மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

புதுவையில் தேர்தலை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது?

புதுவையில் தேர்தலை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது?

புதுச்சேரியில் தேர்தலை ஏன் ஒத்திவைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் தொடர்ந்த வழக்கில், "வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலன் விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 'இதுபோன்று மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கு முன்னரே உரிய அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி ஒருவர் அனுமதி இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்புகிறார். இது தொடர்பாகப் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில், “மனுதாரர் அளித்த புகார் மீது சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. பல்க் எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் எங்களிடம் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் எஸ்எம்எஸ் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு மார்ச் 7ஆம் தேதி பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை பாஜக தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

இதுபோன்று மார்ச் 8ஆம் தேதி விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் சொல்வது போல எந்த விண்ணப்பமும் நாங்கள் பெறவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார். அதுபோன்று முழுமையான விசாரணை நடத்தாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரையில் புதுச்சேரியில் ஏன் தேர்தலைத் தள்ளி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தேர்தல் ஆணையம் தரப்பின் விசாரணை நேர்மையாகச் சென்றுகொண்டிருக்கிறது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தேர்தலைத் தள்ளி வைக்கும் பேச்சு தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வெள்ளி 26 மா 2021