மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

தபால் வாக்குகள்: சிசிடிவியுள்ள அறையில் பாதுகாக்க உத்தரவு!

தபால் வாக்குகள்: சிசிடிவியுள்ள அறையில் பாதுகாக்க உத்தரவு!

தபால் வாக்குகளை சிசிடிவி பொருத்திய அறையில் வைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது .இந்நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாகத் தபால் வாக்கு பெறும்பணி நடந்து வருகிறது.

இதனிடையே நீதிமன்றம் உத்தரவிட்டும் தபால் வாக்காளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று கூறி திமுக சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்படி இவ்வழக்கு இன்று (மார்ச் 26) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பெரும்பாலான இடங்களில் தபால் வாக்காளர்களின் பட்டியலை வழங்காமல் வாக்குகள் பெற்று வருவதாகவும் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.

இதற்குத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், மனுதாரர் கோரிக்கையைப் பரிசீலித்ததாகவும், பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே தபால் வாக்குகளைப் பெறத் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தபால் வாக்குகள் பெறும்போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விளக்கமளித்த அவர், தற்போதைய நிலையில் இதுபோன்ற புதிய நடைமுறையை மேற்கொள்ள முடியாது. ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தபால் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில் அவற்றைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 26 மா 2021