றத் தேர்தலானாலும் நாடாளுமன்றத் தேர்தலானாலும் மாநிலக் கட்சிகளின் தலைமையிடம் கெஞ்சிக் கூத்தாடி சீட்டுகளைப் பெற்று, அவர்களின் ஆதரவுடன் தான் வெற்றிபெற முடியும். புதுச்சேரி தனி மாநிலம் என்றாலும்கூட திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள தலைமைக்கழகத்தில்தான் முடிவுகளை எடுப்பார்கள். 2011 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி, அதிமுகவுக்கு சீட்டு கொடுப்பது பற்றியும் தொகுதிப் பங்கீடு பற்றியும் போயஸ் தோட்டத்துக்குச் சென்று, காத்திருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசிதான் முடிவெடுத்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியிலும் புதுச்சேரியில் கூட்டணி வைப்பவர்கள் இங்குள்ள கட்சிகளிடம் முடிவு கேட்பார்கள்.” என்றவர்,

மேலும், ”2016 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியில்தான் டெபாசிட் வாங்கியது. அதே கட்சி இந்த முறை அதிமுகவுக்கு சீட்டு கொடுப்பதற்கு அலைக்கழித்தது. அதிமுகவினர் 5 சீட்டுகளைப் பெறுவதற்கு மல்லாடியது. சிட்டிங் எம்எல்ஏவாக 4 பேர் இருந்தும் அவர்கள் கேட்ட 8 சீட் கிடைக்கவில்லை. அதிமுக தலைமையை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை மிரட்டிப் பணியவைத்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி மாநிலக் கட்சிகளின் மானத்தைக் காப்பாற்றிவிட்டார்.” என்றும் கூறினார்.

புதுச்சேரி பொதுமக்கள் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் தலைவர் சிவகுமார், ” புதுச்சேரி திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே தமிழகத் தலைமைகளின் கீழ்தான் செயல்பட்டுவருகின்றன. அவர்களை மீறி எதையும் செய்யமாட்டார்கள். அதிமுக இறங்கிப்போய் பாஜக தந்த தொகுதிகளை வாங்கியிருப்பது, அதிமுகவின் தலைமை பலவீனத்தையே காட்டுகிறது. திமுகவோ நாங்கள்தான் கூட்டணித் தலைமை என்கிற அளவுக்குப் பேசியது. காங்கிரஸ் இறங்கிவந்து இரு கட்சிகளுக்கும் சமமாக 14க்கு 14 என பிரித்துக்கொண்டு மீதம் 2 தொகுதிகளை விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டார்கள். பாஜக தலைமை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவை மிரட்டி தொகுதிகளை வாங்கினாலும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் முழுமனதோடு வேலை செய்யவில்லை. அத்துடன் ரங்கசாமி கட்சியின் சார்பில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். பாஜகவின் செயல்பாடுகளை புதுச்சேரி கூட்டணியில் உள்ளவர்கள் சகித்துக்கொள்ளவில்லை.” என்றார்.

புதுச்சேரியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கார் எலக்ட்ரிசியன் பிரபுவிடம் பேசியபோது, “ புதுவையோ தமிழகமோ பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்துபோகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜக சென்னைக்குப் போய் 5 சீட்டுக்கு போயஸ் தோட்டத்து கதவை தட்டியிருப்பார்கள். கடந்த தேர்தலில், ரங்கசாமி கட்சி, அதிமுக, பாஜக மூன்றும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அதில், ரங்கசாமி உள்பட 7 பேரும் அதிமுகவினர் 4 பேரும் வெற்றிபெற்றனர். ஆனால் பாஜகவில் மாநிலத் தலைவர் சாமிநாதன்கூட டெபாசிட் பெறவில்லை. ஒரே இடத்தில்தான் டெபாசிட் வாங்கமுடிந்தது. எல்லா இடங்களிலும் தோல்வி. அந்தக் கட்சி இன்றைக்கு புதுவை அதிமுகவை மிரட்டி சீட்டைக் குறைத்திருப்பது பொதுப்படையாக புதுச்சேரி மக்களிடம் கசப்பை உண்டாக்கியிருக்கிறது. இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.” என்றார் பிரபு.

**- வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *