மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

திமுக எந்த மதத்திற்கும் எதிரானதல்ல: ஸ்டாலின்

திமுக எந்த மதத்திற்கும் எதிரானதல்ல: ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்  மேற்கொண்டு வருகின்றார்.

சேலம், திருவண்ணாமலை,  விழுப்புரம் என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கில்  கூடியிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், கழகத்தின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, பிரச்சாரத்துக்காகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அனைத்து  தொகுதிகளிலிருந்தும் மக்கள் இன்று (மார்ச் 26) திரண்டு வந்து பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்

மக்கள் வெள்ளத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ நேருவைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. அவரிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும், அதில் முத்திரை பதிக்கும் வகையில் செய்துவிடுவார். கடந்த 7 ஆம் தேதி, திருச்சியில், ’ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்’ என்ற  நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். ஆனால் அவர் மாபெரும் பொதுக்கூட்டத்தையே நடத்திக் காட்டிவிட்டார்.  அமைச்சர் பதவியாக இருந்தாலும், கட்சி பணியாக இருந்தாலும்   சிறப்பாக செய்பவர் நேரு. நேருக்கு நிகர் நேருதான். அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து  வெற்றி வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும்.

முசிறி தொகுதி வேட்பாளர் தியாகராஜன், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  லால்குடி  தொகுதி வேட்பாளர் சௌந்திரபாண்டியன், துறையூர் வேட்பாளர் ஸ்டாலின் குமார்,  திருவரங்கம் வேட்பாளர், எம். பழனியாண்டி,  திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ்,  மண்ணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன், மணப்பாறை வேட்பாளர் அப்துல் சமது  ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க  வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையில் இருப்பவர்கள் நாங்கள். எந்த மதத்திற்கும் திமுக எதிரானதல்ல . அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாப்பதே திமுகவின் கடமை  என்பதை வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளோம்.

ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்று பிரதமர் சொன்னார்?. ஆனால்  யாருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்ததா? கருப்புப்பணத்தை மீட்டு அனைத்து குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார். ஆனால்  15 ரூபாய் கூட கொடுக்க வில்லை.

செல்போன் கொடுப்போம், பால் லிட்டர் ரூ.25க்கு கொடுப்போம் என்று அதிமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும்  செய்யவில்லை.  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார்.   அவருடைய பதவியை பறிக்கும் வகையில் சசிகலா ஈடுபட்டார். அப்போது 40 நிமிடம் தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ்.  இதன்பின் சசிகலா சிறைக்கு சென்றதும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமரவைத்தார்கள். அந்த பதவியை தினகரன் பறிக்க முயன்றார். இதையடுத்து இந்த விவகாரத்தில் மோடியே தலையிட்டு சமாதானம் செய்தார்.  

சமீபத்தில் சசிகலா விடுதலையானார். அவரை சமாதானம் செய்ய பாஜக முயன்றது.  ஆனால் அது நடக்கவில்லை.  இந்நிலையில், சமீபத்தில் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், சசிகலாவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்றுகொள்ள மறுக்கிறார் என்று கூறினார் ஓபிஎஸ். இதை எல்லாம் பார்க்கும் போது, இன்றும் அந்த கட்சியில் கோஷ்டி சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. மக்களைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் தான் அதிமுக ஆட்சி உள்ளது” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து  திமுவிகவின் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார் முக ஸ்டாலின்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 26 மா 2021