மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

லேடி கேப்டன் பிடிவாதம்: திணறும் தேமுதிகவினர்!

லேடி கேப்டன்  பிடிவாதம்: திணறும் தேமுதிகவினர்!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பிடிவாதம் செய்வதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

தான் போட்டியிடும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் முழு கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் பிரேமலதா. சுதீஷுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவரது அக்கா என்ற முறையில் பிரேமலதாவுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர். அதற்கு மறுத்துள்ளார் பிரேமலதா. அதிகாரிகளின் கட்டாயத்தால் டெஸ்ட் கொடுத்தவர் தனிமைப் படுத்திக்கொள்ளாமல் நேரடியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இந்தத் தகவல்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரை எட்ட அவர் கடலூர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இதையடுத்து ரிசல்ட் வரும் வரையில் தனிமையில் இருக்கவேண்டும் என பிரேமலதாவிடம் சொல்லியிருக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். ஆனால் பிரேமலதா பிரச்சாரத்திலிருந்து வெளியேறாமல் பிடிவாதம் செய்தபோதும் அதிகாரிகளின் தொடர் வற்புறுத்தலால்...24ஆம் தேதி அவரது அறைக்குச் சென்றார். நேற்று 25ஆம் தேதி, காலையில் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்ததும் மீண்டும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.

அதிகாரிகளிடம் இப்படி ஒரு பிடிவாதம் என்றால் கூட்டணிக் கட்சியினரிடம் வேறு மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார் பிரேமலதா. அதிமுக தலைமையிடம் கேட்டது கிடைக்காததால் கூட்டணியிலிருந்து விலகி அமமுகவுடன் கைகோர்த்துள்ளது தேமுதிக. ‘எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்’என்று பிரேமலதா வெளிப்படையாக அறிவித்தபோதும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்குப் பிரச்சாரத்துக்கு செல்லாமல் தவிர்த்துவருகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.

இதற்குக் காரணம் பிரேமலதாவின் உத்தரவுதான் என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகளே.

“தேமுதிக, கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பாமக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு 2006 தேர்தலில் வெற்றிபெற்றார். 15 வருடங்களுக்குப் பிறகு தேமுதிக பொருளாளர் பிரேமலதா அமமுகவுடன் கூட்டணி அமைத்து அதே விருத்தாசலத்தில் போட்டியிடுகிறார். ’கேப்டனை வெற்றிபெறவைத்த தொகுதியில் இந்த லேடி கேப்டன் போட்டியிடுகிறேன். என்னையும் வெற்றிபெறவைப்பார்கள்’ என்றெல்லாம் சொன்னார் பிரேமலதா.

பிரேமலதாவுக்கு லோக்கல் கட்சியினர் முன்புபோல சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால், தன் கட்சியின் 76 மாவட்டச் செயலாளர்களில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் சார்ந்த மாவட்டச் செயலாளர்களைத் தவிர மற்ற மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் அனைவரும் விருத்தாசலம் தொகுதிக்கு வரவேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார். இதையடுத்து வந்தவர்கள் தங்குவதற்கு வசதி இல்லாமலும் பொருளாதார நெருக்கடியாலும் பலர் ஊர் திரும்பி விட்டனர். அரசியலில் நெளிவு சுளிவு பழகாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிரேமலதா பிடிவாதமாக இருப்பதால் அமமுக கூட்டணியிலும் சிக்கலாக இருக்கிறது” என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகளே.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 26 மா 2021