மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

”மம்தாவுக்கு பெர்முடாஸ்... சரிதான்” - மீண்டும் சர்ச்சையில் பாஜக தலைவர்!

”மம்தாவுக்கு பெர்முடாஸ்... சரிதான்” - மீண்டும் சர்ச்சையில் பாஜக தலைவர்!

மேற்குவங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும்நிலையில், அங்கு பிரச்சாரம் உண்மையிலேயே ஆவிபறக்கிறது எனலாம்.

மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கடந்த செவ்வாயன்று புருலியா மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசியது, கடுமையான எதிர்ப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

அங்கு மம்தாவின் கால்கட்டைப் பற்றிக் குறிப்பிட்டவர், “அவருக்கு(மம்தாவுக்கு) இப்போது பிளாஸ்டரை நீக்கிவிட்டார்கள். வீக்கத்துக்கான பேண்டேஜைத்தான் சுற்றியிருக்கிறார்கள். அவருடைய ஒரு காலை சேலையால் மறைந்துக்கொண்டும், இன்னொரு காலைக் காட்டியபடியும் இருக்கிறார். இப்படி ஒருவர் புடவையைக் கட்டி நான் பார்த்ததே இல்லை. அவர் தன் காலைக் காட்ட விரும்பினால் புடவை கட்டவேண்டியதில்லை. அதற்குப் பதிலாக பெர்முடாஸ் கால்சட்டையை அணிந்துகொள்ளலாம்.” எனக் கூறியது, கொஞ்சமல்ல, அதிகமோ அதிகம்தான்!

பாஜக வெற்றிபெற்றால் மேற்குவங்க முதலமைச்சராக முன்னிறுத்தப்படும் ஒருவர் இப்படிப் பேசியது, வங்க அரசியல் கட்சிகள் மத்தியில் முகம் சுளிக்கவைத்தது. சொந்தக் கட்சியில் உள்ளவர்களே குறிப்பாக பெண் தலைவர்களே பதில்சொல்ல முடியாமல் சங்கடத்தில் நெளியவேண்டியது ஆகிவிட்டது.

திலிப் கோசின் இந்தப் பேச்சை திரிணமூல் கட்சியின் பெண் தலைவர்கள் கடுமையாகச் சாடிவருகின்றனர். மக்களவையின் அதிரடிப் பேச்சாளரான மகுவா மொய்த்ரா, சற்று காட்டமாகவே விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டரில் இது பற்றிக் கருத்துக்கூறியுள்ள அவர், “ ... வக்கிரம்பிடித்த இந்த இழிவான குரங்குகள் மேற்குவங்கத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கின்றன.” என்று கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு தலைவரான காகோலி கோஷ் தஸ்திதர், “ மேற்குவங்க பாஜக தலைவரின் வேலை என்பது இப்போது விசத்தைக் கக்குவதாக மாறிவிட்டதுபோல.. முதலமைச்சர் மம்தாவைப் புண்படுத்தும் தாக்குதல், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீதான வன்முறை என அவர் வரம்புகளை மீறிப் போய்விட்டார். மீண்டும் அதிர்ச்சிதரத்தக்க வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.” என்று டுவிட்டரில் கருத்திட்டுள்ளார்.

பல தரப்பிலிருந்தும் திலிப்பின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கவே, அவர் இந்த விவகாரத்தில் எண்ணெய் ஊற்றும்படியாக இன்று விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

தான் மட்டுமல்ல மற்ற பல பெண்களும் மம்தா செய்வது சரி அல்ல என்றுதான் சொல்கிறார்கள் என தன் பேச்சை நியாயப்படுத்தியிருக்கிறார், திலிப்.

சமூக ஊடகங்களில் இதைப் பற்றி மக்கள் விவாதித்துக்கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார், திலிப் கோஷ்.

இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ” மம்தா பானர்ஜி நம்முடைய முதலமைச்சர், அவர் ஒரு பெண். வங்காளக் கலாச்சாரத்துக்கு ஏற்ற நாகரிகத்தை அவரிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சேலை கட்டிக்கொள்ளும் ஒரு பெண், தொடர்ச்சியாக தன்னுடைய கால்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்; இது நாகரிகமானதாக இல்லை. அது ஆட்சேபணைக்கு உரியது என்பதால், அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன்.” ..(அவ்வளவுதான் தொனியில்) என்று திலிப் கோஷ் தன் விளக்கமாகவும் கூறியிருக்கிறார்.

கடந்த 10ஆம் தேதியன்று நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது காயமடைந்த மம்தா, இரண்டு நாள்கள்கூட மருத்துவமனையில் இருக்காமல், பிரச்சாரத்தில் குதித்துவிட்டார்; அதைவிட முக்கியம், காயக்கட்டுடனேயே அவர் மாநிலம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டார்; பல இடங்களில் அவர் மேடையேறுவதற்காகவே சாய்வுதளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

காயம்பட்டது சர்ச்சைக்குரியதாகப் பேசப்பட்டதை அடுத்து, திரும்பத் திரும்ப காயக்கட்டுடன் அவரைப் பார்க்கும் வாக்காளர்களிளின் மனதில் தாக்கத்தை உண்டாக்கியதோ என்னவோ, பாஜக தரப்பில் இப்படியொரு கலாச்சார வகுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த சர்ச்சை இப்போதைக்கு முடியப்போவதில்லை என்பது மட்டும் நிஜம்!

- இளமுருகு

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வியாழன் 25 மா 2021