மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

தேர்தல் கருத்துக் கணிப்புகள்: எழுப்பப்படும் கேள்வியும் ஏற்பட வேண்டிய புரிதலும்!

தேர்தல் கருத்துக் கணிப்புகள்: எழுப்பப்படும் கேள்வியும் ஏற்பட வேண்டிய புரிதலும்!

அ.குமரேசன்

“தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை,” என்று சொன்னபோது ஊடகவியலாளரான நண்பர் வியப்படைந்தார். நடைபெற உள்ள தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகளைப் பல ஊடக நிறுவனங்களும், ஆய்வு அமைப்புகளும் தனியாகவோ கூட்டாகவோ மேற்கொண்டு வெளியிடவே செய்கின்றன. அண்மையில் அந்த நண்பர் பணியாற்றும் நிறுவனமும் அப்படியோர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்தக் கணிப்பு பற்றி எனது கருத்தைக் கேட்டபோதுதான் இவ்வாறு சொன்னேன்.

“ஏன் உங்களுக்கு உடன்பாடில்லை,” என்று கேட்டார் நண்பர். “கணிப்பு அறிவியல்பூர்வமற்றது என்று கருதுகிறீர்களா? தனிப்பட்ட அரசியல் சார்பிலிருந்து போலியான கணிப்பு வெளியிடுவதாகக் நினைக்கிறீர்களா? பணம் பெற்றுக்கொண்டு பொய்யான கருத்தைப் பரப்புவதாக எண்ணுகிறீர்களா? உங்களுக்கே நன்றாகத் தெரியும், இந்த மூன்று விமர்சனங்களும் எங்களுக்குப் பொருந்தாது. சிறந்த வல்லுநர்கள் கொண்ட நடுநிலையான குழு, நிர்வாகத் தலையீடு இல்லாமல் ஆய்வை நடத்துகிறது. உலக அளவில் முன்னணியில் உள்ள ஆய்வு அமைப்புகளுக்கு நிகராக எங்களுடைய கணிப்புகள் அறிவியல்பூர்வமாக இருப்பதை அரசியல் கருத்தாளர்கள் பலரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சென்ற முறை எங்களுடைய கணிப்பில் இன்றைய ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்றுதான் கூறியிருந்தோம்…”

உடனிருந்த மற்றொரு நண்பர் குறுக்கிட்டார்: ”பல கணிப்புகளில் கடைசியாக, திடீர் நிகழ்வுகள் காரணமாக முடிவுகள் மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அவர்களுக்கே முழு நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்? பல நேரங்களில் நிஜமான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வேறு மாதிரியாக வருகிறபோது யாரும் இன்ன காரணத்தால் எங்களுடைய கணிப்பு தவறாகிவிட்டது என்று விளக்கம் அளிப்பதில்லையே?”

ஆதரவும் எதிர்ப்பும்

தேர்தல் வருகிறபோதெல்லாம் மற்ற பரபரப்புகளோடு மற்றுமொரு பரபரப்பாகக் கருத்துக் கணிப்புகள் (ஒபினியன் போல்) வருகின்றன. வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வருகிறவர்களிடம் நடத்தப்படுகிற வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்சிட் போல்) வருகின்றன.

இத்தகைய கணிப்புகளை ஆதரித்தும் எதிர்த்தும் தெரிவிக்கப்படுகிற கருத்துகளும் அவ்வப்போது வெளியாகின்றன. ஆய்வு நிறுவனங்களும் ஊடக அமைப்புகளும் இவ்வாறு கணிப்புகளை மேற்கொள்வது அவர்களுடைய சுதந்திரம், அதை அறிவது மக்களின் உரிமை என்ற கோணத்தில் ஆதரவுக் கருத்துகள் வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட கணிப்பு வெளியீடுகளால், கட்சிகள் தங்களுடைய பலவீனங்களை அறியவும் மாற்று அணுகுமுறைகளை வகுக்கவும் முடிகிறது. அதன் நீண்டகாலத் தாக்கத்தில் மக்கள் பயனடைவார்கள் என்ற கண்ணோட்டத்திலும் வரவேற்கப்படுகிறது.

எதிர்ப்பவர்களைப் பொறுத்தமட்டில், கோடிக்கணக்கான வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்கிற நிலையில், சில ஆயிரம் பேர்களிடம் நடத்தப்படுகிற கணிப்புகள் அறிவியல்பூர்வமானதாக இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். கருத்துக் கேட்கப்படுகிறவர்களில் பெரும்பாலோர் மனந்திறந்து தங்களுடைய ஆதரவு யாருக்கு என்று சொல்வதில்லை, அதை ரகசியமாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள், தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்திக்கொள்வது பாதுகாப்பானதல்ல என்ற தயக்கமும் அவர்களுக்கு இருக்கிறது, ஆகவே கணிப்பு முடிவுகள் துல்லியமாக மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவை அல்ல, கணிசமான மக்களின் எண்ணத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் கணிப்புகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். அந்த நண்பர் கேட்டது போல, பல நிறுவனங்கள் தங்களுடைய கணிப்புகள் தவறு என்று உண்மையான முடிவுகள் காட்டுகிறபோது, அதற்கு விளக்கமளிப்பதுமில்லை. அடுத்த தேர்தலில் அடுத்த கணிப்பு வராமல் இருப்பதில்லை.

தேர்தல் விவாதங்களில், எந்தக் கட்சி அல்லது அணி வெற்றி பெறும், எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று நெறியாளர்கள் கேட்கிறபோது, “சோதிடம் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்வதற்கு மாறாக, எந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று சொல்லவே விரும்புகிறேன்” என்று நான் பதிலளித்திருக்கிறேன்.

தடை தேவையா?

அப்படியானால் கணிப்புகளை வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டுமா? கருத்து வெளிப்பாட்டை முடக்குகிற எந்த நடவடிக்கையும் ஏற்கத்தக்கதல்ல. அதிலும், அரசுகளின் திட்டங்களிலோ, ஊடகங்களின் விவாதங்களிலோ மக்களின் கருத்து கேட்கப்படுவதில்லை என்கிற நிகழ் நடப்பில், மக்கள் தங்கள் கருத்தை வாக்குப் பதிவு எந்திரப் பொத்தானில் மட்டுமே வெளிப்படுத்த முடிகிற சூழலில், இதிலேயாவது அவர்களது கருத்துகள் கேட்கப்பட்டு வெளியிடப்படுவதை தடையாணைகளால் தடுத்துவிடக்கூடாது.

ஆனால், நிறுவனங்கள் தாங்களாகவே இது குறித்து ஒரு சுய ஆய்வை நடத்திக்கொள்ள வேண்டும். இது ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததுதானா என்ற கோணத்தில் அந்த சுய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் பற்றியும் அவ்வப்போது மக்களிடம் கருத்துக் கேட்கலாம், கேட்கப்பட வேண்டும். ஆனால், தேர்தல் நேரத்தில், ஆழ்ந்த சிந்தனைக்கான வெளியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இந்தத் தேர்தலில் முக்கியமான பிரச்சினை என்னவென்று கருதுகிறீர்கள் என்றும் கேட்கலாம். ஆனால், “யாருக்கு உங்கள் ஆதரவு” என்று விசாரிக்கிற கணிப்புகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2015ல், வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும் பிந்தைய கணிப்புகளையும் வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையமே தடை விதிக்கலாம் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. ஆயினும், பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் நிலையில், கடைசிக் கட்ட வாக்குப்பதிவுகள் முடியும் வரையில் எக்சிட் போல் முடிவுகளை வெளியிடுவதற்கு மட்டும்தான் தடைவிதிக்கப்பட்டது. ஒபினியன் போல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்படவில்லை. அதற்கு முன், அந்த முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது, ஆனால் அந்தத் தடையை மீறி முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர், சட்டப்பூர்வ அதிகாரம் வகுக்கப்படாத நிலையில், நிர்வாக அடிப்படையில் பிறப்பிப்பது குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்குக் கீழே வருவதாலும், நாடாளுமன்றம்தான் உரிய அதிகாரத்தை வகுத்துத் தர வேண்டும் என்பதாலும் வாக்குப் பதிவுக்கு முந்தைய கணிப்புகளுக்குத் தடை விதிக்க இயலாது என்று அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறினார்.

சிறிய கட்சிகளுக்கு நிலையான சின்னம் ஒதுக்குவதற்கான விதியை உருவாக்குவது, தேர்தலை மேலும் மேலும் சமதள வாய்ப்புள்ள ஜனநாயகத் தன்மையோடு நடத்துவதற்கான சீர்திருத்தங்களைச் செய்வது உள்பட நாடாளுமன்றம் அக்கறை கொள்ள வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. அதில் இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குத் தடைவிதிக்கும் அதிகாரத்தை வழங்குவது பற்றி நாடாளுமன்றம் அவசர அக்கறை செலுத்தத்தான் வேண்டுமா? ஆணையத்தின் அதிகாரம், கணிப்பு நிறுவனங்களின் சுய ஒழுங்கு, கணிப்புகளை வெளியிடுவதற்கான கால வரையறை போன்றவற்றைக் கடந்து, வாக்குப் பதிவுக்கு முந்தைய கணிப்புகள் ஏன் ஏற்கத்தக்கதல்ல என இதில் பேசப்பட வேண்டிய முக்கியமான நிலைப்பாடுகள் உள்ளன.

ரகசியத்திற்கு உரிமை

முதலில், ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒரு ரகசிய ஏற்பாடுதான். நம்பிக்கைக்குரிய, அந்தரங்க ஈடுபாட்டுக்கு வழி செய்யும் ரகசிய வாக்கெடுப்புதான் நடத்தப்படுகிறது. அதாவது, வாக்காளர், தான் வாக்களிக்கப் போவது யாருக்கு என்றோ, வாக்களித்தது யாருக்கு என்றோ யாரிடமும் சொல்லத் தேவையில்லை. வாக்குரிமை மட்டுமல்லாமல், வாக்களிப்பு ரகசிய உரிமையும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில் அதிகமாகக் பெறுகிற வேட்பாளர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுகிறார். குறிப்பிட்ட கட்சிகளின் உறுப்பினர்களாக, தீவிர ஆதரவாளர்களாகப் பலர் இருப்பார்கள். அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதிலே கூட, அப்படியொரு வாக்காளர், தான் உறுப்பினராக உள்ள கட்சி சொல்கிற வேட்பாளருக்குத்தான் வாக்களித்தாரா என்று அறிய முடியாது. நியாயமான ஆதங்கத்தாலோ, சுயநல ஆதாயத்திற்காகவோ எதிர் வேட்பாளரின் சின்னத்திற்கு நேராகப் பொத்தானை அழுத்துகிறவர்கள் இருக்கக்கூடும்தானே?

சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் முதல் கட்சி உறுப்பினர்கள் வரையில் யாருக்கும் சொல்லத் தேவையில்லாத அந்த ரகசியத்தை எதற்காகக் கருத்துக் கணிப்புக்கான கேள்வித் தாளோடு வருகிறவர்களுக்குச் சொல்ல வேண்டும்? கருத்துக் கணிப்பு என்ற பெயரில், யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கேட்பதே இந்த ரகசியக் காப்பு உரிமைக்கு எதிரானது.

இரண்டாவதாக, ஒரு முன்னணி நிறுவனம் வெளியிடுகிற கணிப்பு முடிவுகள் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானதாக, முற்றிலும் நேர்மையானதாக இருக்கலாம். அந்த முடிவுகள் பரபரப்பான செய்திகளாக வெளியிடப்படுகிறபோது என்ன விளைவு ஏற்படும்? வெற்றி பெறப்போகும் அணி இதுதான், அல்லது கட்சி இதுதான், அவர்களுக்கு இத்தனை இடங்கள் கிடைக்கும் என்று துல்லியமான கணிப்பே வெளியிடப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த அணி அல்லது கட்சியின் களப் பணியாளர்கள் ஒரு வித வெற்றி மிதப்பில் தள்ளப்படக்கூடும்.

மூன்றாவதாக, தோல்வியடையும் என்று கணிக்கப்படுகிற அணி அல்லது கட்சியின் தொண்டர்கள், எவ்வளவு உழைத்தும் பயனில்லை போலிருக்கிறதே என்று சோர்வடையக்கூடும். கருத்துக் கணிப்பு முடிவுகள் எதிர்மறையாக வந்திருப்பதால் வெற்றியைக் கைப்பற்ற, வன்முறைகள், தில்லுமுல்லுகள் உள்ளிட்ட குறுக்கு வழிகளைக் கையாள மேல்மட்டத்தினர் தூண்டிவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

நான்காவதாக, மிக முக்கியமானதாக, வாக்காளர்களில் ஒரு பகுதியினரை அரசியல் முதிர்ச்சியோடு முடிவெடுக்காமல், எந்தக் கட்சி அல்லது அணி வெற்றிபெறுமோ அதற்கே நம்முடைய ஓட்டைப் போட்டுவிட்டுப் போவோம் என்று “புத்திசாலித்தனமாக” முடிவெடுக்க வைக்கும். இது ஜனநாயக மதிப்புக்குக் கேடு.

ஆக, தேர்தல் கருத்துக் கணிப்பு அதன் வழிமுறைகளில் அறிவியல்பூர்வமானதுதானா என்பதல்ல எழுப்ப வேண்டிய கேள்வி. அது ஜனநாயகத்தில் ஆரோக்கியமானதல்ல என்பதே ஏற்பட வேண்டிய புரிதல்.

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 27 மா 2021